Header Ads



திமுத் கருணாரத்னா ஏன், கெப்டனாக நியமிக்கப்பட்டார்...?

இலங்கை அணியில் ஒற்றுமையை கட்டியெழுப்புவதற்காகவே திமுத் கருணாரத்னவிடம் ஒருநாள் அணித்தலைமைப் பொறுப்பு வழங்கப்பட்டதாக இலங்கை அணித் தெரிவுக் குழுத் தலைவர் அசந்த டி மெல் குறிப்பிட்டுள்ளார்.

இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் நடைபெறவுள்ள உலகக் கிண்ணப் போட்டிக்கான 15 பேர் கொண்ட இலங்கை அணி (18) அறிவிக்கப்பட்டது. இதில் ஒருநாள் அணித் தலைவராக இருந்த லசித் மாலிங்கவுக்கு பதில் கடந்த நான்கு ஆண்டுகளில் ஒருநாள் போட்டிகளில் விளையாடாத திமுத் கருணாரத்னவுக்கு அணித் தலைமை வழங்கப்பட்டுள்ளது.

“உண்மையில் எம்மிடம் திறமை உள்ளது, ஆனால் அணியாக விளையாடாததே பிரச்சினையாகும். அதாவது ஒரு அணி, ஒரு நாடு என்ற வகையில் விளையாடுவதில்லை. திமுத்துக்கு தென்னாபிரிக்காவில் இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் அணியை ஒற்றுமைப் படுத்த முடியும் என்று காண்பித்தார்.

லசித்தின் அணித்தலைமை குறித்து எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை. பிரச்சினை என்னவென்றால் அவர் முன்னால் சென்றாலும் எஞ்சிய பத்துப் பேரும் பின்னால் இருக்கின்றனர். ஒன்றாகச் செல்வதில்லை. அங்கு தான் பெரிய பிரச்சினை உள்ளது.

ஒரு நாடாக விளையாடுவதே எமக்குத் தேவை. ஒற்றுமை தான் தேவை. லசித் மாலிங்கவின் தலைமை குறித்து என்னால் எந்த தவறும் கூறமுடியாது. ஆனால் அணியை அவரால் ஒன்றிணைக்க முடியாததே மிகப் பெரிய குறைபாடாக உள்ளது.

திமுத்துடன் வீரர்கள் ஒத்துழைப்புடன் உள்ளனர். அவருக்கு இதனைச் செய்ய முடியும் என்று நாம் நம்புகிறோம்” என்று அவர் குறிப்பிட்டார்.

இலங்கை கிரிக்கெட் தலைமையகத்தில் உலகக் கிண்ணத்திற்கான அணியை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பின்போதே அசந்த டி மெல் இவ்வாறு தெரிவித்தார்.

லசித் மாலிங்க இலங்கை ஒருநாள் தலைவராக 9 போட்டிகளில் அணியை வழிநடத்தியபோதும் ஒன்றில் கூட வெற்றி பெறவில்லை. மறுபுறம் கடைசியாக 2015 ஆம் ஆண்டு இலங்கை ஒருநாள் அணிக்காக விளையாடிய திமுத் கருணாரத்ன அண்மையில் தென்னாபிரிக்காவில் நடந்த டெஸ்ட் தொடரில் இலங்கை அணிக்கு தலைமை வகித்து அந்த தொடரை வெற்றி பெற்றார்.

இந்நிலையில் ஒரு அணியாக ஒத்துழைப்புடன் விளையாடுவதே அவசியமாக இருப்பதாக இந்த செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்ற இலங்கை ஒருநாள் அணியின் புதிய தலைவர் திமுத் கருணாரத்ன குறிப்பிட்டார்.

“தென்னாபிரிக்க சுற்றுப்பயணத்தில் எதிர்பார்க்காத நிலையிலேயே எனக்கு தலைமை பொறுப்பு கிடைத்தது. ஆனால் எனக்கு கிடைத்த சந்தர்ப்பத்தை ஏற்று மகிழ்ச்சியுடன் செயற்பட்டேன். எனக்கு தெரிந்த வகையில் செயற்படவே எதிர்பார்க்கிறேன்.

அதேபோன்று ஒருநாள் அணித்தலைமை பொறுப்பும் அந்த இடத்திற்கு நான் பொருத்தமானவன் என்று கருதியதாலேயே எனக்கு கிடைத்துள்ளது என்று நான் நினைக்கிறேன். நான் நன்றாக செயற்பட்டேன் என்பதாலேயே எனக்கு கிடைத்ததாக நான் நினைக்கிறேன். அவ்வாறு செயற்பட்டதை செய்வதற்கு எதிர்பார்க்கிறேன்.

அங்கு சென்று அங்குள்ள நிலைமையை பார்த்து, ஏனைய அணிகளின் திட்டங்களை அவதானித்தே திட்டங்களை தீட்டுவோம். ஒத்துழைப்புடன் செயற்படுவதே எனக்கு முதலில் தேவையாக உள்ளது. அணியாக உருவான பின்னர் போட்டிக்குப் போட்டி விளையாடுவதற்கு அது இலகுவாக இருக்கும். அணித் திட்டங்கள் எல்லாம் இங்கிலாந்துக்கு சென்ற பின்னர் தயாரிப்பதற்கே நாம் திட்டமிட்டிருக்கிறோம்” என்று விபரித்தார்.

அதிரடி மாற்றங்களுக்கு காரணம்

இலங்கை ஒருநாள் குழாத்தில் அதிரடி மாற்றங்களாக சகலதுறை வீரர்களான மிலிந்த சிறிவர்தன மற்றும் ஜீவன் மெண்டிஸ் நீண்ட காலத்திற்கு பின்னர் நேரடியாக உலகக் கிண்ண அணிக்கு அழைக்கப்பட்டுள்ளனர். மிலிந்த சிறிவர்தன 2017 ஆம் ஆண்டிலேயே கடைசியாக இலங்கை ஒருநாள் அணிக்கு விளையாடியதோடு ஜீவன் மெண்டிஸ் 2015 ஆம் ஆண்டிலேயே கடைசியாக ஒருநாள் அணிக்கு விளையாடி இருந்தார். அதேபோன்று துடுப்பாட்ட வீரர் லஹிரு திரிமான்னவும் ஒன்றரை ஆண்டுக்கு பின்னரே இலங்கை அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இவர்கள் இலங்கை குழாத்தில் இணைக்கப்பட்டது குறித்து விளக்கிய அசந்த டி மெல்,

“திரிமான்னவை ஒருநாள் போட்டிகளில் இருந்து ஒருசில காலத்திற்கு ஒதுக்கப்பட்டிருந்தது என்ன காரணத்திற்கு என்று எனக்குத் தெரியவில்லை. 2015 உலகக் கிண்ணப் போட்டியிலும் அவர் தான் 3ஆம் இலக்க துடுப்பாட்ட வீரர். மாகாண மட்ட தொடரிலும் ஆரம்ப துடுப்பாட்ட வீரராக அவருக்கு இருக்கும் அனுபவத்தை வெளிக்காட்டினார். ஒருபோட்டியில் 120 ஓட்டங்களும் மற்றைய போட்டியில் 85 ஓட்டங்களும் பெற்றார். ஆரம்ப துடுப்பாட்ட வீரர்கள் தொடர்பில் எமக்கு பெரிய பிரச்சினை ஒன்று இருந்தது. இதுவரை ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக வந்த (நிரோஷன்) திக்வெல்ல, தனுஷ்க குணதிலக்கவின் ஆட்டத் திறன் குறைந்திருந்தது. எனவே, ஆரம்ப துடுப்பாட்ட வீரர்கள் பற்றி எமக்கு பெரிய பிரச்சினை இருந்தது. அதனாலேயே எமக்கு அனுபவ ஆரம்ப துடுப்பாட்ட வீரர்கள் தேவை என்று நாம் நினைத்தோம்.

அதேபோன்று மிலிந்த சிறிவர்தனவும் ஆறாவது அல்லது ஏழாவது இலக்க வீரராக பந்து வீசக்கூடியவராக அணிக்கு சமநிலையை ஏற்படுத்துபவராக இருப்பார். இல்லாவிட்டால் அணியை சமநிலைப்படுத்த எம்மால் முடியாமல் போகும்.

அணியில் இரு ஓப் ஸ்பின் சுழல் பந்துவீச்சாளர்களை இணைக்க முடியாது அதனாலேயே இரண்டு லெக் ஸ்பின் பந்துவீச்சாளர்களாக ஜெப்ரி வென்டர்சே மற்றும் ஜீவன் மெண்டிஸை இணைத்துள்ளோம்” என்று விளக்கினார்.

உலகக் கிண்ண குழாத்தில் முன்னாள் அணித்தலைவர் தினேஷ் சந்திமால் சேர்க்கப்படாதது பற்றி தேர்வுக் குழுத் தலைவரிடம் கேட்கப்பட்டபோது, குசல் ஜனித் விக்கெட் காப்பாளராக செயற்படவிருப்பதாக குறிப்பிட்ட அசந்த டி மெல், வேறொருவரை மாற்று விக்கெட் காப்பாளராக அல்லது துடுப்பாட்ட வீரராக அணியில் இணைப்பதற்கு இடம் இல்லை என்று தெரிவித்தார்.

“மூன்றாவது இடத்தை எடுத்துக் கொண்டால் குசல் ஜனித் உள்ளார், நான்வாது இடத்தில் குசல் மெண்டிஸ், ஐந்தாவது இடத்தில் அஞ்சலோ மெத்திவ்ஸ், இரு ஆரம்ப துடுப்பாட்ட வீரர்கள் இருக்கிறார்கள். அப்படி என்றால் தினேஷ் சந்திமால் ஆறாவது இடத்தில் ஆட வேண்டும். அந்த இடத்தில் ஆடுவதென்றால் எமது முதல் ஐந்து வீரர்களுக்கும் பந்துவீச முடியாது என்பதுவே பிரச்சினையாகும். அப்படி என்றால் நாம் எப்படி அணியை சமநிலைப்படுத்துவது?” என்று அவர் கேள்வி எழுப்பினார்.

2 comments:

  1. இப்போதய சூழலில் சரியாகவே அணி தேர்வு உள்ளது.ஆனால் “தசுன் சானக ,ஒசாத பெர்னாண்டோ” இவர்கள் உள்வாங்கப்பட்டு,”அவிக்ஷ்க பெர்னாண்டோ ,நுவன் பிரதிப்” வெளியே அனுப்பப்பட்டிருந்தால் அணி இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.

    ReplyDelete
  2. Dimuthu is selected only to unite the team, so we are losing one batsman. How can we win??????

    ReplyDelete

Powered by Blogger.