Header Ads



மாகாணத் தேர்தலை நடாத்த, நீதிமன்ற உதவியை நாடும் மகிந்த தேசப்பிரிய

மாகாணசபைகளுக்கான தேர்தலை நடத்துவது தொடர்பில் பாராளுமன்றம் உடனடி முடிவொன்றை எடுக்கத் தவறினால், பழைய முறைப்படி தேர்தலை நடத்துவது குறித்து நீதிமன்றத்தின் உதவியை நாடத் தீர்மானித்திருப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழுத் தலைவர் மஹிந்த தேசப்பிரிய சபாநாயகருக்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளார். மாகாண சபைத்தேர்தலை ஓகஸ்ட் மாதத்தில் நடத்துவதாக இருந்தால், அது குறித்து பாராளுமன்றம் ஏப்ரல் மாதம் 5ஆம் திகதிக்கு முன்னர் தீர்மானமொன்றை எடுத்தாக வேண்டும். ஆனால், அந்தக் கால எல்லை தற்போது கடந்து விட்டது. தேர்தல் ஆணைக்குழுத்தலைவரால் சபாநாயகருக்கு கையளிக்கப்பட்ட கடிதம் கடந்த 2ஆம் திகதி கட்சித்தலைவர்கள் கூட்டத்துக்குச் சபாநாயகரால் வழங்கப்பட்டது. 5ஆம் திகதி இது குறித்த பிரேரணை பாராளுமன்றத்தில் முன்வைக்கப்படலாமென எதிர்பார்க்கப்பட்ட போதிலும் அது நடக்கவில்லை. இதனால், ஒகஸ்ட் மாதத்தில் தேர்தலை நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. 

புத்தாண்டு விடுமுறைக்குப் பின்னர் அடுத்த மே மாதம் 7ஆம் 8ஆம் திகதிகளில் பாராளுமன்றம் கூடவுள்ளபோதும் அதன் நிகழ்ச்சி நிரலில் கூட மாகாணசபை தேர்தலை நடத்துவது குறித்த பிரேரணை உள்ளடக்கப்படவில்லை.  

அதனையடுத்து மீண்டும் மே மாதம் 21ஆம் 22ஆம் திகதிகளிலேயே பாராளுமன்றம் கூடவுள்ளது. அன்றைய தினத்தில் மாகாணசபைத் தேர்தல் குறித்த பிரேணை கவனத்தில் எடுக்கப்பட்டாலும் தேர்தலை ஒக்டோபர் மாதத்திலேயே நடத்தக்கூடியதாக இருக்கும். 

ஆனால், ஒக்டோபர் மாதத்தில் ஜனாதிபதி தேர்தலுக்கான அறிவிப்பு வெளியாகும் நிலையே காணப்படுவதால், இரண்டு தேர்தல்களையும் சமகாலத்தில் நடத்துவது சாத்தியப்பட முடியாது எனக் கூறப்படுகின்றது. 

இந்த நிலையில், மாகாண சபைத் தேர்தல் குறித்து அடுத்த வாரத்தில் ஜனாதிபதியுடனும் பிரதமருடனும், தேர்தல்கள் ஆணைக்குழுத்தலைவருடனும் பேசித் தீர்மானமொன்றை எடுக்கவிருப்பதாக சபாநாயகர் கரு ஜயசூரிய நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை தெரிவித்திருக்கின்றார்.

(எம்.ஏ.எம். நிலாம்)   

No comments

Powered by Blogger.