Header Ads



மதூஷுக்கு 1,000 கோடி ரூபா சொத்துகள் - குற்றப்பத்திரம் தாக்கல்செய்ய நடவடிக்கை

டுபாயில் கைது செய்யப்பட்ட பாதாள உலகக் குழுத் தலைவரான மாகந்துரே மதூஷுக்கு எதிராக குற்றப் பத்திரத்தை தாக்கல் செய்ய சட்டமா அதிபர் திணைக்களம் எதிர்பார்ப்பதாக அதன் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

மதூஷுக்கு எதிராக கிடைக்கப்பெற்றுள்ள சாட்சியங்களின் அடிப்படையில் குற்றப் பத்திரம் தாக்கல் செய்யப்பட உள்ளது.

டுபாயில் இடம்பெற்ற விருந்துபசார நிகழ்வு ஒன்றில் கைது செய்யப்பட்டு, இலங்கைக்கு நாடுகடத்தப்பட்டவர்கள் வழங்கிய வாக்குமூலத்தின் அடிப்படையில் வழக்குத் தொடர்ந்து குற்றப் பத்திரம் தாக்கல் செய்வது குறித்து அதிக கவனம் செலுத்தப்படுவதாக சட்டமா அதிபர் திணைக்களம் தெரிவிக்கிறது.

சாட்சிகள் தொடர்பான ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டதையடுத்து, மாகத்துரே மதூஷுக்கு எதிராக குற்றப் பத்திரம் தாக்கல் செய்யப்பட உள்ளதாக சட்டமா அதிபர் திணைக்கள உயர் அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.

மாகந்துரே மதூஷை இலங்கைக்கு கொண்டுவருதற்காக டுபாய் அரசாங்கத்துடன் இணைந்து கடந்த வாரம் முதல் செயற்பாடுகளை முன்னெடுத்திருப்பதாக வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

அதேநேரம், மதூஷுக்கு 1,000 கோடி ரூபாவுக்கும் அதிகமான பணம் மற்றும் சொத்துகள் உள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கடந்த மார்ச் மாதம் 5ஆம் திகதி பாணந்துரை - வாழைத்தோட்டத்தில் வைத்து கைது செய்யப்பட்ட மதூஷின் நண்பரான கெவுமா என அறியப்படும் கெலும் இந்திக்கவிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் இந்தத் தகவல் கிடைத்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கடந்த பெப்ரவரி மாதம் 5 ஆம் திகதி டுபாயில் இடம்பெற்ற பிறந்ததின நிகழ்வு ஒன்றில் வைத்து, பாதாள உலகக் குழுத் தலைவரான மாகந்துரே மதூஷ், பாடகர் அமல் பெரேரா, நடிகர் ரயன் உள்ளிட்ட 31 பேர் கைதுசெய்யப்பட்டனர்.

அவர்களின் 15 பேர் இதுவரையில் இலங்கைக்கு நாடுகடத்தப்பட்டுள்ளனர்.

அவர்களுள், நடிகர் ரயன் வென் றூயன், முன்னாள் சிறைச்சாலை கட்டுப்பாட்டாளர் லலித் குமார, பாதாள உலகக் குழுத் தலைவர் கஞ்சிபாண இம்ரான், பாதாள உலகக் குழு உறுப்பினரான ரொடும்ப அமில என அறியப்படும் அமில சம்பத் மற்றும் ஜங்க எனப்படும் அனுஷ்க கௌஷால் ஆகியோர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.