April 24, 2019

அவன் மட்டும்தான் அவளின் உலகம், இனி என்ன சொல்லி தேற்றுவேன்? குண்டு வெடிப்பால் கதறும் தந்தை

– சத்யா கோபாலன் –

இலங்கையில் எட்டு இடங்களில் நடந்த கொடூர குண்டு வெடிப்புத் தாக்குதலில் இதுவரை 359 பேர் இறந்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. இதில் இந்தியாவைச் சேர்ந்த ஐந்து பேர் உட்பட மொத்தம் 36 வெளிநாட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். இந்தத் தாக்குதலுக்கு ஐ.எஸ் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. குண்டு வெடிப்பு சம்பவம் நடந்து மூன்று நாள்கள் கடந்த நிலையிலும் இன்னும் அங்கு தொடர்ந்து பதற்றம் நீடித்து வருகிறது.

இலங்கை தேவாலயம்

ஒவ்வொரு நாளும் இலங்கையின் பல இடங்களில் வெடி பொருள்கள் கண்டுபிடிக்கப்படுவதால் அந்நாட்டு மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர். இரவு நேரங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு நாடு முழுவதும் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் இலங்கை முழுவதிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இலங்கை

இந்நிலையில் இலங்கையில் இறந்தவர்கள் தொடர்பாக தினமும் வெளிவரும் செய்திகள் மனதை உருக்கும் விதமாக உள்ளது. ஈஸ்டர் பண்டிகைக்காக சந்தோசமாக தங்களின் நாளை தொடங்கியவர்களின் வாழ்வு முடிந்துவிட்டது. இலங்கை சின்னமன் ஹோட்டலில் தங்கியிருந்த பல வெளிநாட்டவர்கள் இந்தக் குண்டுவெடிப்பு தாக்குதலுக்கு பலியாகியுள்ளனர். அவர்களில் கிரண் ஷஃபிர்ட்ஸ் டி சோய்சா (Kieran Shafritz de Zoysa) என்ற 11 வயதுச் சிறுவனும் உயிரிழந்துள்ளான்.

சின்னமன் கிராண்ட்
ஆறாம் கிரேடு (வகுப்பு) படிக்கும் அந்தச் சிறுவன் தன் கோடை விடுமுறையைச் சிறப்பாக கழிக்க தன் தாயுடன் இலங்கை சென்றுள்ளான். சம்பவத்தன்று காலை கொழும்புவில் உள்ள சின்னமன் கிராண்ட் ஹோட்டலில் உணவருந்த அவனும் அவனது தாயும் சென்ற போது அங்கு குண்டு வெடித்துள்ளது. இதில் சிறுவன் கிரண் மட்டும் உயிரிழந்துள்ளான் அவனது தாய் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கிரணின் தந்தை அலெக்ஸ்

சிறுவனின் இறப்பு குறித்த ஆதங்கத்தை அவனது தந்தை அலெக்ஸ் ஆரோ (Alex Arrow) ஆங்கில ஊடகத்துக்குத் தெரிவித்துள்ளார். அதில், “ கிரண் எங்களுக்கு ஒரே பிள்ளை. மிகவும் புத்திசாலி. தன் கோடை விடுமுறையை இன்பமாக கழிக்க அவன் இலங்கை சென்றான். இலங்கையிலிருந்து அவன் திரும்பி வந்திருந்தால் கிரண் ஏழாம் கிரேடு சென்றிருப்பான். அவனுக்கு தான் ஒரு நரம்பியல் நிபுணராக வேண்டும் என்பதுதான் ஆசை. அவன் யாரையும் நம்பி இருக்கமாட்டான். தன் சுய முயற்சியின் மூலமே அனைத்துச் செயல்களையும் செய்து முடிப்பான்.

கிரணுக்கு அனைத்து நாடுகளுக்கும் செல்ல வேண்டும் என ஆசை இதுவரை ஐந்து நாடுகளுக்குச் சென்றுவந்துள்ளான். அவனுக்கு சைனீஸ், சிங்களம், மண்டாரின் ( சீனாவில் பேசும் வேறும் ஒரு மொழி) ஆகிய மூன்று மொழிகள் தெரியும். கராத்தே கலையில் தேர்ந்தவர். அவனுக்கு கயாக்கும் (ஒரு வகை படகு சவாரி) தெரியும். அமெரிக்காவிலிருந்து கிளம்பிய பிறகு விமானத்தில் இருக்கும் போது கிரணும் அவனது தாயும் என்னிடம் போனில் பேசினர். அப்போது தான் இலங்கை சென்று மீண்டும் அமெரிக்கா வந்தவுடன் கயாக்கில் செல்ல வேண்டும் என கிரண் என்னிடம் கூறினான்.

கிரண்

கிரணின் தாய்க்கு அவனைத் தவிர வேறு எதுவுமே தெரியாது. அவன்தான் அவளின் உலகம். பிள்ளைக்காக தன் வாழ்வையும் அவள் அர்ப்பணித்திருந்தாள். அவனின் ஆசைகளை நிறைவேற்ற அவள் எதுவும் செய்ய தயாராக இருந்தால். இப்போது கிரண் இல்லை, என் மனைவிக்கு நான் எவ்வாறு தேற்றுவேன் எனத் தெரியவில்லை. தீவிரவாதிகள் தாங்கள் யாரை கொல்கிறோம் என அவர்களுக்குத் தெரியவில்லை. ஆனால் நாம் அதை தெரிந்துகொள்ள வேண்டும். தீவிரவாதிகள் மனதில் என்ன நினைத்துள்ளார்கள் எனத் தெரியவில்லை. ஆனால், அவர்கள் ஒரு நொடியில் என் மொத்த வாழ்வையும் என்னிடமிருந்து பறித்துவிட்டார்கள். தாங்கள் என்ன செய்கிறோம் எனத் தெரியாமலேயே அவர்கள் இது போன்ற காரியங்களில் ஈடுபட்டு வருகிறார்கள்” எனக் கூறி கதறி அழுதார்.

1 கருத்துரைகள்:

when hearing is breaking the heart

Post a Comment