April 13, 2019

ஜனாதிபதியை நிருவாக ரீதியாக, ரணில் சிறை பிடித்திருக்கிறாரா..?

- நஜீப் பின் கபூர் -

இனி இல்லை என்ற அளவில் ஜனாதிபதிக்கும் பிரதமருக்குமிடையிலான சண்டை உச்சகட்டத்தை கடந்து நிற்கின்றது. சமரசம், சமாதானப் பேச்சுக்கள் என்று எவரும் வாய்திறக்க முடியாத நிலை. இருதரப்புக்குமிடையில் எவரும் தூது போவதற்கும் வாய்ப்பில்லை. 

இந்த அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்பிவைக்க ஒன்று திறளுமாறு ஜனாதிபதி மைத்திரி பகிரங்கமாக பேசி வருகின்றார். அன்று ராஜபக்ஸாக்களை வீட்டுக்கு அனுப்பிவைக்க 2015ல் ரணிலுடன் அணி சேர்ந்த மைத்திரி, இன்று அதே ராஜபக்ஸாக்களை ரணிலை வீட்டுக்கு அனுப்பிவைக்க துணைக்கு அழைக்கின்றார்.

நாம் அறிந்த வரையில் நமது நாட்டில் ஜனாதிபதி ஒருவருக்கும் பிரதமர் ஒருவருக்குமிடையே இத்தகைய ஒரு கடுமையான மோதல் நடப்பது இதுதான் முதல் முறை. இதற்கு முன்னர் ஜனாதிபதி ஜே.ஆர். க்கும் பிரதமர் பிரேமதாசாவுக்கும் ஒரு முறுகள் நிலை இருந்தது. அவர்கள் ஒரே கட்சியைச் சேர்ந்தவர்கள். ஆனால் மோதல் பகிரங்க மேடைக்கு வரவில்லை. அதனை அவர்கள் தமது கட்சிக்குள்லேயே தீர்த்துக் கொண்டார்கள். அல்லது காலம் அதனைத் தீர்த்து வைத்தது.

நாட்டில் தற்போது நடக்கின்ற சில சம்பவங்களைப் பார்க்கின்ற போது வேடிக்கையாக இருக்கின்றது. ஜனாதிபதி என்னதான் பிரதமர் ரணிலுக்கு எதிராகப் போர்ப் பிரகடனம் செய்தாலும் பிரதமர் ரணில் அவை அனைத்தையும் வெற்றி கொண்டு வருகின்றார். 

கடைசியாக பாராளுமன்றத்தில் நடந்த வரவு செலவு திட்டத்தை தோற்கடிப்பதற்கு ஜனாதிபதி மைத்திரியும் எதிர்க் கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஸாவும் என்னதான் திட்டங்கள் வகுத்தாலும் அதை 119:74 என்ற எண்ணிக்கையில் பிரதமர் ரணில் வெற்றி கொண்டிருக்கின்றார். 

நமது பார்வைப்படி நடாளுமன்றத்தை பிரதமர் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கின்றார். 225 தலைகளில் பெரும்பான்மை அது. ஜனாதிபதி மைத்திரியும் எதிர்க் கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஸாவும் நாட்டை நமது பிடியில் வைத்திருக்கின்றார்கள் என்றுதான் கருதவேண்டி இருக்கின்றது. 

இதற்கு இப்படியும் ஒரு விளக்கத்தைத் தர முடியும். 2018 உள்ளாட்சி மன்றத் தேர்தலில் மொட்டு 44.65 10 வெற்றிலை 8.94  10  கை 4.44 ஸ்ரீ  58.03 யானை 33.63 வீதம் வாக்குகளையே பெற முடிந்தது.

ஜெனீவாவில் நடந்த சில விவகாரங்கள் தனக்கு அறவே தெரியாது - தன்னிடம் அது பற்றி எதுவுமே சொல்லப்படவில்லை என்று ஒரு குற்றச்சாட்டை ஜனாதிபதி சில தினங்களுக்கு முன்னர் சொல்லி இருந்தார். தற்போது ஜனாதிபதி இப்படியும் சில புதிய கதைகளைச் சொல்லி இருக்கின்றார். 

தன்னுடைய கருத்துக்களையும் சிபார்சுகளையும் கேட்காது பல பணிகளை அரசாங்கம் செய்து கொண்டிருக்கின்றது. இது பற்றி நான் கேள்வி எழுப்பினாலும் அதனை ஆளும் தரப்பு கண்டு கொள்வதில்லை என்ற பாரதூரமான குற்றச்சாட்டை மைத்திரி முன்வைத்திருக்கின்றார். அத்துடன் அமைச்சரவை அனுமதிகூடப் பெறப்படாமல் பல காரியங்கள் நடந்திருக்கின்றன என்று அவர் குற்றம் சாட்டுக்கின்றார்.

அரச கணிகள் தொடர்பாக தனது சிபார்சுகள் உள்வாங்கப்படாமல் வர்த்தமணி அறிவித்தல் 2019 மார்ச் 27ல் வெளியிடப்பட்டிருக்கின்றது. இது பற்றிக் கோட்hல் உங்கள் திருத்தங்களை பின்னர் உள்வாங்கிக் கொள்ளலாம் என்று எனக்குப் பிரதமர் பதில் தருகின்றார். 

குறிப்பிட்ட அமைச்சின் செயலாரிடம் விளக்கம் கேட்டால் பிரதமர்தான் இந்த உத்தரவை தாங்களுக்குக் கொடுத்தார். உங்கள் திருத்தங்களை பின்னர் செய்து கொள்ள முடியும் என்றும் பிரதமர் எமக்குச் சொன்னார் என்று கூறுகின்றார் அந்தச் செயலாளர். 

இந்தச் செயலாளர்களை நீங்கள்தானே நியமனம் செய்கின்றீர்கள். உங்களுக்குத் தெரியாமல் அவர்கள் எப்படி இப்படிச் செய்யமுடியும் - பேச முடியும்? அவரை உடனே வெளியே இழுத்து வீசுங்கள் என்று எனது கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுக்கின்றார்கள் என்றும் ஜனாதிபதி மைத்திரி அங்கலாயித்திருக்கின்றார்.

அதே போன்று விமானங்களை கொள்வனவு செய்கின்ற விடயத்தில் எனது சிபார்சுகளை உள்வாங்காததால், அரசுக்கு 90 பில்லியன் வரை நஷ்டம் ஏற்பட்டிருக்கின்றது. சிங்கப்பூருடனான ஒப்பந்தத்திலும் எனது சிபார்சுகளை நிராகரித்து விட்டனர். இப்படிச் செயலாற்றுகின்ற இந்த ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தை முன்னெடுத்துச் செல்ல நாம் இனியும் அனுமதிக்க முடியாது. இது நாட்டுக்குச் செய்கின்ற துரோகம். 

வருகின்ற சிங்கள-தமிழ் புத்தாண்டுடன் இவர்களை வீட்டிற்கு அனுப்பி வைக்க சகல தியாகங்களையும் செய்தாக வேண்டி இருக்கின்றது என்று தனது கட்சிக் கூட்டத்தில் ஜனாதிபதி மைத்திரி முறுகி இருக்கிறார். இப்படிப் பார்க்கின்ற போது ஜனாதிபதியை நிருவாக ரீதியாக பிரதமர் ரணில் சிறை பிடித்திருக்கின்றார்! என்றுதான் எண்ணத் தோன்றுகின்றது.

இதற்கிடையில் வரவு செலவுத் திட்டத்தை தோற்கடிக்கின்ற விவகாரத்தில் மைத்திரி தலைமையிலான சுதந்திரக் கட்சி இரட்டை வேடம் போடுகின்றது. அவர்களை நம்ப முடியாது எனவே அவர்களுடன் அரசியல் கூட்டு அமைப்பது கேளிக்கூத்தாகத்தான் இருக்கும் என்று மஹிந்த தரப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் கொதிக்கின்றார்கள்.

வரவு செலவுத் திட்டம் தொடர்பான வாக்களிப்பில் சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த எஸ்.பீ மற்றும் திலான் பெரேரா மட்டுமே எதிர்த்து வாக்ளித்திருந்தார்கள். ஏனையோர் வாக்களிப்பைப் புறக்கணித்திருந்தார்கள். இதனால் 45 மேலதிக வாக்குகளால் அது வெற்றி பெற்றது. சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த அனைவரும் வாக்களித்திருந்தாலும் ரணில் அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டம் வெற்றி பெற்றிருக்கும். 

கூட்டணியின் கூட்டாளித்தனத்தால் அரசு இந்த முறையும் தப்பிக் கொண்டது. ஆனால் கேள்வி என்னவென்றால் இதனால் சிறுபான்மைச் சமூகங்களுக்கு குறிப்பாகத் தமிழர்களுக்குக் கிடைத்த நன்மைகள் என்ன என்பதுதான்.? அரசுக்கு ஆதரவாக வாக்களித்து விட்டு நாங்கள் நினைத்ததால் அடுத்த கனமே இந்த அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்பி வைப்போம் என்று சம்பந்தன் ஐயா இப்போது சண்டித்தனம் பேசுகின்றார். 

ரணிலுக்கு ஆற்றக் கடக்க படகைக் கொடுத்தவர் இப்போது படகையும் பறிகொடுத்துவிட்டு கரையில் உட்கார்ந்து கொண்டு கதை விடுகின்றார். அன்று ரணில் இவருக்குக் கொடுத்த  புன்னகையின் அர்த்தம் என்னவென்று இப்போதாவது அவருக்குப் புரிந்திருக்க வேண்டும்.

ஆளும் ஐக்கிய தேசியக் கட்சி நடாத்துகின்ற இந்த மோசாமான நடவடிக்கைகளுக்கு எதிராக மைத்திரி தரப்பும் மஹிந்த தரப்பும் கூட்டு மே தினத்தை நடத்த விரும்பினாலும் அது தொடர்பாக நடந்த பேச்சு வார்த்தைகள் வெற்றி பெறவில்லை. எனவே இரு அணியினரும் தனித்தனியாக மே தினத்தை தற்போது ஏற்பாடுகளைச் செய்தாலும் இரு அணிகளினதும் மே தினக் கோஷம் இந்த மக்கள் விரோத ஐக்கிய தேசியக் கட்சியை விரட்டுவது என்பதாகத்தான் இருக்கும் என்று சுதந்திரக் கட்சி முக்கியஸ்தர் எஸ்.பீ.திசாநாயக்க. நாம் மே தினம் தொடர்பாகத் தொடர்பு கொண்ட போது குறிப்பிட்டார்.

இந்த முறை சுதந்திரக் கட்சி கம்பஹவிலும் ஸ்ரீ லங்கா பொது சன முன்னணி கொழும்பிலும் மே தினத்தை ஏற்பாடு செய்திருப்பதுடன் ஜனாதிபதி தலைமையில் கம்பஹாவில் நடக்கின்ற மே தினத்தில் 19 அரசியல் கட்சிகள் பங்கு கொள்ளவுள்ளதாக எஸ்.பீ. குறிப்பிடுகின்றார். இவை அனைத்தும் இந்த மக்கள் விரோத அரசை விரட்டியடிக்கின்ற நோக்கிலே அணிதிறல்வதாக அவர் மேலும் குறிப்பிட்hர். 

மொட்டு அணியினர் இந்த முறை திருகோணமலையிலிருந்து இந்த மாதம் 26ம் திகதி ஒரு வாகனப் பேரணியை ஏற்பாடு செய்திருகின்றனர். இந்த வாகனப் பேரணி மே முதலாம் திகதி கொழும்பில் நடக்கின்ற மே ஊர்வலத்துடன் சங்கமமாக இருக்கின்றது.

இது தவிர மலையகத்தில் தமது கோட்டைகளுக்குள் தொண்டா, திகா, மனோ, ராதா தமது அணிகளை மே தினத்திற்கு கொண்டுவர இருக்கின்றார்கள். ஜேவிபி தனக்கே உரிய பாணியில் வழக்கம் போல் செம் மே தினத்தை தலை நகரில் நடத்த இருக்கின்றது.  இது தவிர ஆங்காங்கே சிறு கட்சிகள் பலவும் நாட்டில் பல இடங்களில் தமது மே தினங்களை நடத்த இருக்கின்றன.  

கடந்த முறை சுதந்திரக் கட்சியினர் சிறப்பானதொரு மே தினத்தைக் கண்டியில் நடத்தினார்கள். அதற்கு பெருந்தொகையான கட்சி ஆதரவாளர்களும் அப்போது வருகை தந்திருந்தார்கள். இந்த முறை இது எந்தளவுக்குச் சாத்தியம் என்று தெரியவில்லை. சுதந்திரக் கட்சி 2018 உள்ளாட்சி மன்றத் தேர்தலில் மூன்றாம் இடத்திற்கு வந்தது கட்சி ஆதரவாளர்கள் மத்தியில் தாக்கங்களை ஏற்படுத்தி இருக்கும், என்று நாம் கருதுகின்றோம். பல இடங்களில் அந்தக் கட்சி ஜேவிபிக்கும் பின்னால் வந்தது.

அதே நேரம் தற்போது சுதந்திரக் கட்சிக்கு மிகச் சிறந்த ஒரு செயலாளர் நியமிக்கப்பட்டிருக்கின்றார். அவர் தான் சுதந்திரக் கட்சியின் செயலாளராக செயல்பட்டதை விடவும் மிகச் சிறப்பாக தற்போது பணியாற்றுகின்றார் என்று, ஜனாதிபதி மைத்திரி தனது கட்சிச் செயலாளர் தயாசிரி ஜயசேக்கரவைப் பாராட்டி வருகின்றார். எனவே இந்த மே தினம் சுதந்திரக் கட்சிக்கும் தயாசிரிக்கும் தனிப்பட்ட ரீதியில் சவால் மிக்கதாக இருக்கும்.

இதற்கிடையில் ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த பல பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதி மைத்திரிக்கு விசுவாசமாக நடந்து கொள்வதாக அந்தக் கட்சி குற்றம் சாட்டுவதுடன். அவர்கள் ஜனாதிபதிக்கு ஆதரவு தெரிவித்து களத்திலிறங்க இருப்பதாகவும் சொல்லப்படுகின்றது. இது தொடர்பாக இரகசிய சந்திப்புக்களை சுதந்திரக் கட்சி முக்கியஸ்தர் ஒருவர் வீட்டில் நடந்ததாக  சிங்கள  வார இதழ் ஒன்றில்; சொல்லப்பட்டிருந்தது. 

இவர்கள் ஐக்கிய தேசியக் கட்சிக்குள் இருந்து கொண்டு ஜனாதிபதி மைத்திரிக்கு மிகவும் விசுவாசமாக நடந்து கொள்பவர்கள். அத்துடன் அவர்கள் பணிகளை ஜனாதிபதி அடிக்கடி புகழ்வதாகவும் சொல்லப்பட்டிருந்தது. எம்மைப் பொறுத்தவரை இந்த செய்தி சஜீத் பிரேமதாசாவுக்கு சேறு பூசுகின்ற ஒரு செய்தியாகவே பார்க்கின்றோம். 

அத்துடன் வருகின்ற ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி சார்ப்பில் ரணில் களமிறங்குவதை மேற்கு நாடுகளும் இந்தியாவும் விருப்பவில்லை. என்னதான் ஒரு நாட்டின் உள்விவகாரங்களில் ஏனைய நாடுகள் தலையிடக் கூடாது என்று சொன்னாலும் தனிப்பட்ட விருப்பபு வெறுப்புக்கள் என்றும் அரசியல் இலக்குகள் இருக்கத்தான் செய்கின்றன.

ரணில் இந்தத் தேர்தலில் களமிறங்கினால் ராஜபக்ஸாக்கள் சுலபமாக தமது இலக்கை அடைந்து விடுவார்கள் என்பது அவர்கள் கணிப்பாக இருக்கக் கூடும். ஜனாதிபதி மைத்திரி குறிப்பிட்ட ஐ.தே.கட்சியிலுள்ள பட்டம்பூச்சிகளின் குழு ரணிலை வேட்பாளராக அறிவித்து தற்போது பரப்புரைகளை ஏற்பாடு செய்து வருகின்றார்கள். இது எவ்வளவு தூரம் சாத்தியப்படும் என்று தெரியாது. இதற்கு எதிரான கிளர்ச்சி ஐக்கிய தேசியக் கட்சிக்குள் தயாராகி வருகின்றது.

ஐக்கிய தேசியக் கட்சி அமைச்சர் அஜித் பெரேரா அண்மையில் நடாத்திய ஒரு கருத்துக் கணிப்பில் அடுத்த ஐக்கிய தேசியக் கட்சி ஜனாதிபதி வேட்பாளராக சஜீத்துக்கு 73 வீதமும் ரணிலுக்கு வெறும் 23 சதவீத வாக்குகளே கிடைத்திருக்கின்றது. இதனால் கடும் கோபத்திற்கு ஆளான ரணில் அஜிதை தன்னை உடன் சந்திக்க வருமாறு அழைத்து இது போன்ற வேலைகளைச் செய்து கட்சியில் பிளவுகளை உண்டு பண்ணினால் உன்னைக் கட்சியிலிருந்து தூக்கி ஏறிந்து விடுவேன் என்று எச்சரித்து, இதன் பின்னர் இப்படியெல்லாம் நடக்காதே என்று ஏசி அனுப்பி இருக்கின்றார்.

அதே நேரம் ஜனாதிபதி மைத்திரிக்கு எதிராக சுதந்திரக் கட்சிக்குள்ளும் இரு குழுக்கள் செயலாற்றிக் கொண்டிருப்பதாக ஒரு தகவல் தெரிவிக்கின்றன. ஒன்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவுக்கு மீண்டும் தலைமைப் பதவியைக் கையளிக்க முற்படுகின்ற குழு. அடுத்தது சுதந்திரக் கட்சியின் தலைமை பதவியை மஹிந்த ராஜபக்ஷாவிடம் கையளிக்க வேண்டும் என்ற குழு. இந்தக் குழு சற்று செல்வாக்கு வாய்ந்ததாக இருக்கின்றது.

மொட்டை முன்னிருத்தி ராஜபக்ஸா யுகமொன்றை நாட்டில் கட்டி எழுப்ப நல்ல வாய்ப்பிருக்கின்ற இந்த நேரத்தில், ராஜபக்ஸாக்கள் சுதந்திரக கட்சித் தலைமைப் பதவியை தட்டில் வைத்துக் கொடுத்தாலும் ஏற்கமாட்டார் என்பது எமது கணிப்பு. என்றாலும் தேர்தல் தேவைகளுக்காக  அவர்கள் சுதந்திரக் கட்சியை துணைக்கு பாவித்துக்கொள்ள பின்நிற்கமாட்டார்கள். எப்படியும் சுதந்திரக் கட்சிக்குள் விரைவில் ஒரு நெருக்கடிக்கு இடமிருக்கின்றது. வாசகர்களே புத்தாண்டுக்குப் பின் புதிய தகவல்களுடன் சந்திப்போம்.

0 கருத்துரைகள்:

Post a comment