Header Ads



சூடானில் பரபரப்பு - ஜனாதிபதி பஷிரை பதவி நீக்கம்செய்து சிறைபிடித்ததாக இராணுவம் அறிவிப்பு


சூடான் நாட்டில் ரொட்டி உற்பத்திக்கான அரசு மானியங்கள் நிறுத்தப்பட்டதால், ரொட்டி விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இது பொதுமக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. ரொட்டி விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து சமூக ஆர்வலர்கள், எதிர்க்கட்சியினருடன் இணைந்து பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.   

போராட்டக்காரர்கள் பல்வேறு பகுதிகளில் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். கடைகளை சூறையாடி அங்குள்ள பொருட்களை போராட்டக்காரர்கள் கொள்ளையடித்துச் செல்வதும் அதிகரித்தது. போராட்டக்காரர்களை ஒடுக்க கலவர தடுப்பு பிரிவு போலீசார் கடும் நடவடிக்கைகளை மேற்கொண்டனர். 

இதனால் போராட்டக்காரர்களுக்கும் போலீசாருக்குமிடையிலான மோதல்களில் உயிர்ப்பலி ஏற்படுகிறது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் நடந்த போராட்டங்களில் 19 பேர் உயிரிழந்தனர்.  அரசுக்கு எதிரான போராட்டம் மற்றும் வன்முறைகளால் இதுவரை சுமார் 50 பேர் உயிரிழந்திருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து போராட்டங்களை கட்டுக்குள் வைக்க தவறியதாக அதிபர் ஒமர் அல் பஷீருக்கு கண்டனங்கள் குவிந்தன.

இந்நிலையில், சூடான் நாட்டு அதிபரான ஒமர் அல்-பஷிரை பதவி நீக்கம் செய்து சிறைபிடித்துள்ளோம் என அந்நாட்டு பாதுகாப்பு துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

இதுதொடர்பாக சூடான் நாட்டு பாதுகாப்பு துறை மந்திரி அவாட் இப்னூ கூறுகையில், அதிபர் பதவியில் இருந்து ஒமர் அல் பஷீர் பதவி நீக்கம் செய்யப்பட்டு உள்ளார். அவரை சிறைபிடித்துள்ள நாங்கள் பாதுகாப்பான இடத்தில் வைத்துள்ளோம் என தெரிவித்தார்.

சூடான் நாட்டில் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக அதிபர் பதவி வகித்தவர் ஒமர் அல் பஷிர் என்பது குறிப்பிடத்தக்கது. 

No comments

Powered by Blogger.