Header Ads



ஒவ்வொரு பள்ளிவாசல் நிர்வாகமும், தன்னுடைய பணியைச் சிறப்பாகச் செய்திருக்கின்றதா...?

- அபூ ஷாமில் -

ஆரம்பித்ததன் நோக்கத்தை மறந்து செயற்படுகின்ற பல நிறுவனங்கள் முஸ்லிம் சமூகத்துக்குள்ளால் செயற்படுவது ஒன்றும் மறுப்பதற்கில்லை. பல நிறுவனங்களும் சமூகத்தின் விடிவுக்காகவெனத் தொடங்கப்பட்டு பின்னர் தமது நிறுவனத் தினதோ அமைப்பினதோ விடிவுக்காக உழைப்பதை கடமையாக்கிக் கொண்டிருப்பதை சமூகத்தில் பரவலாகக் காண முடிகிறது. எந்த நோக்கத்தில் தொடங்கினாலும் கடைசியில் அரபு நாடுகள் வழங்கும் இப்தார், குர்பான், கிணறு, அநாதைகள் என்று நிதி புரளக் கூடிய செயற்பாடுகளில் தம்மைச் சுருக்கிக் கொள்ளும் நிறுவனங்கள் நம்மில் அதிகம். முஸ்லிம் பெண்களுக்காக ஆரம்பிக்கப்பட்ட நிறுவனமொன்று ஆண் பிள்ளைகளை கத்னா செய்யும் பணியையும் செய்து வருகின்றது என்பது நம்மில் பலரும் தாம் நிர்வகிக்கும் நிறுவனங்களின் நோக்கத்தை விட்டு விலகிச் செல்கிறார்கள் என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டு.

அல்லாஹ்வின் இல்லமாகிய பள்ளிவாசல்களை நிர்வகிப்பவர்களும் இதற்கு விதிவிலக்கல்ல. அல்லாஹ்வின் இல்லத்தை நிர்வகிக்கும் பணி என்பது எந்த நோக்கத்தை அடிப்படையாக வைத்து முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதில் பள்ளிவாசல்களை நிர்வகிப்பவர்களுக்கு எந்த அறிவும் கிடையாது போலவே தோன்றுகிறது. பள்ளிவாசல்களுடைய சமூகப் பணி பற்றிப் பேசப் போனால் அது மஸ்ஜித் – ஸுஜூத் செய்யும் இடம் அல்லது தொழும் இடம் என்று சொல்கிறார்கள். அல்லாஹ்வின் இல்லத்தைப் பொறுப்பெடுப்பவர்களைப் பார்த்து அல்லாஹ்தஆலா நீங்கள் தொழுங்கள் என்று சொல்லவில்லை. நீங்கள் தொழுகையை நிலைநிறுத்துங்கள் என்று தான் சொல்கின்றான். அப்படியானால் தமது ஆளுகைக்குட்பட்ட பிரதேசத்தில் தொழுகையை நிலைநாட்ட வேண்டியது பள்ளிவாசல்களின் பிரதானமான பணி. எத்தனை பள்ளிவாசல்கள் இதனைச் செய்கின்றன ?

முஸ்லிமுக்கும் காபிருக்கும் இடையில் உள்ள வித்தியாசம் தொழுகை என்றால் தங்களுடைய பள்ளிவாசலின் ஜமாஅத் தார்களில் எத்தனை பேர் தொழுகையாளிகளாக இருக்கின்றார்கள் என்ற கணக்கு விபரமாவது பள்ளிவாசல்களை நிர்வகிப்பவர்களுக்குத் தெரியுமா? தொழுகையை நிலை நாட்டுவது தான் பள்ளிவாசலுடைய பிரதான பணி என்றால் தொழுகைக்காக பள்ளிவாசல் பக்கமே வராத எத்தனை ஜமாஅத்தார்களை பள்ளிவாசல் நிர்வாகங்கள் தேடிச் சென்று தொழுகையை நிலைநாட்டி இருக்கின்றன? நூற்றுக் கணக்கில் ஆயிரக்கணக்கில் தொழுவதற்கென்று பள்ளிவாசல்களைக் கட்டி அதில் ஒரே ஒரு ஸப்பில் மட்டும் முஅத்தினாருடன் கொஞ்சம் பேர் தொழுவதைப் பார்த்தாலாவது, தமது நிர்வாகத்தில் தொழுகை நிலைநாட்டப்பட்டிருப்பதன் நிலையை இவர்களால் புரிந்து கொள்ள முடியவில்லையா ?

சமூக நிறுவனங்களுக்கு நிர்வாகிகளைத் தெரிவு செய்யும் போது அவர்கள் தமது கடமையை உணர்ந்தே பொறுப்புக்களை ஏற்கின்றார்கள். அவர்கள் தமது பொறுப்புக்களைச் செய்யாத போது அவர்களை அந்த இடத்திலிருந்து நீக்கி விட்டு புதியவர்கள் பொறுப்பெடுக்கிறார்கள். அரசாங்கப் பாடசாலையை எடுத்துக் கொண்டால் பாடசாலை அபிவிருத்திச் சங்கம் தனது பணியைச் செய்யாத போது, பழைய மாணவர் சங்கம் தனது நோக்கத்திலிருந்து விலகிச்  செல்லும் போது அவர்களுக்குப் பதிலாக புதியவர்கள் நியமிக்கப்பட்டு பணிகள் முன்னெடுத்துச் செல்லப்படுகின்றன. பாடசாலையின் நோக்கத்தை அடைவதில் பாடசாலை தவறுவிட்டால் பாடசாலையின் அடைவு மட்டம் அதனை எடுத்துக் காட்டுகிறது. அதன் மோசமான விளைவு சமூகத்தில் பிரதிபலிக்கிறது.

பள்ளிவாசல் நிர்வாகம் தனது நோக்கத்தை அடையா விட்டால் அது சமூகத்தில் மட்டுமல்ல மார்க்கத்தின் இருப்பையே ஆட்டம் காண வைக்கிறது. தொழுகையை நிலைநாட்டுவது என்ற பிரதான பணியைச் செய்தால் அது சமூகத்தின் ஏனைய பணிகளைச் செய்வதற்கு இலகுவாக்கிக் கொடுக்கிறது. பள்ளிவாசலுடன் மக்கள் தொடர்புபடுவார்கள். மக்களுக்கிடையிலான சந்திப்புக்கள் அதிகரிக்கும். உறவுகள் வளரும். ஒரு சமூக அசைவியக்கமே பள்ளிவாசலைச் சுற்றி மையம் கொண்டிருக்கிறது என்ற வகையில் இவற்றுக்கெல்லாம் பிரதானமாக தொழுகையை நிலைநாட்டுவது என்ற விடயத்தில் பள்ளிவாசல்கள் அக்கறை காட்டாவிட்டால் அந்த நிர்வாகத்தைத் தூக்கி எறிவதை விட்டு விட்டு, அவர்களை அல்லாஹ் மறுமையில் தூக்கி எறியும் வரை விட்டு வைப்பது சமூகத்தினதும் அசட்டையை வெளிப்படுத்துகிறது.

ஒவ்வொரு பள்ளிவாசல் நிர்வாகமும் தன்னுடைய பணியைச் சிறப்பாகச் செய்திருக்கின்றதா என்பதனை அந்தப் பள்ளிவாசலில் தொழுகைக்கு நிற்கும் ஸப்பை வைத்து அறிந்து கொள்ள முடியும். பள்ளிவாசலில் தொழுகையாளிகளின் ஸப்பின் அளவை பள்ளிவாசல் நிர்வாகத்தின் வெற்றிக்கான அளவுகோலாக எடுத்துக் கொண்டால் பள்ளிவாசல் நிர்வாகத்தின் அடைவுமட்டத்தினை இனி அனைவரும் இலகுவாக அறிந்து கொள்ள முடியும்.

2 comments:

  1. Every Friday, so called trustees become beggars after Jumma prayer. Selling Allah and Rasool for collecting money. I think, if the management of mosques is given to companies, they can do a better administration with accurate accounting systems. Public can question them on anything without fighting inside the mosque.

    ReplyDelete
  2. One Deviant group thinks all Mosques are there monopoly, inside the mosques they wear whatever they like, sleep outstretched, snoring in some corner of the Masjid, speak loudly without any respect for the worshippers; in most mosques soon after the congregation of Fajr & Isha one fellow from this deviant group jumps in front of the crowd by force and start reading a nonsensical, utter rubbish non-Arabic book, disturbing & distracting the crowd who want to perform Nafil prayers, making supplications (Duas) or reciting Quran etc. Why the Masjid Trustees are not doing anything to stop this Bida'h which is creating so much corruption (fasad) and spoils the sanctity of the Mosque, look at how Mosques in Saudi & other Arab countries are administered and maintained.

    ReplyDelete

Powered by Blogger.