April 28, 2019

அவள் அழைக்கின்ற "வாப்பா" என்ற சொல்தான், கேட்ட வண்ணமுமிருக்கிறது....


சாய்ந்தமருதில் படையினருக்கும் தீவிரவாதக்குழுவுக்கும் இடையில் நடைபெற்ற சண்டையில் தற்கொலைக்குண்டுதாக்குதல் மேற்கொண்டு இறந்துபோனவனின் மகளை படையினர் பாதுகாப்பாக தூக்கிக்கொண்டு வந்து அம்புலன்ஸ் வண்டியில் ஏற்றுகிறார்கள். இரத்தக்கறைகளை துடைத்துவிடுகிறார்கள். ஆயுதங்கள் தரித்த சீருடைப்படையினர் அவளை தூக்கிக்கொண்டுவரும்போது அவள் கதறி அழவில்லை. அவளுக்கு தன்னைச்சுற்றி என்ன நடைபெறுகிறது என்றே தெரியவில்லை. அதிர்ச்சியிலிருக்கிறாளா அல்லது நேற்றிரவு வரை அப்பாவும் இப்படித்தான் ஆயுதத்துடன் இருந்தாரே, அவருடனும் இவர்களைப்போல இன்னும்பலர் ஆயுதங்களுடன் இருந்தனரே என்று பழக்கப்பட்டுவிட்டாளா தெரியவில்லை. ஆனால், அம்புலன்ஸ் வண்டிக்குள் ஏற்றி, கிடத்தி வைத்து இரத்தக்கறைகளை துடைத்துவிடுகின்றபோதுதான், அவள் கைகள் நடுங்கிக்கொண்டிருப்பது தெரிகிறது. கூடவே, அப்போதுதான் அதிச்சியுற்று நினைவு திரும்பியவள்போல சூழ்நிலையை வித்தியாசமாக உணர்வதாகவும் தெரிகிறாள்.

உதடுகள் துடிக்க "வாப்பா" என்று அழுகிறாள்.

இதயத்தை ஒற்றை நாளத்தில் பிடித்து இழுத்து வெளியில் போட்டுவிட்டதுபோல ஒரு கணம் உணர்கிறேன். சுற்றிலும் எல்லா சத்தங்களும் காற்றிலிருந்து விடைபெற்று சென்றுவிட்டது.அவள் அழைக்கின்ற "வாப்பா" என்ற சொல்தான் திரும்ப திரும்ப கேட்ட வண்ணமுமிருக்கிறது. உலகத்திலேயே கொடியதொரு சத்தமாக அது திரும்ப திரும்ப என் காதுகளில் இப்போதுவரை ஒலித்துக்கொண்டேயிருக்கிறது.

அந்த சத்தமும் அவளது அழுகையும் அந்த நடுக்கமும் இதயத்தை சுருள் சுருளாக வெட்டி வெயிலில் போட்டுவிட்டது போலிருக்கிறது.

ஆனால், இவளது முகத்தை போனவருடமும் பார்த்தேன்.

சிறையிலிருந்து வந்து தனது மனைவியின் மரணச்சடங்கில் கலந்துகொண்டுவிட்டு மீண்டும் சிறைக்கு அழைத்துச்செல்லப்பட்ட ஆனந்தசுதாகரனின் மகள் தானும் சிறைக்கு போகப்போவதாக சிறைச்சாலை வாகனத்தில் ஏறினாளே! அவள் முகத்திலும் இந்தக்கொடூரமான அழுகையை பார்த்தேன். தகப்பனை இழந்துகொண்டிருந்த அந்த இறுதிக்கணங்கள் அவள் கண்களில் எப்படியெல்லாம் வெடித்து வழிந்துகொண்டிருந்தது என்பதைப்பார்த்தேன்.

இந்தச்சம்பவங்கள் எல்லாமே வெவ்வேறு சூழ்நிலைகளில் நடைபெறுகின்றன. அவற்றுக்கு வெவ்வேறு ஆட்களை காரணமும் காட்டுகிறோம்.

ஆனால், இந்தக்குழந்தைகள் கேட்பவற்றை கொடுப்பதற்கு எம்மிடம் ஒன்றுமேயில்லை என்கின்றபோதும் அந்தக்குரல்களை கேட்கும்போது நாங்கள் எங்கே நின்றுகொண்டிருக்கிறோம் என்று நினைக்கும்போதுதான் உலகின் அத்தனை புனிதங்களும் தகர்ந்துபோகின்றன. மானிட நேயம், மனுநீதி என்றும் போலியாக கட்டி புழுவேறிப்போயிருக்கும் அத்தனை அழுக்குகளும் எங்களை அம்மணமாக்கிவிடுகின்றன.

இன்னமும் அவள் அழைத்துக்கொண்டுதானிருக்கிறாள்.

"வாப்பா......"

ப. தெய்வீகன்

7 கருத்துரைகள்:

எனது கண்கள் பனித்த தருணமது.

when i seen this child yesterday in media it was broke my heart, no word to say how sad.

என்னதான் நட்கிறது இலங்கையில் ஒன்னும் புரியவில்லை இஸ்லாமியர்கள் தான் அந்த தாக்குதலை செய்தாரகளா...
தற்போது நடந்த இந்த சம்பவத்தை பார்த்தால் இது ஒரு தனி இயக்கமாக தெரிகிறது .....

இதனால இவரக்கக்குள் இப்படி ஒரு முடிவு ஏன்....தன் குடும்பத்தை இழந்து ஒன்னும் அறியாத குழைந்தய தவிக்க விட்டு .....

ஒற்றும் அறியாத அப்பாவி மக்களை கொன்று....உலகமத்தில் இஸ்லாமியர்ளின் மீதி வெறுப்பு உண்டாக்கி.....மாற்று மத நண்பர்களில்டம் முகம் கொடுத்து பெசமுடியாத நிலைக்கு தள்ளிபடிற்க்கோம் அனைத்து முஸ்லிம் மக்களும்....ஏன் ?

நானும் ஒரு தாயாக இந்த பிஞ்சு குழந்தையின் நிலை அறிந்தேன்..... மனம் பொறுக்கவில்லை......கண்ணீருக்கு அணை கட்ட முடியவில்லை..... இறைவா போதும் இந்த மரண ஓலங்கள்.... இருக்கும் சொற்ப காலத்தை தீக்கு இறையாக்காதீர்கள். யா அல்லஹ் வேதனை தாங்கவில்லை......

உருக்குழைந்து
போன வாழ்க்கை
என்றாலும்
குழந்தைகளின்
உதடுகளில்
பூங்காவனம்
தெரியும்
மனிதர்கள்
நாம்...
ஒரு தந்தை
உடலை
வில்லாக்கியும்
உதிரத்தை
வியர்வையாக்கியும்
உழைக்கும்
நாடு இது..
இந்த உறவை
குழி தோண்டி
நெருப்புமூட்டும்
அக்கினிப்பிசாசுகள்
எங்கிருந்து
வந்தார்கள்...

She looked just like my daughter. Her voice brought tears in the eyes. However she will learn that her father choose the life of destruction and misguidance instead of providing for her and family and being a role model. Her voice proved one thing for sure, Children are innocent, even if it is a daughter of a terrorist. We should not forget that fact that the recent incidents have left many families completely out of lifes, killed and permanently injured many children, my sincere sympathies are for them as well.

இரண்டு கட்சிகளின் அரசியல் கொடுமை.

Post a Comment