Header Ads



கோத்தாபய என்ற பயத்தை காட்டி, ஏனைய கட்சிகளை அடக்க முயற்சி

கோத்தா பயத்தை காட்டி ஏனைய கட்சிகளை அடக்கவே ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி முயற்சித்து வருகின்றது. கோத்தாபய ராஜபக்ஷ அல்ல  மஹிந்த ராஜபக்ஷவே மீண்டும் களமிறங்கினாலும் எமக்கு அச்சம் இல்லை என்கிறார் பாராளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா. கடந்த ஆட்சியில் செய்த குற்றங்களில் வெகுவிரைவில்  ராஜபக்ஷவினர் சிறைக்கு செல்ல நேரிடும் எனவும் அவர் குறிப்பிட்டார். 

தற்போதுள்ள அரசியல் நிலைமைகள் மற்றும் கோத்தாபய ராஜபக்ஷவை அடையாளப்படுத்தி  முன்னெடுக்கப்படும் அரசியல் நகர்வுகள் குறித்து வினவிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். 

இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,

இந்த ஆண்டு இறுதிக்குள் ஜனாதிபதி தேர்தல் இடம்பெறும், அதில் எந்த சந்தேகமும் இல்லை. ஜனாதிபதி தேர்தலை தள்ளிப்போட ஒரு சிலர் முயற்சிகளை எடுத்தாலும் கூட ஜனாதிபதி தேர்தல் இந்த ஆண்டுக்குள் இடம்பெறும். அதேபோல் இப்போது ஜனாதிபதி தேர்தலில் கோத்தாபய ராஜபக்ஷவின் பெயரை முன்வைத்து கோத்தா பயத்தை காட்டி ஏனைய கட்சிகளை அச்சுறுத்தலாம் என பொதுஜன முன்னணியினர் நினைத்துள்ளனர். 

அதனால் தான் அவர்கள் செல்லும் இடமெல்லாம் கோத்தாபய பெயரை கூறி வருகின்றனர். ஆனால் ஐக்கிய தேசிய கட்சிக்கோ முன்னணிக்கோ கோத்தா பயம் இல்லை. கோத்தாபய ராஜபக்ஷ அல்ல மஹிந்த ராஜபக்ஷவே மீண்டும் களமிறங்கினாலும் கூட அதைக்கண்டு நாம் அஞ்சப்போவதில்லை. எமது தலைவர்கள் தேர்தலுக்கு தயாராகியுள்ளனர். நாம் கூட்டணியாக தேர்தலை சந்திக்க தயாராகிவிட்டோம். எந்த சவாலையும் சந்திக்க நாம் தயார்.

வெகு விரைவில் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள். செய்த குற்றங்களுக்காக ராஜபக்ஷ குடும்பத்தின் பலர் சிறைக்கு செல்ல நேரிடும். குற்றவாளிகளை காப்பாற்றும் நோக்கம் எமக்கு இல்லை. எனினும் சட்ட தாமதங்கள் உள்ளன எனத் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.