Header Ads



புத்தளத்தில் 12 பேர் கைது

புத்தளம், வன்னாத்தவில்லு மற்றும் கற்பிட்டி பகுதியில் இன்று (28) காலை முதல் நண்பகல் வரை முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கைகளின் போது சந்தேகத்தின் பேரில் 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக புத்தளம் பொலிஸ் அத்தியட்சகர் ஜே.ஏ.சந்திரசேன தெரிவித்தார். 

இதுபற்றி அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை இலங்கையின் பல பாகங்களிலும் முன்னெடுக்கப்பட்ட தீவிரவாதத் தாக்குதல்களை அடுத்து, ஒவ்வொரு வீடுகளிலும் விஷேட தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. 

இந்த நிலையில், இன்று புத்தளம் பிரதேசத்தில் முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது இருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர். 

அத்துடன், புத்தளம் வன்னாத்தவில்லு பிரதேசத்தில் முன்னெடுக்கப்பட்ட சோதனையின் போது சந்தேகத்தின் பேரில் ஆறு பேரும், கற்பிட்டி நுரைச்சோலை பிரதேசத்தில் முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது ஐந்து பேரும் என மொத்தமாக காலை முதல் நண்பகல் வரை 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

பொலிஸாருடன் இணைந்து இராணுவத்தினர் இந்த சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். இதேவேளை, புத்தளம், மதுரங்குளி மற்றும் வன்னாத்தவில்லு ஆகிய பகுதிகளில் வீதித் தடைகளை ஏற்படுத்தி வாகனங்கள் மற்றும் நபர்கள் கடும் சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர். 

வீடுகள் மற்றும் வீதிச் சோதனை நடவடிக்கைகளினால் மக்கள் ஒருபோதும் அச்சப்படத் தேவையில்லை. சோதனை நடவடிக்கைகளில் ஈடுபடும் பாதுகாப்பு தரப்பினர்களுக்கு பொதுமக்கள் முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும். 

மாத்திரமின்றி, வீதியில் சந்தேகத்திற்கு இடமான வாகனம் இருந்தால் அல்லது நபர்கள் சுற்றித்திரிவதைக் கண்டால் உடனடியாக புத்தளம் மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர், பொலிஸ் அத்தியட்சகர், உதவிப் பொலிஸ் அத்தியட்சகர்கள் ஆகியோருக்கு தெரியப்படுத்துவதுடன், அருகிலுள்ள பொலிஸ் நிலையங்களுக்கும் அறிவிக்கவும். 

இதேவேளை, கற்பிட்டி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பள்ளிவாசல்துறை நாச்சிகல்லிய பிரதேசத்திலிருந்து அரபு எழுத்துக்களில் எழுதப்பட்டிருந்த 500 பதாதைகள் நேற்று (28) கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. 

குறித்த பகுதியில் முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கைகளின் போதே, இந்த பதாதைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ள அரபு எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட குறித்த பதாகைகள் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை கற்பிட்டி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர் என்றார். 

இதேவேளை, புத்தளம் மற்றும் கற்பிட்டி ஆகிய பிரதேசங்களில் கடந்த வியாழக்கிழமை (25) முன்னெடுக்கப்பட்ட விஷேட சோதனை நடவடிக்கையின் போது 18 பேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

(ரஸ்மின்)

No comments

Powered by Blogger.