Header Ads



அமெரிக்கா - ஈரான் படைகளுக்கு பரஸ்பரம் பயங்கரவாத முத்திரை

ஈரானின் புரட்சிக் காவல் படையை பயங்கரவாத அமைப்பாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.

மற்றொரு நாட்டின் இராணுவத்தை அமெரிக்கா பயங்கரவாத இயக்கமாக அறிவிப்பது இதுவே முதல் முறையாகும்.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், மத்திய கிழக்கு பகுதியில் செயல்படும் அமெரிக்க இராணுவத்தை ஈரான் பயங்கரவாத அமைப்பாக அறிவித்துள்ளதாக அந்நாட்டின் அரச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

ஈரானின் சர்வதேச அணு ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா விலகுவதாக டிரம்ப் அறிவித்தது முதல் இவ்விரு நாடுகளுக்கிடையே பதற்றம் அதிகரித்துள்ளது.

ஈரானின் பாதுகாப்புப் படையையே பயங்கரவாத இயக்கமாக அறிவித்ததன் மூலம், அந்நாட்டின் மீது அமெரிக்காவால் மேலதிக தடைகளை விதிக்க முடியும். இதன் காரணமாக ஈரானின் தொழில்துறை பாதிப்புக்குள்ளாகும் சூழல் உருவாகியுள்ளது.

ஏற்கனவே, ஈரானின் புரட்சிக் காவல் படையும் அதோடு தொடர்புடைய மற்ற சில அமைப்புகளும் அணு ஆயுத பரவல், பயங்கரவாத ஆதரவு மற்றும் மனித உரிமை மீறல் தொடர்பான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக எழுந்த குற்றச்சாட்டின் காரணமாக அவற்றின் மீது அமெரிக்கா பல்வேறு தடைகளையும் விதித்துள்ளது.

ஈரான் படையுடன் தொடர்புபட்டால் பயங்கரவாதத்திற்கு அதரவளிப்பதாக இருக்கும் என்று டிரம்ப் வெளியிட்ட அறிவிப்பில் எச்சரிக்கப்பட்டுள்ளது.

“ஈரான் அரசாங்கம் பயங்கரவாதத்தை ஆதரிப்பது மட்டுமன்றி அதன் புரட்சிகர பாதுகாப்புப் படை பயங்கரவாத செயல்பாடுகளில் பங்கேற்பதுடன் அதற்கு நிதியுதவி அளித்து, அதை அரசாங்கத்தின் செயல்பாட்டு கருவியாக ஊக்குவிப்பதை அமெரிக்க அரசு உறுதி செய்கிறது” என்று இதுகுறித்த அறிவிப்பின்போது டிரம்ப் கூறினார்.

ஈரான் மீதான அழுத்தத்தை “கணிசமான அளவில் அதிகரிக்கும் வகையில்” இந்த முடிவை எடுத்துள்ளதாக அவர் மேலும் கூறினார்.

டிரம்பின் அறிவிப்பு இன்னும் ஒரு வாரகாலத்தில் நடைமுறைக்கு வருமென்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து அமெரிக்காவின் மத்திய கட்டளையகத்தை ஈரான் தேசிய பாதுகாப்பு கவுன்சில் பயங்கரவாத அமைப்பாக அறிவித்துள்ளது.

ஈரான் வெளியுறவு அமைச்சர் ஜவிட் சாரிப் ஜனாதிபதி ஹஸன் ரூஹானிக்கு எழுதிய கடிதத்தில் அமெரிக்காவுக்கு பதில் கொடுக்க கோரியதை அடுத்தே இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

உலக வரைபடத்தில் மத்திய பகுதியான, குறிப்பாக ஆப்கானிஸ்தான், ஈராக், ஈரான், பாகிஸ்தான் மற்றும் சிரியா அமைந்திருக்கும் பகுதிகளின் அமெரிக்காவின் பாதுப்பு நலனை கண்காணிப்பதாக அமெரிக்க மத்திய கட்டளையகம் உள்ளது.

2 comments:

  1. அங்கிட்டு போய் விளையாடுங்கப்பா...

    ReplyDelete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete

Powered by Blogger.