April 01, 2019

கொதிநிலையில் இருக்கும், இனவாத சூழல்


இலங்கையின் இனவாதிகளின் செயற்பாடுகளும் அதற்குத் தூபமிடும் ஊடகங்களின் அட்டகாசமும் மற்றுமொரு இரத்தக் களரியை நாட்டிலே ஏற்படுத்தி விடுமோ என்கின்ற நியாயமான அச்சம் பலரிடமும் துளிர்க்கத் துவங்கியிருக்கிறது.

தேர்தல் என்றாலே மேலெழும் வில்பத்து விவகாரம் இனவாதத்தைத் தூண்டும் விடயமாக தொடர்ந்தும் கையாளப்பட்டு வருகிறது. சூழலியலாளர்கள் என்ற பெயரில் மக்களிடையே தவறான கருத்துக்களைப் பரப்பி மக்களை உசுப்பேற்றுவதற்கு இவர்கள் முயற்சித்து வருகின்றனர். புத்தளம் அருவாக்காடு பகுதியில் குப்பை கொட்டுவதனால் ஏற்படும் சூழல் தாக்கங்களையும் மனித அவலங்களையும் முன்னிறுத்தி நடத்தப்படும் போராட்டத்தில் எந்த ஒத்துழைப்பும் வழங்காமல் வில்பத்துவில் சூழல் தாக்கம் பற்றி மட்டும் பேசுவது சூழல் தொடர்பிலான இந்தச் சூழலியலாளர்களின் போலி ஆர்வத்தை வெளிப்படுத்துகிறது. பாரிய சூழல் தாக்கத்தை ஏற்படுத்தியதனால் இடையில் கைவிடப்பட்டுள்ள உமாஓயா திட்டம் பற்றியும் இவர்கள் எதனையும் பேசவில்லை. எதனையும் இனவாதமாக மாற்றி அதனூடே இரத்தக் களரியை ஏற்படுத்த விளையும் இந்தக் காட்டேரிகளை தோலுரித்துக் காட்டுவதற்கு நடுநிலையாகச் சிந்திப்பவர்கள் முன்வர வேண்டும்.

அதேபோல இந்த இனவாதிகளின் தாளத்துக்கு ஏற்ப ஆடுகின்ற ஊடகங்கள் பற்றி அரசாங்கம் கவனத்தைச் செலுத்த வேண்டும். அரசாங்கம் அனுமதிப்பதினாலேயே இந்த ஊடகங்கள் இனவாதத்தைக் கக்கி வருகின்றன. வில்பத்து விவகாரத்தை இனவாதமாக மாற்றியதில் ஒரு சில சிங்கள ஊடகங்களுக்குப் பெரும் பங்கிருக்கிறது. சிங்கள மக்களிடையே தவறான பீதியையும் புரளியையும் கிளப்பி சிங்கள மக்களை திசை திருப்புவதில் இந்த ஊடகங்கள் போட்டி போட்டுக் கொண்டு செயற்படுகின்றன. கிறிஸ்ட்சேர்ச் பள்ளிவாசலில் நிராயுதபாணிகளாக வணக்கத்தில் ஈடுபட்டிருந்த வர்களை சுட்டுக் கொன்ற பயங்கரவாதத் தாக்குதலை இலங்கை யின் சில சிங்கள ஊடகங்கள் கையாண்ட விதம் அவர்கள் தமது பிழைப்புக்காக இனவாதத்தையே மூலதனமாகக் கொண்டிருக்கிறார்கள் என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டியது. 

இந்தத் தொடரில் வாக்குக் கேட்டுப் பிழைப்பு நடத்தும் அரசியல்வாதிகளும் ஒன்றும் குறைந்தவர்கள் அல்லர். தேர்தலில் தமது வாக்கு வங்கியைக் குறியாக வைத்தே செயற்படும் இவர்கள் பேரின மக்களின் வாக்குகளைப் பெறுவதற்காக இனவாதத்தைத் தூண்டும் செயற்பாடுகளில் இறங்குகின்றனர். தேர்தல் நெருங்கும் காலங்களில் இனவாதச் செயற்பாடுகளை முடுக்கி விடுவது இவர்களுக்கு வாடிக்கையாகி விட்டது. எத்தனை பேரின் உயிரைப் போக்கியாவது எத்தனை உடைமைகளைச் சேதப் படுத்தியாவது எத்தனை வாழ்வாதாரங்களை தீக்கிரையாக்கியாவது தனது அபிலாஷைகளை நிறைவேற்றிக் கொள்வதே இந்த அரசியல்வாதிகளின் தேர்தல் பிரச்சாரமாக அமைகிறது.

அதேபோல வியாபாரத்தில் ஏற்படும் போட்டியையும் சில வர்த்தகர்கள் இனவாதத்துக்குப் பயன்படுத்துகின்றனர். கடந்த வருடம் கண்டி, திகன பிரதேசங்களில் நடைபெற்ற முஸ்லிம்கள் மீதான காட்டுமிராண்டித் தாக்குதல்களில் பல வர்த்தகர்கள் குளிர் காய்ந்தமை மறைக்கக் கூடிய விடயமல்ல. சித்திரைப் புத்தாண்டுக்காக முஸ்லிம் வர்த்தகர்களால் கொண்டு வந்த சேமிக்கப்பட்டவைகளை இலக்காக வைத்து தாக்குதல்கள் நடத்தப்பட்டன. கடந்த காலங்களில் பல ஆடைக் காட்சியறைகள் தீவைத்து கருக்கப்பட்டமைக்கும் இந்த வர்த்தகப் போட்டி காரணமாக அமைந்தது.

இனவாதிகளதும் இனவாத ஊடகங்களதும் அரசியல்வாதிகளதும் வர்த்தகர்களதும் இத்தகைய செயற்பாடுகளினால் ஏமாற்றப்பட்ட சில பொதுஜனங்கள் எதற்கெடுத்தாலும் அதனை இனவாதக் கண்ணோட்டத்தில் பார்ப்பதற்கும் அணுகுவதற்கும் தங்களைப் பழக்கப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். பாணந்துறையில் அண்மையில் நடந்த சம்பவம் இதற்கு நல்லதோர் உதாரணமாகும். இனவாத உணர்வுகள் கொதிநிலையில் இருக்கும் சூழலில் இனி எந்த அசைவும் தீப்பற்றக் கூடியதாகவே இருப்பதை இது காட்டுகிறது. ஒன்றாக இருக்கையில் சாதாரண விடயங்களாக இருந்தவைகள் எல்லாம், உறவுகள் தூரமாக்கப்பட்ட நிலையில் துவேஷச் செயற்பாடுகளாகப் பார்க்கப்படுகின்றன. கட்டுகஸ்தோட்டை சம்பவமும் இதற்கு வலுச் சேர்ப்பதாக அமைந்திருக்கிறது.

இந்த நிலையில் இருந்து நாட்டை மீட்டெடுப்பதற்கு அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்க வேண்டியது நீதியை விரும்பும் அனைத்து மக்களதும் கடமையாகும். அரசாங்கமும் இந்த இனவாதச் சக்திகளின் அழுத்தங்களுக்கு அடிபணியாமல் நீதியை நிலைநாட்டுவதில் தனக்குள்ள அக்கறையை வெளிப்படுத்த வேண்டும்.

மீள்பார்வை

1 கருத்துரைகள்:

நாட்டின் இயற்கை வளங்களை அழிக்கப்படுவதை எதிர்த்து போராடுவது எப்படி இனவாதம் ஆகும்?

Post a Comment