Header Ads



"தௌஹீத் ஜமாஅத்" என்ற பெயரிலுள்ள, சகல அமைப்புக்களையும் தடைசெய்க

தௌஹீத் ஜமாஅத் என்ற பெயரில் உள்ள சகல அமைப்புக்களையும் தடை செய்வதற்கு அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என 'சுரக்கிமு ஶ்ரீலங்கா' அமைப்பின் தலைவர் ஆனந்த சாகர தேரர் வலியுறுத்தினார்.

குண்டுத் தாக்குதல்களுடன் தொடர்புபட்ட தேசிய தௌஹீத் ஜமாஅத் அமைப்பு தொடர்பான தகவல்களை பொலிஸார் மற்றும் தேசிய புலனாய்வுப் பிரிவுக்கு நேற்றையதினம் சமர்ப்பித்த பின்னரே அவர் இந்தக் கோரிக்கையை முன்வைத்தார்.

தௌஹீத் ஜமாஅத் என்ற பெயரைக் கொண்ட சகல அமைப்புக்களும் ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகளுடன் தொடர்பைக் கொண்டுள்ளமை குறித்த தகவல்கள் கிடைத்துள்ளன. அவற்றைப் பொலிஸாரிடம் கையளித்துள்ளோம். கிழக்கு மாகாணத்தில் பிரிந்து அவர்கள் நடத்திவரும் போதனைகள் மற்றும் எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய ஆபத்துக்கள் பற்றி தகவல்களை வழங்கியிருப்பதாக அவர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தார்.

இந்தளவு தாக்குதல்கள் நடந்தும் அரசாங்கத்தால் தேசிய தௌஹீத் ஜமாஅத் அமைப்பை தடைசெய்யமுடியாதுள்ளது. ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் கனவு கண்டுகொண்டிருக்கும் ஜனாதிபதி மற்றும் பிரதமர் எந்த அரசியல் சக்திகளின் அழுத்தங்களால் இதனைத் தடைசெய்ய முடியாமல் இருக்கின்றனர் என்பதே எமக்குள்ள பிரச்சினையாகும். தேசிய தௌஹீத் ஜமாஅத் அமைப்பின் தலைவர் சஹரான் தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களை நடத்தும் நிலையில் ஒருசில அரசியல்வாதிகள் தமது தேவைகளுக்காக பிரச்சினையை முடிக்காது இழுத்தடித்து வருகின்றனர் என்றும் அவர் குற்றஞ்சாட்டினார்.

கட்சித் தலைவர்களையும், மதத் தலைவர்களையும் அழைத்து நல்லிணக்கம் பற்றிப் பேசுகின்றனர். இங்கு என்ன நல்லிணக்கம் உள்ளது. நல்லிணக்கத்துக்கு முன்னர் தேசிய பாதுகாப்பை உடனடியாகப் பொறுப்பெடுத்து அதனைப் பலப்படுத்த நடவடிக்கை எடுக்கவும். இருபத்தி நான்கு மணித்தியாலங்களில் பொலிஸ்மா அதிபரை மாற்ற முடியாத ஜனாதிபதியே நாட்டில் உள்ளார். அரசாங்கத்தில் உள்ள அமைச்சர்கள் சிலர், ஆளுநர்கள் இருவருக்கு எதிராகவும் குற்றச்சாட்டுக்கள் உள்ளன.

"கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா மட்டக்களப்பு பல்கலைக்கழகம் ஒன்றை அமைக்கிறார். இது சவூதி ஷரியா தலைமையகத்துடன் இணைந்து வஹாப் வாதம் கற்பிக்கப்படுகிறது. உலகத்தில் ஷரியா நீதி பற்றி கற்பிக்கும் சௌதி பல்கலைக்கழகத்துடன் இணைந்து இது செயற்படுகிறது. உலகத்தில் வஹாப் வாதம், தீவிரவாதம் தொடர்பில் உலகத்துக்கு கற்பிக்கும் முக்கியஸ்தர்களே இங்கு கற்பிக்கின்றனர்.

இவர்கள் யார். இவர்கள் தான் உலகில் வஹாப் வாதத்தை கற்பிக்கும் அடிப்படைவாதிகள். மட்டக்களப்பு பல்கலைக்கழகத்தில் ஷரியா சட்டம் தொடர்பில் கற்பிப்பதற்கு தனியான பீடமொன்று உள்ளது. நாட்டில் என்ன கல்வி முறை காணப்படுகிறது. தேசிய கல்வி என்பது இதுவா? இதுபோன்று பல்கலைக்கழகங்களை அமைத்து மீண்டும் குழப்பங்களை ஏற்படுத்துவதற்கா முயற்சிக்கின்றனர். எனவே இந்தப் பல்கலைக்கழகத்தைத் தடைசெய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றும் அவர் வலியுறுத்தினார்.

இந்தளவு உயிரிழப்புக்களுக்குப் பொறுப்புக் கூறவேண்டிய ஜனாதிபதி, பிரதமர் மற்றும் சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு எதிராக அடிப்படை மனித உரிமை மீறல் மனுவொன்றைத் தாக்கல்செய்ய எதிர்பார்த்திருப்பதாகவும் ஆனந்த சாகர தேரர் மேலும் தெரிவித்தார்.

மகேஸ்வரன் பிரசாத்

2 comments:

Powered by Blogger.