Header Ads



சிறையில் ஏற்படவிருந்த பாரிய அழிவு தடுக்கப்பட்டது - உடல்களில் சயனைட் விஷத்தை ஏற்றி கொல்ல திட்டம்

2 சயனைட் குப்பிகள் , மருந்து ஏற்றப்பட்ட ஊசிகள் இரண்டுடன் மெகசின் சிறைச்சாலையின் பீ பிரிவில் வைத்து நேற்று முன்தினம் (8) இரவு கைதுசெய்யப்பட்ட கைதியை வழிநடத்தியவர் டுபாய்க்கு தப்பிச் சென்றுள்ள பிரபல பாதாளக் குழுவின் தலைவராகக் கருதப்படும் அஞ்சு எனப்படும் சிங்கராகே அமல் சில்வா என தகவல் கிடைத்துள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

மெகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் பாதாளக்குழு ஒன்றின் தலைவர், அவரது சகாகக்கள் பலரையும் சிறைச்சாலை அதிகாரிகள் சிலரின் உடல்களில் சயனைட் விஷத்தை ஏற்றி கொலை ​செய்வதுடன், சிறைச்சாலையின் ஆயுதக் களஞ்சியத்தை உடைத்து, ஆயுதங்களுடன் சிறையிலிருந்து  தப்பிச் செல்வதற்கு பாதாளக்குழுவினர் சிலர் திட்டமிட்டுள்ளதாக சிறைச்சாலை பொலிஸ் புலனாய்வு பிரிவுக்கு கிடைத்துள்ள தகவல்களுக்கு அமைய, குறித்த பீ பிரிவை சோதனையிடும் போது, இந்த சயனைட் குப்பிகள், ஊசிகள் மீட்கப்பட்டுள்ளன.

சந்தேகநபர்கள் சிறைச்சாலைக்குள் வைத்து கொலை செய்வதற்கு திட்டமிடப்பட்டுள்ள கைதி பாதாளக்குழுவொன்றின் தலைவரும் பிரபல போதை வர்த்தகராகக் கருதப்படும் கொனாகோவிலே ரொஹா என அழைக்கப்படும் தேமுனி ஹெரல்ட் ரோஹனவும் அவரது சகாக்கள் சிலர் என்றும் சிறைச்சாலை, பொலிஸ் தகவல்கள் மூலம் அறியக் கிடைத்துள்ளது.

கொனாகோவிலே ரொஹா என்படும் நபர் குருநாகல், மாஸ்பொத பிரதேசத்திலுள்ள ஹோட்டல் ஒன்றில் வைத்து 2016ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 10ஆம் திகதி குருநாகல் பொலிஸ் தலைமையகத்தின் உப பொலிஸ் பரிசோதகரான தசநாயக்கவை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்டு மெகசின் சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள நபராவார்.

இதேவேளை கொனாகோவிலே ரொஹா, டுபாய்க்கு தப்பிச் சென்றுள்ள அஞ்சு எனப்படும் பாதாளக்குழு உறுப்பினருக்குடையில் நீண்ட காலமாக காண்படும் பகைமையால் குறித்த குழுவின் இரு தரப்பினருக்குமிடையில் இதுவரை 6 பேர் கொல்லப்பட்டுள்ளனரென்றும் பொலிஸ் அதிகாரி தெரிவித்தார்.

அஞ்சுவால் அவரது சகாக்கள் ஊடாக ரொஹாவை கொல்வதற்கு மேற்கொள்ளப்படும் முயற்சிகள் யாவும் இறுதி நேரத்தில் தோல்வியடைந்து விடுவதாகவும் அவ் அதிகாரி தெரிவித்துள்ளார்.

இதற்கமைய 2017ஆம் ஆண்டு மார்ச் மாதம் கல்கிஸ்ஸ நீதிமன்றதில் விசாரிக்கப்பட்ட வழக்கொன்றுக்காக  ரொஹா அழைத்துச் செல்லப்பட்ட போது, இவரைக் கொலை செய்வதற்கு இரண்டு துப்பாக்கிகளுடன் வந்த அஞ்சுவின் சகாவான லொக்கு மய்யா கைதுசெய்யப்பட்டார்.

அத்துடன் இலங்கை கிரிக்கெட் அணியின் வீரரான தனஞ்சய த சில்வாவின் தந்தையான மொரட்டுவ நகர சபையின் உறுப்பினரான ரஞ்சன் த சில்வா​ கடந்தாண்டு ஏப்ரல் மாதம் மொரட்டுவ பகுதியில் வைத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் உள்ளிட்ட பல கொலைகள், போதை வர்த்தகம் தொடர்பில் அஞ்சு தேடப்பட்டு வரும் நபர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பில் அந்த சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதியொருவரும் மற்றுமொரு கைதியும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

டென்னிஸ் பந்துவை துளையிட்டு, அதனுள் சயனைட் குப்பிகள் இரண்டும் வைக்கப்பட்டு, அந்தப் பந்தை சிறைச்சாலையின்  வெளிப்புறமாக இருந்து சிறைச்சாலைக்குள் வீசப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளதாகத் தெரிவித்துள்ள குறித்த பொலிஸ் அதிகாரி, பாரிய அழிவொன்று சிறைச்சாலை புலனாய்வு பிரிவினரால் தடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.