Header Ads



மாட்டிக் கொண்ட ஜனாதிபதி, மீண்டும் இறங்கினால் பெரும் வீழ்ச்சி ஏற்படும் - அஜித்

பெரும்பான்மை இல்லாமல் அரசியல் புரட்சி செய்து மாட்டிக் கொண்ட ஜனாதிபதி மைத்திரி மீண்டும் அதே முயற்சியில் இறங்கினால் பெரும் வீழ்ச்சி ஏற்படும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதி அமைப்பாளரும், அமைச்சருமாகிய அஜித் பீ. பெரேரா எச்சரித்துள்ளார்.

கொழும்பு தனியார் வானொலிக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது பேசிய அவர்,

ஜனாதிபதித் தேர்தல் ஒன்றுக்கு முன்னர் அரசியலில் மீண்டும் ஒரு புரட்சியை ஏற்படுத்தப் போவதாக கூறப்படும் செய்தியில் உண்மை எதுவும் இல்லை. அவ்வாறு மீண்டும் நாட்டின் பொருளாதாரத்தை வீழ்ச்சியடையச் செய்ய விரும்பினால், ஜனாதிபதி அவ்வாறான ஒரு நடவடிக்கையில் ஈடுபடலாம்.

சட்ட ரீதியாக அனுமதிக்கப்பட்ட ஒரு முறைமையிலன்றி அரசியல் புரட்சியை ஏற்படுத்த முடியாது. பிரதமரை மாற்றுவதாயின் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மைப் பலம் வேண்டும். இதற்கு முன்னர் ஜனாதிபதி இதுபோன்ற ஒரு வேலையை செய்து மாட்டிக் கொண்டார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தரப்பில் இந்த அரசியல் புரட்சி தொடர்பில் எந்தவொரு நடவடிக்கையையும் மேற்கொள்வதில்லை. அரசியல் நடவடிக்கையை குழப்ப முயற்சிப்பவர்களே இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடலாம் என்றார்.

No comments

Powered by Blogger.