Header Ads



காஷ்மீர் சகோதரியின், மகத்தான சாதனை


ஒவ்வொரு வருடமும் லட்சக்கணக்கான இளைஞர்கள் யூபிஎஸ்சி தேர்வுகளுக்காக தயாராகின்றனர். தேர்வு முடிவுகள் வரும் அந்த நேரத்தில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் முடிவுகளை எதிர்பார்த்து பெரு மூச்சு விடுவார்கள்.

உலகின் மிக கடினமான நுழைவுத் தேர்வுகளில் ஒன்றான இந்த சிவில் சர்வீஸ் தேர்வில் வருடா வருடம் பாஸ் ஆகுபவர்கள் மிக குறைந்த அளவிலானவர்கள்.

இந்த வருடம் இத்தேர்வின் முடிவுகள் கடந்த ஏப்ரல் 5ஆம் தேதி வெளியானது. இந்த முடிவுக்கு பின் பல இளைஞர்களின் கதை பலருக்கு மோடிவேஷனலாக மாறியிருக்கும். அப்படி காஷ்மிர் மாநிலத்திலிருந்து யூபிஎஸ்சி தேர்வில் வெற்றிபெற்று ஐஏஎஸ் ஆகியிருக்கும் டாக்டர். ரெஹானா பஷீரின் வெற்றி பாதையை பற்றி பார்ப்போம்...

இந்தியாவின் சிறந்த நிர்வாக பொறுப்பான ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற்றிருக்கும் இவர், ஜம்மு காஷ்மீரிலுள்ள பூஞ்ச் மாவட்டத்தைச் சேர்ந்தவர். அந்த மாவட்டத்திலிருந்த வந்த முதல் ஐஏஎஸ் பெண்ணும் இவர்தான். இந்தியா முழுவதும் நடக்கும் இந்த தேர்வில் இவருடைய தரவரிசை என்ன தெரியுமா 187வது இடம் ஆகும்.

இவர் ஜம்முவில் மருத்துவம் பயின்றிருக்கும்போதுதான், மக்களுக்கு எதாவது பணி செய்ய வேண்டும். அதற்கு ஏற்ற அரசாங்க உத்யோகத்தில் இருக்க வேண்டும் என்று எண்ணி யூபிஎஸ்சி தேர்வுக்கு தன்னை தயார்படுத்த தொடங்கியிருக்கிறார். தொடக்கத்தில் சுற்றத்தார்கள் ரெஹனாவின் இந்த முடிவிற்கு முட்டுக்கட்டைபோடும் விதமாகவே பேசியுள்ளனர். ஆனால், அவருடைய முயற்சிக்கு துணையாக அம்மாவும், அண்ணனும் இருந்துள்ளனர்.

இதற்காக கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் யூபிஎஸ்சி தேர்வை எழுதியுள்ளார். ஆனால், அந்த தேர்வில் தோல்வி அடைந்துள்ளார். இருந்தாலும் மனம் தளராமல் அடுத்த முறைக்காக தன்னை ஆயத்தப்படுத்த தொடங்கிவிட்டார். யூபிஎஸ்சி நுழைவுத் தேர்விற்காக தயாரகும் சமயத்திலேயே காஷ்மீர் மாநிலத்தின் அரசு பணி தேர்விற்கும், மருத்துவ படிப்பிற்கான பிஜி (pg) நீட் நுழைவுத் தேர்விற்காகவும் இவர் தயாராகியிருக்கிறார்.

இந்த இரண்டு தேர்விலும் வெற்றியும் பெற்றுவிட்டார். மருத்துவம் பயின்று இருப்பதால் ஒழுங்காக பிஜி (pg)படிக்க நிறையபேர் இவருக்கு அறிவுரை சொல்லியிருக்கின்றனர். ஆனால், இவரோ இந்த இரண்டு வெற்றிகளையும் தள்ளி வைத்துவிட்டு யூபிஎஸ்சியில் வெற்றிபெற வேண்டும் உறுதி எடுத்துவிட்டார்.

ரெஹனாவின் அண்ணன் ஐஆர்எஸ் பதவியில் இருப்பதால், தன்னுடைய தங்கைக்கு உதவியாக யூபிஎஸ்சி தேர்வை எப்படி எதிர்கொள்வது என்று கற்றுக்கொடுத்திருக்கிறார். இந்த தேர்வில் இவர் வெற்றிபெற முழு பக்கபலமாக இவருடன் இருந்தது இவரது அம்மா என்று அனைத்து பேட்டிகளிலும் சொல்கிறார் ரெஹனா.

இதை படிப்பவர்கள் அவர்தான் மருத்துவம் பயின்றிருக்கிறாரே, அதை வைத்தே மக்களுக்கு நல்லது செய்யலாமே எதற்காக யூபிஎஸ்சி தேர்வு எழுதி மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என அவர் நினைக்கிறார் என்று கேட்கலாம். அதற்கும் அவரிடம் பதில் இருக்கிறது.

இப்போது நான் மருத்துவம் பார்த்தால் உடல்நலத்தை மட்டும்தான் சரிசெய்ய முடியும். ஆனால், இதுவே அரசாங்க பொறுப்பில் இருந்தால். மக்களுடைய அனைத்து பிரச்சனைகளையும் என்னால் சரி செய்ய முடியும். நான் கல்லூரியில் படிக்கும்போது படிப்பு படிப்பு என இருந்துவிட்டதால் எனக்கு உலகம் தெரியாமல் வளர்ந்துவிட்டேன். ஆனால், நான் எப்போது வேலை செய்ய தொடங்கினேனோ அப்போதிலிருந்துதான் சமூக பிரச்சனைகள் பக்கம் என் கண்கள் திரும்பியது.

உடல்நலத்தை காப்பாற்ற நல்ல குடிநீர், நல்ல சாலை வசதி, நல்ல உணவு, சுத்தம், சுகாதாரம் என அனைத்து பிரச்சனைகளையும் இதுபோன்ற வேலையில் நான் இருந்தால்தான் சரி செய்ய முடியும். இதை சரி செய்தாலே மக்களுக்கு அதிகமாக மருத்துவம் தேவைப்படாது என்று பக்குவமான பதிலை தருகிறார் ரெஹனா. 

“நான் காஷ்மீரை தாண்டி எந்த மாநிலமாக இருந்தாலும் வேலை செய்ய தயாரக இருக்கிறேன். நான் காஷ்மீருக்குள் மட்டும் என்று என்னை அடைத்துகொள்ள விரும்பவில்லை. நாட்டிற்காக சேவை செய்வதுதான் என்னுடைய முதல் விருப்பம்” என்று ரெஹனா கூறுகிறார்.

காஷ்மிரில் நடக்கும் பல குழப்பங்களால் அங்கிருக்கும் இளைஞர்கள் கல்வியை தாண்டி பல அரசியலையும் சமூக பிரச்சனைகளையும் பற்றி தெரிந்துகொள்கின்றனர். அதில் ஒரு சிலர் வேறு தவறான பாதைக்கு திரும்புகின்றனர். ரெஹனா போன்றவர்கள் சரியான பாதையை தேர்வு செய்து, நாட்டையும், சமூகத்தையும் மாற்ற முன்னேறுகின்றனர்.

source:  நக்கீரd;


2 comments:

Powered by Blogger.