Header Ads



அப்பாவி இஸ்லாமிய மக்களை நோக்கி, எமது பாதுகாப்பு கவச நடவடிக்கை நீளுகிறது - மனோ கணேசன்


இந்த நாட்டில் இன்று இனவாதத்துக்கு அரசாங்கத்தின் ஆசீர்வாதம் இல்லை என்பது நிம்மதியை தரும் உண்மையாகும் என அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

அமைச்சர்களின் விசேட சந்திப்பொன்று இடம்பெற்றிருந்தது. இதில் கலந்து கொண்டு பின் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவித்த போது அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும் கூறுகையில், கடந்த காலங்களில் தமிழ் மக்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட இனக்கலவரங்களின் போது, தமிழ் மக்கள் கொலை செய்யப்பட்டார்கள்.

தமிழர்களின் சொத்துகள் சூறையாடப்பட்டன. இவ்வேளைகளில் இனவாதிகளுக்கு இலங்கை அரசாங்கத்தின் நேரடி ஆசீர்வாதம் வழங்கப்பட்டு இருந்தது.

கடந்த காலத்தின் சில ஜனாதிபதிகள், பிரதமர்கள், அமைச்சர்கள் தமிழ் மக்கள் மீதான இத்தகைய தாக்குதல்களை அன்று தூண்டி விட்டார்கள். அல்லது நியாயப்படுத்தினார்கள். அல்லது கண்டும் காணாதது போல் இருந்தார்கள்.

ஆனால், இன்று நிலைமை முன்னேறியுள்ளது. இதை நாமே மாற்றியுள்ளோம். இன்று நாம் அரசாங்கத்துக்குள் உறுதியான நிலைப்பாடுகளை கொண்டுள்ளோம்.

இதனாலேயே, இனவாதத்துக்கு அரசாங்கத்தின் ஆசீர்வாதம் இல்லை என்ற உண்மை, இன்றைய துன்பம் நிறைந்த சவால் மிக்க சூழலில் ஒரு நம்பிக்கை தரும் ஒளிக்கீற்றாக தெரிகிறது.

துன்பத்தில் விழுந்து தவிக்கும், அப்பாவி கத்தோலிக்க சகோதரர்களை நோக்கி நாம் ஆறுதல், அன்பு, நிவாரணம் ஆகிய நடவடிக்கைகளை முன்னெடுக்கின்றோம்.

அதுபோல் நடந்து முடிந்த சம்பவங்களால், அச்சத்தில் வாழும் அப்பாவி இஸ்லாமிய மக்களை நோக்கி, இனவாதத்துக்கு அரசாங்கத்தின் ஆசீர்வாதம் இல்லை என்ற எமது பாதுகாப்பு கவச நடவடிக்கை நீளுகிறது.

அதேவேளை சர்வதேச பயங்கரவாதத்தை எமது தாய்நாட்டு மண்ணில் இருந்து துடைத்து எறிவதில் நாம் திட சங்கற்பம் பூண்டுளோம்.

இந்த மூன்று நடவடிக்கைகளையும் அரசாங்கத்தின் பொறுப்புள்ள அமைச்சர்கள் என்ற முறையில் நாம் கண்காணிக்கின்றோம் என தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.