Header Ads



இஸ்லாமிய அடிப்படைவாதம், புலிகளின் பயங்கரவாதத்தைவிட மிக மோசமானது - விஜித் விஜயமுனி சொய்சா


இஸ்லாமிய அடிப்படைவாத பயங்கரவாதம் விடுதலைப் புலிகளின் பயங்கரவாதத்தை விட மிக மோசமானது என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித் விஜயமுனி சொய்சா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று -24- அவசரகாலச் சட்டம் மீதான விவாதத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

நாடாளுமன்றத்திற்கு வெளியில் பேசும் விடயங்கள் எமது காதுகளுக்கு கேட்கிறது. நாடாளுமன்றத்திற்கு குண்டு வைத்து 225 பேரையும் கொல்ல வேண்டும் என சிலர் கூறுகின்றனர்.

அந்த அளவுக்கு நாட்டின் அரசியல்வாதிகள், அரசு வங்குரோத்து நிலைமைக்கு சென்றுள்ளது. நாடாளுமன்றம், அரசு தொடர்பாக மக்கள் கொண்டிருந்த நம்பிக்கை இல்லாமல் போயுள்ளது.

நீதிமன்றம் மற்றும் பாதுகாப்பு படையினர் மீதான நம்பிக்கை மாத்திரமே மீதமுள்ளது. இதனை நாம் பாதுகாக்க வேண்டும்.

இந்த பயங்கரவாத அமைப்பு விடுதலைப் புலிகள் அமைப்பை விட பயங்கரமானது. இந்த பயங்கரவாத அமைப்பிடம் கோரிக்கைகள் எதுவுமில்லை.

கோரிக்கைகள் இருந்தால், அவர்களுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தலாம். எதனையாவது கொடுக்க முடியும். பேசி தீர்த்துக்கொள்ள முடியும்.

கோரிக்கைகளை முன்வைக்காத பயங்கரவாத அமைப்பு. இந்த ஆபத்து மிகவும் இலகுவானது அல்ல.

இது ஓட்டப் போட்டியை போன்றது. விடுதலைப் புலிகளுடனான போரில் அன்று ரத்வத்தே யாழ்ப்பாணத்தை கைப்பற்றினார். பலவேறு இராணுவ நடவடிக்கைகளை எடுத்தார். சிறந்த ஆரம்பத்தை பெற்றுக்கொடுத்தார்.

ஆனால், அன்று பாதுகாப்புச் செயலாளர் பற்றி பேசப்படவில்லை. ஜனாதிபதி சந்திரிக்கா பற்றியும் பேசப்படவில்லை. அமைச்சர் ரத்வத்தே பற்றியே பேசப்பட்டது.

மகிந்த ராஜபக்ச நாட்டின் ஜனாதிபதியாக இருந்ததால், அவரது தம்பியான பாதுகாப்புச் செயலாளர் பற்றி பேசப்பட்டது. போரின் உண்மையான வீரன் சரத் பொன்சேகா.

அவருக்கு என்ன நடந்தது. ரஞ்சன் விஜேரத்ன, ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச ஆகியோருக்கு என்ன நடந்தது. எல்லாவற்றுக்கும் மேலாக நாட்டு மக்களின் வாழ்க்கை முக்கியமானது. மக்களின் வாழக்கை சீர்குலைந்துள்ளது.

அரசாங்கம் என்று இந்த பிரச்சினையை ஜனாதிபதி மற்றும் பிரதமருடன் மட்டுப்படுத்தி விட முடியாது. எதிர்க்கட்சிக்கும் பெரிய பொறுப்பு உள்ளது. எம்மிடம் ஒழுக்கமான இராணுவம் இருக்கின்றது.

இராணுவத்திற்கு நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம். வேறு ஒரு நாட்டில் இப்படியான சம்பவம் நடந்திருந்தால், இராணுவப் புரட்சி வெடித்து, இராணுவம் அரசாங்கத்தை கைப்பற்றியிருக்கும்.

ஜனாதிபதி, பிரதமரின் சர்வதேச தொடர்புகள், எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்சவின் அனுபவம் மற்றும் சரத் பொன்சேகாவின் வீரம் ஆகியவற்றை ஒருங்கிணைத்து, இரகசியமாக இயங்கும் அமைப்புகளுக்கு எதிராக நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

முஸ்லிம் அரசியல் கட்சிகளை அடிப்படைவாத கட்சிகள் என்று குற்றம் சுமத்துகின்றனர். எனினும் இந்த கட்சிகள் கடந்த அரசாங்கத்திலும் அங்கம் வகித்தன.

அந்த பக்கம் இருக்கும் போது இந்த கட்சிகள் அடிப்படைவாத கட்சிகள் இல்லை. தற்போதைய அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் அடிப்படைவாத கட்சிகள் என்கின்றனர். இவர்கள் அடிப்படைவாதிகள் அல்ல நடுநிலையாளர்கள்.

இதனால், சகல வாத பேதங்களை நிறுத்தி விட்டு, ஒரு நாட்டினர் என்ற வகையில் ஒன்றாக இணைந்து செயற்படுவோம். சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் ஒன்றாக இணைந்து செயற்படுவோம் எனவும் விஜித் விஜயமுனி சொய்சா குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.