Header Ads



முஸ்லிம்கள் எதிர்நோக்கும் அவலநிலைபற்றி ஆய்வுகளை நடாத்தி அவற்றை வெளியிட வேண்டும் - அமீன்

நாட்டின் எதிர்காலத் தலைவர்களாகவுள்ள பட்டதாரி மாணவர்களால் வெளியிடப்படும் சஞ்சிகைகள் முஸ்லிம் சமூகத்தின் துன்பியல்களை ஆய்வு நடாத்தி வெளியிடும் கட்டுரைகளைத் தாங்கி வருவதாக இருக்க வேண்டும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவர் என்.எம். அமீன் தெரிவித்தார்.

களனிப் பல்கலைக்கழக இஸ்லாமிய மஜ்லிஸ் வெளியிட்ட ஒசுவா சஞ்சிகை வெளியீட்டு விழாவில் சிறப்புரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

பல்கலைக்கழக இஸ்லாமிய மஜ்லிஸின் தலைவர் ருக்சான் நிஸார் தலைமையில் சமூக விஞ்ஞான பிரிவு கேட்போர் கூடத்தில் நிகழ்வு நடைபெற்றது. வரலாற்றுத்துறை பேராசிரியர் கல்கந்தே கங்கானந்த தேரர், பல்கலைக்கழக உபவேந்தர் சார்பில் பல்கலைக்கழக சிரேஷ்ட நிர்வாகி ஐ.எம். இப்றாஹிம் மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் பொதுச்செயலாளர் சாதிக் சிஹான் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து பேசிய என்.எம்.அமீன் கூறியதாவது,

பல்கலைக்கழக முஸ்லிம் மஜ்லிஸ்களினால் வெளியிடப்படும் சஞ்சிகைகள், ஆய்வுக்கட்டுரைகள் உள்ளடக்கியதாக அமைதல் வேண்டும். அதன்மூலம் ஆய்வுக்குட்படுத்தப்படும் விடயங்களைச் சமூகத்தின் அவதானத்துக்கு கொண்டு வரமுடியும்.

காலத்துக்குரிய பிரச்சினைகளை ஆய்வுசெய்து அதுபற்றி பகிரங்கப்படுத்துவதற்கு இச்சஞ்சிகைகளைப் பயன்படுத்த வேண்டும்.

1974இல் இந்த முஸ்லிம் மஜ்லிஸை ஆரம்பித்த போது, நாம் வெளியிட்ட முதலாவது சஞ்சிகையில் இலங்கை முஸ்லிம்களது வரலாற்றினை ஆவனப்படுத்தி வெளியிடுவதனை வலியுறுத்தி அட்டைப்படம் மற்றும் ஆக்கங்களை நாம் வெளியிட்டோம். பல்கலைக்கழக முஸ்லிம் மஜ்லிஸுகள் வெளியிடும் சஞ்சிகைகள், பாடசாலைகளில் வெளியிடும் சஞ்சிகைகள் போலன்றிக் கருத்தாழம்மிக்கதாக அமைதல் வேண்டும்.

நீங்கள் களனியில் இருக்கின்றீர்கள். உங்களுக்கு அண்மித்த கொழும்பு மாநகரில் மாளிகாவத்தை, வாழைத்தோட்டம், புதுக்கடை, மட்டக்குளி, கிரான்ட்பாஸ் போன்ற பகுதிகளில் முஸ்லிம்கள் எதிர்நோக்கும் அவலநிலை பற்றி ஆய்வுகளை நடாத்தி அவற்றை வெளியிட முன்வரவேண்டும்.

பல்கலைக்கழகங்களில்  படிக்கும் போது மாற்று மத மாணவர்களுடன் நெருங்கிய தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்வது அவசியம். 1974இல் நாம் இப்பல்கலைக்கழகத்துக்கு வந்த போது தமிழ்மொழி மாணவர்களுக்கு அடிப்படை வசதிகள் இருக்கவில்லை. அப்போது எமக்கு நிதி கோரி பிக்கு மாணவர்களும் சிங்கள மாணவர்களும் போராட்டம் நடத்தியது எனது நினைவில் இன்னும் பதிந்துள்ளது.

பல்கலைக்கழகங்களில் படிக்கும் நீங்கள், எதிர்காலங்களில் சமுதாயத்துக்கு அரசியல் நிர்வாகம் மற்றும் துறைகளின் தலைவர்களாக வரவுள்ளீர்கள். எனவே இங்குபெறும் பயிற்சி எதிர்காலத்துக்கு முக்கியமானது.

No comments

Powered by Blogger.