Header Ads



பின்லாந்து கல்விமுறையில்,, அப்படி என்னதான் இருக்கிறது...?

உலக அளவில் ‘கல்வியின் மெக்கா’ என அழைக்கப்படுவது பின்லாந்து். அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள் பொருளாதாரத்தில் எவ்வளவு மேம்பட்ட நிலையில் இருந்தாலும், அனைத்து பிரச்னைகளையும் தீர்ப்பதற்கான டாலர் என்ற மந்திரித்த தாயத்து வைத்திருந்தாலும், அவர்களால் கல்வியில் பின்லாந்துடன் போட்டிபோட முடியவில்லை.

‘பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டுக்கான அமைப்பு’ (OCED- organisation for economic co-operation and development) என்பது வளர்ச்சியடைந்த நாடுகளின் கூட்டமைப்பு. இதன் சார்பில், தங்கள் நாட்டு மாணவர்களின் கல்வித் திறன் குறித்த ஆய்வு அவ்வப்போது நடைபெறும். இதற்கு PISA-Programme for international students assessment என்று பெயர்.

மற்ற நாடுகள் விருப்பப்பட்டால், இதில் சேர்ந்துகொள்ளலாம். இந்த ஆய்வில் உலகின் மற்ற நாடுகள் பின்வரிசையில் இருக்க... பின்லாந்து எப்போதும் முன்வரிசையிலேயே இடம் பிடிக்கிறது. அப்படி என்னதான் இருக்கிறது பின்லாந்து கல்விமுறையில்?

பின்லாந்தில் ஏழு வயதில்தான் ஒரு குழந்தை பள்ளிக்குச் செல்லத் தொடங்குகிறது. ஒன்றரை வயதில் ப்ளே சுகூல், இரண்டரை வயதில் ப்ரீ-கே .சி., மூன்று வயதில் எல்.கே.சி., நான்கு வயதில் யு.கே.சி என்ற சித்ரவதை அங்கே இல்லை.

கருவறையில் இருந்து வெளியில் வந்ததுமே குடுகுடுவென ஓடிச்சென்று பள்ளியில் உட்கார்ந்து கொள்ளும் எந்த அவசரமும் அவர்களுக்கு இல்லை. எல்லா நேரமும் கற்றலுக்கான துடிப்புடன் இயங்கும் குழந்தையின் சின்னஞ்சிறு மூளை, தனது சுற்றத்தின் ஒவ்வோர் அசைவில் இருந்தும் ஒவ்வோர் ஒலியில் இருந்தும் கற்கிறது. இலை உதிர்வதும், செடி துளிர்ப்பதும், இசை ஒலிப்பதும், பறவை பறப்பதும் குழந்தைக்குக் கல்விதான். இவற்றில் இருந்து வேரோடு பிடுங்கி வகுப்பறைக்குள் நடுவதால், அறிவு அதிவேக வளர்ச்சி அடையும் என எண்ணுவது மூடநம்பிக்கை.

ஏழு வயதில் பள்ளிக்குச் செல்லும் பின்லாந்து குழந்தை, அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு கிட்டத்தட்ட ஆண்டின் பாதி நாட்கள்தான் பள்ளிக்கூடம் செல்கிறது. மீதி நாட்கள் விடுமுறை. ஒவ்வொரு நாளும் பள்ளி இயங்கும் நேரமும் குறைவுதான். அந்த நேரத்திலும்கூட, படிப்புக்குக் கொடுக்கப்படும் அதே முக்கியத்துவம் இசை, ஓவியம், விளையாட்டு, மற்றும் ஆய கலைகள் ௬௪ (64) க்கும் முக்கியத்துவம் உண்டு. ஒவ்வொரு பள்ளியிலும் ஓர் ஓய்வறை இருக்கும். படிக்கப் பிடிக்கவில்லை அல்லது சோர்வாக இருக்கிறது என்றால், மாணவர்கள் அங்கு சென்று ஓய்வு எடுக்கலாம்.

முக்கியமாக, 13 வயது வரை ரேங்கிங் என்ற தரம் பிரிக்கும் கலாசாரம் கிடையாது; பிராக்ரசு ரிப்போர்ட் தந்து பெற்றோரிடம் கையெழுத்து வாங்கி வரச் சொல்லும் வன்முறை கிடையாது. தங்கள் பிள்ளையின் கற்றல் திறன் குறித்து தெரிந்துகொள்ள வேண்டும் என பெற்றோர்கள் விரும்பினால், தனிப்பட்ட முறையில் விண்ணப்பித்துப் பெற்றுக்கொள்ளலாம்.

o. கற்றலில் போட்டி கிடையாது என்பதால், தேர்வுகளில் அதிக மதிப்பெண் எடுக்கும் மன உளைச்சல்கள் மாணவர்களுக்கு இல்லை.

o. சக மாணவர்களைப் போட்டியாளர்களாகக் கருதும் மனப்பாங்கும் இல்லை.

o. இவர்களுக்கு வீட்டுப்பாடம் தரப்படுவது இல்லை.

o. மாணவர்களுக்கு எந்தப் பாடம் பிடிக்கிறதோ அதில் இருந்து அவர்களே வீட்டுப்பாடம் செய்து வரலாம்.

o. ஒவ்வொரு பள்ளியிலும் ஒரு மருத்துவர் இருப்பார். அவர், மாணவர்களின் உடல்நிலையை தனிப்பட்ட முறையில் கவனித்து ஆலோசனைகள் வழங்குவார்.

o. ஒரு பள்ளியில் அதிகபட்சமாக 600 மாணவர்கள் இருக்கலாம்; அதற்கு அதிக எண்ணிக்கை கூடவே கூடாது.

o. முக்கியமாக பின்லாந்தில் தனியார் பள்ளிக்கூடமே கிடையாது. அங்கு கல்வி என்பது முழுக்க முழுக்க அரசின் வசம். கோடீசுவரராக இருந்தாலும், நடுத்தர வர்க்கத்தினராக இருந்தாலும், ஏழையாக இருந்தாலும்ஸ அனைவரின் குழந்தைகளும் ஒரே பள்ளியில்தான் படிக்க வேண்டும். ‘என் பொண்ணு இன்டர்நேசுனல் சுகூல்ல படிக்கிறா’ என சீன் போட முடியாது. அனைவருக்கும் சம தரமுள்ள கல்வி அங்கு உத்தரவாதப்படுத்தப்பட்டு உள்ளது. அதனால்தான் பின்லாந்தில் 99 சதவிகிதம் குழந்தைகள் ஆரம்பக் கல்வியைப் பெற்றுவிடுகின்றனர்.

o. அதில் 94 சதவிகிதம் பேர் உயர்கல்விக்குச் செல்கின்றனர். ‘டியூஷன்’ என்ற அருவருப்பான கலாசாரம், அந்த நாட்டுக்கு அறிமுகமே இல்லை.

o. தேர்வுகளை அடிப்படையாகக்கொள்ளாத இந்தக் கல்வி முறையில் பயின்றுவரும் மாணவர்கள்தான், உலகளாவிய அளவில் நடைபெறும் பல்வேறு தேர்வுகளில் முதல் இடங்களைப் பிடிக்கின்றனர். இது எப்படி என்பது கல்வியாளர்களுக்கே புரியாத புதிர். அந்தப் புதிருக்கான விடையை, ஐ.நா சபையின் ஆய்வு முடிவு அவிழ்த்தது.

உலகிலேயே மகிழ்ச்சியாக இருக்கும் குழந்தைகள் பற்றிய தரவரிசை ஆய்வு ஒன்றை, ஐக்கிய நாடுகள் சபை ஒவ்வோர் ஆண்டும் வெளியிடுகிறது. இதில் பின்லாந்து எப்போதும் முன்னணியில் இருக்கிறது. மகிழ்ச்சியின் நறுமணத்தில் திளைக்கும் குழந்தைகள், அறிவை ஆர்வத்துடன் சுவைப்பதில் புதிர் எதுவும் இல்லை.

பின்லாந்து கல்விமுறையின் இத்தகைய சிறப்புகள் குறித்து அறிந்து வருவதற்காக, உலகமெங்கும் உள்ள கல்வியாளர்களும், பிரதிநிதிகளும் அந்த நாட்டை நோக்கிக் குவிகின்றனர். உலகின் 56 நாடுகளில் இருந்து 15,000 பிரதிநிதிகள் ஒவ்வோர் ஆண்டும் செல்கின்றனர். நாட்டின் அந்நியச் செலாவணியில் கணிசமான சதவிகிதம் கல்விச் சுற்றுலாவின் மூலமே வருகிறது.

ஆனால், இப்படி தங்களை நோக்கி வீசப்படும் புகழ்மாலைகளை பின்லாந்தின் கல்வியாளர்களும் அமைச்சர்களும் ஓடோடி வந்து ஏந்திக்கொள்வது இல்லை. ‘பின்லாந்து கல்விமுறைதான் (Finnish Education system) உலகிலேயே சிறந்தது எனச் சொல்ல முடியாது. றிமிசிகி ஆய்வில் எல்லா நாடுகளும் பங்கேற்காத நிலையில் இப்படி ஒரு முடிவை வந்தடைய முடியாது. எங்களைவிட சிறந்த கல்விமுறையும் இருக்க முடியும்’ என்கிறார்கள். இல்லாத நாற்காலியைத் தேடி எடுத்து ஏறி அமர்ந்து, தனக்குத்தானே முடிசூட்டிக்கொள்ளும் தற்பெருமையாளர்கள் நிறைந்த உலகத்தில் இது பண்புமிக்க பார்வை; மதிக்கத்தக்க மனநிலை.

கல்வியில் இருந்து நாம் பெறவேண்டிய சாராம்சம் இதுதான். இத்தகைய சிறந்த கல்விமுறையை உருவாக்கியதிலும், பராமரிப்பதிலும் பின்லாந்தின் ஆசிரியர்களுக்கு முக்கியப் பங்கு உண்டு. சொல்லப்போனால் பின்லாந்து ஆசிரியர்கள்தான் இதற்கு முழுமுதல் காரணம். பின்லாந்தில் ஆசிரியர் பணி என்பது, நம் ஊர் ஐ.ஏ.எசு., ஐ.பி.எசு போல மிகுந்த சமூகக் கௌரவம் உடையது. அரசின் கொள்கை வகுக்கும் முடிவுகளில், திட்டங்களின் செயலாக்கத்தில் ஆசிரியர்களுக்கு முக்கியப் பங்கு உண்டு. மூன்றில் ஒரு பின்லாந்து குழந்தைக்கு, ஆசிரியர் ஆவதுதான் தன் வாழ் நாள் லட்சியம். அதே நேரம் அங்கு ஆசிரியர் ஆவது அத்தனை சுலபம் அல்ல!

மேல்நிலை வகுப்பில் சிறந்து விளங்கும் மாணவர்களில் இருந்து ஆசிரியர் பயிற்சிக்கு மாணவர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். ஐந்து ஆண்டுகள் உண்டு, உறைவிடப் பள்ளிகளில் சேர்ந்து கடும் பயிற்சி எடுக்க வேண்டும். பிறகு, ஆறு மாத காலம் ராணுவப் பயிற்சி. ஒரு வருடத்துக்கு வெவ்வேறு பள்ளிகளில் நேரடியாக வகுப்பறையில் ஆசிரியர் பயிற்சி. ஏதாவது ஒரு பாடத்தில் புராசெக்ட், குழந்தை உரிமைப் பயிலரங்கங்களில் பங்கேற்பது, நாட்டின் சட்டத் திட்டங்கள் குறித்த தெளிவுக்காக தேசிய அமைப்புகளிடம் இருந்து சான்றிதழ், தீயணைப்பு, தற்காப்புப் பயிற்சி, முதலுதவி செய்வதற்கான மருத்துவச் சான்றுஸ என ஆசிரியர் பயிற்சிக்கு சுமார் ஏழு வருடங்களைச் செலவிட வேண்டும். இப்படி ஆசிரியர்களை உருவாக்கும் விதத்தில் பின்லாந்து மேற்கொள்ளும் சமரசம் இல்லாத முயற்சிகள்தான், அங்கு கல்வியில் மாபெரும் மறுமலர்ச்சியை உருவாக்கி இருக்கிறது! பாடம் படிப்போம்..

1 comment:

  1. This is Very important matter this is thing follow srilanka This is education system very good if this is education system follow srilanka srilanka protect very Good citizen and good social socitey

    ReplyDelete

Powered by Blogger.