April 09, 2019

கலைக்க முடியாத, கல்முனைக் கனவுகள்

 இலங்கையின் கிழக்கு மாகாணத்தின் அம்பாரை மாவட்டத்தில் உள்ள ஒரு கேந்திர ,பல்லின சமூகங்களின் ஒரு நகரே கல்முனையாகும், இந் நகர் தொடர்பாக அண்மைக்காலமாக இடம்பெற்றுவரும் சில அசைவுகளை அவதானத்தில் கொண்டு அதற்கான தெளிவிற்கான பதிவாகவே இது அமைகின்றது, 

#கல்முனை_என்றால்,

கடலுக்குள் முனைப்பாக நீட்டிக் கொண்டிருக்கும் நிலப்பகுதி முனை எனப்படும், இந்த வகையில் வங்களா விரிகுடா எனும்  பெருங்கடலுக்கும்   தனது   பெருந்தன்மையைக் காட்டி இயற்கை  அழகை வெளிப்படுத்தும் ஒரு அழகிய நகர், புதிய அர்த்தங்களின்படி " முனைப்பாக கற்க வலியுறுத்தும் ஒரு நகர் எனவும் கொள்ள முடியும், 

கிழக்கே வங்களா விரிகுடாவையும், மேற்கே வயல்வெளிகளையும், தெற்கே ஈழத்து இலக்கிய வித்தகர்  விபுலானந்தர் பிறந்த காரைதீவையும்  வடக்கே, ,மட்டக்களப்புத் துறைகளையும், எல்லைகளாக்க் கொண்ட பல்லின  மக்களும் வாழும் ஒரு சிறப்பு நகர்,

#இனஉறவு_பாரம்பரியம், 

கல்முனையின் சிறப்புக்களில் ஒன்று அதன் பல்லினமாகும், முஸ்லிம், இந்து, கிறிஸ்த்தவ, பௌத்த,  அனைத்து இன மக்களையும் ,மட்டுமல்ல அவற்றுக்கான வழிபாட்டுத்தலங்களையும், விழாக்களையும் நடாத்தும் ஒரு நீண்ட பாரம்பரியத்தைக் கொண்ட முதிர்ச்சி அடைந்த நகர், 

அரசியலில் எம்,எஸ் காரியப்பரையும், அஷ்ரபையும், இலக்கியத்தில் நீலாவாணனையும், மருத்துவத்தில் டாக்டர் முருகேசுப்பிள்ளையையும், தமிழறிவில் பேராசிரியர் நுஃமானையும், நிர்வாகத்தில், எஸ்,எச்.எம், ஜமீலையும்,  சர்வதேச ஆளுமையில் ஐ.நா, அஸீஸும்... என நீண்ட கல்வியிலாளர்களையும் இன எல்லைகளுக்கு  அப்பால் சேவை புரிந்த , பொது மனிதர்கள் இன்னும் நிறைந்து வாழும் மண், 

பொது மக்களின் இன உறவுப் பண்டிகைகளாக, பாண்டிருப்பு திரௌபதி அம்மன் தீப்பள்ளயம், கல்முனைக் கடற்கரைப்பள்ளி கொடியேற்றம், இருதயநாதர் பூசை, போன்ற பல நிகழ்வுகளில். இன, மதங்கடந்து மனிதர்கள் ஒன்று கூடும் திரு விழாக்களால் புகழ் பூத்த நகர்,

#விசேட_சிறப்புத்தன்மை, 

இலங்கை  பல்லின மக்களின் நாடு என நாம். கூறினாலும் ,அதன் மாதிரியைக் கல்முனையில்  அவதானிக்க முடியும்,  கல்முனையில் பெரும்பான்மையான மக்கள் முஸ்லிம்களாக இருப்பினும், ஏனையவர்களும் சம உரிமையுடன் வாழ வேண்டும் என்ற வகையிலான எண்ணம் நிறையப் பேரிடம் உண்டு, அதற்கான சிறந்த உதாரணமே, நாட்டில் பெரும்பான்மை ஆனாலும், கல்முனையில் நான்காவது சிறுபான்மைச் சமயத்தவர்களான பௌத்தர்களுக்காக ஒரு பன்சலயும், சிங்களப் பாடசாலையும் (1970)  , வியாபாரத்தலங்களும் வழங்கப்பட்டு  ஜனநாயகமாக நடத்தப்படுவதாகும், 

இது கல்முனை மக்கள் ஏனைய மக்களுடன் நடந்து கொள்ளும், புரிந்துணர்வினதும், நற்பண்பினதும், ஒரு அடையாளம் மட்டுமே, 

#பிரச்சினைகளும்_குறைபாடுகளும்

கல்முனை அதன் பெயரளவுக்கு ஏற்ப அபிவிருத்தியில் தன்னை வளர்த்துக்கொள்ள வில்லை, இதற்கான முழுப்பொறுப்பும், தமிழர், முஸ்லிம் அரசியல்வாதிகளையே சாரும், மட்டுமல்ல, சூறாவளி, இனப் போராட்டம், சுனாமி, போன்ற பல அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட இப்பிரதேசம், இழப்பிற்கேற்ப தன்னை மீள கட்டமைக்கவில்லை, அதற்கான அரசியல் மாற்றுத் திட்டங்களும், செயற்பாடுகளும் இப்பிரதேச அரசியல் வாதிகளிடம் இல்லாமையினால், இன முரண்பாடு, பிரிவினை ,அபிவிருத்திப் பட்டினி, வளங்கலில் சம்மின்மை என்ற பல சீரியசான  பிரச்சினைகள் கல்முனைக்குள்ளடங்கும் எல்லா ஊர்களுக்குமான பொதுவான பிரச்சினைகளாகும்,

ஆனாலும், விசேடமாக, தமிழர்  வாழும் பிரதேசங்களில் தமிழர்  அரசியல் வாதிகளின் உரிமை அரசியல் முன்னெடுப்பினால், அபிவிருத்திப் பற்றாக்குறையும், அதே போல்,முஸ்லிம் அரசியல்வாதிகளினால்  இஸ்லாமாபாத், நற்பிட்டிமுனை, போன்ற ஊர்கள்  ,வாக்கு குறைபாடு காரணமாக புறக்கணிக்கப்பட்டுள்ளன, ஆனால் இது நியாயமானதல்ல, 

 #அண்மைக்கால_பிரிவினை_வாதங்கள், 

கல்முனையின் வடக்கில் தமிழ் பிரதேச செயலக தரமுயர்த்தல், என்ற கோசமும், தெற்கில் சாய்ந்தமருது, பிரதேச சபை விவகாரமும், அண்மைக்காலமாக முன்னெழுந்து வரும் பிரிவினைக்கான கோசங்களாகும், இப் போராட்டங்களில் ஈடுபடுவோருக்கு அதில் நியாயத்தன்மை இருப்பினும், இவை இரண்டுமே கல்முனையின் செழுமையையும், சிறப்பையும் சீர்குலைக்கும் கோசங்களே, 

ஏனெனில், அபிவிருத்தியிலும், நிர்வாகத்திலும், பின்னடைவு என்பது இம் மாநகரத்தில் பொதுவான ஒன்று, அதற்கு ஊர்கள் பிரிந்து செல்வதோ,  நிர்வாகப் பிரிப்போ, தீர்வாக அமையாது, மட்டுமல்ல கல்முனை மாநகரம் என்பது ஒரு குறித்த இனத்திற்கு மட்டும் உரியதல்ல, அது பல்லின சிறப்புடைய மக்களின் நகர், குறித்த பிரிவினைவாதக் கோரிக்கைகள் " இன ரீதியான" கோரிக்கைகளாக மட்டுமே முன்வைக்கப்படுகின்றனவே தவிர ,அவற்றில் நியாயம் இருப்பதாக தெரியவில்லை, 

இன்னும், இவ்வாறான பிரிவினைகள் ஒரு சிறப்பான நகரின் முன்னேற்றத்திற்கான தடைகளாகவும் அமையும், மட்டுமல்ல இதன் பின்னணியில் அரசியல்வாதிகளும், அவர்களது அடிவருடிகளுமே நன்மை அடைவரே தவிர சாதாரண மக்கள் அல்ல, என்பதையும் போராட்டக்கார்ர்கள் புரிந்து கொள்ள வேண்டும்,

#ஆதிக்கவாதமா?#அரவணைப்பா? 

பிரிவினைவாதம் கோருவோர் முன்வைக்கும் குற்றச்சாட்டுக்களில் ஒன்றே, ஆதிக்கவாதம் என்பது, ஆனால் அது உண்மையல்ல மாறாக அது #அரவணைப்பு வாதமாகவே நோக்கப்பட வேண்டும் ,காரணம், கல்முனை  முஸ்லிம் அரசியலில்  ஏ.ஆர், மன்சூருக்கு முதல் ஆட்சியில் இருந்தவர்கள் அனைவருமே  சாய்ந்தமருதைச் சேர்ந்தவர்களே, அதேபோல் மறைந்த தலைவர் அஷ.ரஃப் அவர்களின் காலத்திலும்  அபிவிருத்தி எல்லா ஊர்களுக்குமானதாகவே மேற் கொள்ளப்பட்டது, 

அதுபோல், நிர்வாகத்திலும், தமிழ் உயர் அதிகாரிகளும், ஆளணியும் போதுமான அளவு பிரதேச செயலத்தில் உண்டு,  அந்த அரவணைப்புதான் கல்முனையின் விசாலத் தன்மை ஆகும், 

#என்ன_செய்யலாம்,?? 

 ஒரு மாநகரத்தின் கீழ் உள்ள ஊர்களும், ஒரு நிர்வாக த்தில் உள்ள காரியாலயங்களும், இன ரீதியான பிரிவினையையும், ஏனைய காரணிகளையும் முன்வைத்து ,தமது சுயநலன்களுக்காக மட்டும் பிரிந்து செல்வது ஏனைய ஊர்களுக்கும், பிரதேசங்களுக்கும், செய்யும் அநியாயமாகவே அமைவது மட்டுமல்ல, ஒரு முன்னுதாரணமான, பல சிறப்புக்களைக் கொண்ட நகரத்தின் எதிர்காலத்தைச் சீரழிப்பதாகவும் அமையும், 

எனவேதான் குறுகிய பிரதேசவாத, இன ரீதியான எல்லை களுக்கு அப்பால், மாநகரத்து மக்கள் என்ற அடிப்படையில் இந்நகரத்தைக் கட்டிக் காக்க வேண்டியதும், அதன் முன்னேற்றத்தில் அக்கறை கொள்வதுமே,இம் மண்ணில் பிறந்தவர்களின்   சிறந்த மனிதப் பண்பே தவிர, பிரிவினைவாதங்களல்ல,  

இதில் புத்திஜீவிகளின் பங்கு அதிகமாக பெறப்பட வேண்டும்,  எனவேதான், மாநகரத்தை காத்து, அதன் சிறப்புக்களையும்,்இன உறவையும்,  எமது எதிர்கால சந்த்தியினரும், அனுபவிக்க ஒன்றுபட்டுச் செயற்பட அனைவரும் முன்வர வேண்டியதே, கல்முனைத் தாய்க்கு இன்று நாம்  செய்யும் மிகப் பெரும் நன்றிக்கடனாகும்,  

இன்றேல் " #குட்டி_நண்டுகள்_தமது #பசிக்காக_தாய்_நண்டையே_சாப்பிட்டு #ஏப்பமிடுவதைப் போலவே இப் பிரிவினைக் கோசம்  அமையும் " 

முபிஸால் அபூபக்கர் 
Mufizal ABOOBUCKER.
Senior Lecturer
Department Of Philosophy
University of Peradeniya

2 கருத்துரைகள்:

கல்முனை விவகாரம் இன்று நேற்று தோன்றிய பிரச்சினைஅல்ல.
நீண்ட நாட்களாக அப்பிரதேச அரசியல்
தலைவர்களாலும் அதிகாரிகளாலும்
தோற்றுவிக்கப்பட்ட ஒன்று.இவர்களெல்லாம் அங்கு தங்களுக்கு ஏற்படுகின்ற தனிப்பட்ட
காரணங்கள்,அநுபவங்கள் ஆகியவற்றிற்கு இனவாத,மதவாத,
பிரதேசவாத சாயங்களை பூசிக்கொண்டு பிரிவினைக்கு வித்திட்டு அதைவளர்த்தெடுத்து இன்று
அது நாலாபக்கமும் வியாபித்துள்ள
நிலையில் கூப்பாடு போட்டு கொக்கரித்துக்கொண்டிருப்பதில் என்ன பயனை நாம் காணமுடியும்.சாதாரண மக்கள் இவைகளை கண்டு
கொள்வதே இல்லை.அவர்களுக்கு
யார் அங்கு அதிகாரத்தில் இருந்தாலும் எல்லோரையும்,எல்லா
பிரதேசங்களையும் சம கண்கொண்டு
பார்க்கக்கூடிய நிர்வகிக்கக்கூடிய நீதி
செலுத்தக்கூடிய அதிகாரிகளும்,அரசியல் தலைமைகளும் தான்தேவை .அவ்வாறான அதிகாரிகளையும் அரசியல்வாதிகளையும் மக்கள் இனம்
கண்டால் இன்று நடைபெறுகின்ற
பிரிவினைவாதம் இவ்வாறு தளைத்தோங்கி இருக்காது. ஆனால்
கல்முனை நிர்வாகமும் அரசியலும்
அதில் தோல்வி அடைந்துவிட்டது.
மூவின சமூகங்கள் வாழ்கின்ற இந்தப்
பிரதேசத்திலே குறிப்பாக தமிழ்,
முஸ்லீம் மக்களை கூடுதலாக கொண்ட
இப்பிரதேசத்தில் இன ரீதியான அரசியல் கட்சிகளை தோற்றுவித்து அவைகளை பிரதிநிதித்துவப்படுத்தி தங்கள் தங்கள்
இனத்துக்காக மட்டும் குரல் கொடுத்து
அவர்களின் வாக்குகளைப் பெற்று
அடுத்த தேர்தலிலும் வெற்றிவாகை
சூடவேண்டும் என கங்கணம் கட்டிக்
கொண்டு காய் நகர்த்தி செயல்படும் அரசியல் தலைமைகளால் கல்முனையை எவ்வாறு ஒன்றாக ஒற்றுமையாக நியாயமாக நீதியாக
ஆட்சி செய்யமுடியூம்?இவற்றுக்கெல்லாம் துணை போகின்ற
படித்தவர்கள் சமயக்குரவர்கள் சமூகசேவையாளர்கள் அதிகாரிகள்
உள்ளூர் தலைமைகள் ஏன் புத்திஜீவிகள்என்று நாம் கண்டவர்களும் இதே அரசியலையும்
இதே நிர்வாகிகளையும் ஆராதித்தால்
கல்முனை பிரிபடாமல் என்ன செய்யும்?
இது போதாது என்று இன்று சாய்ந்தமருதுவுக்கும் ஒரு தனியான
உள்ளூராட்சிசபை என்ற ஒரு கோரிக்கை வலுப்பெற்று விட்டது.
அதை அவர்களிடம் இருந்து அகற்ற
முடியாத அளவுக்கு அந்த பிரதேச வாதம் வளர்வதற்கும் இதே அரசியலும்
அதிகாரமும்தான் காரணம்.கல்முனையை ஆண்டவர்கள்
விட்ட தவறுகளும் ஓரவஞ்சனையான
செயற்பாடுகளும்தான் அந்த மக்களை
இன்நிலைக்கு தள்ளியுள்ளது என்பதில்
மாற்றுக்கருத்துக்கள் இருக்க முடியாது.
இருந்தும் கல்முனை மாநகரம் என்ற
ஒரு பாரிய பிரதேசம் வெறும் இன,மத
பிரதேசவாதங்களில் சிக்குண்டு சுக்கு
நூறாக உடைய எத்தனிப்பதை எம்போன்றவர்களால் ஏற்றுக்கொள்வோ ஜீரணிக்கவோ
முடிய வில்லை.இதில் மக்கள்தான்
சிந்திக்க வேண்டும்.காலம்தான் பதில்
சொல்ல வேண்டும்.
U.L.A.Hassen
Ex .Assit.Director of Planning
Divisional secretariat
Kalmunai

Post a Comment