Header Ads



தேசமானிய MS றஹீம்

- பரீட் இக்பால் -

தையல் தொழில் செய்து கொண்டு சமூக சேவை ஸ்தாபனமான வை.எம்.எம்.ஏ உடன் தொடர்பு கொண்டு யாழ்.முஸ்லிம் வட்டாரத்தில் கிளை ஆரம்பித்து சமூக சேவையில் ஈடுபட்டு அகில இலங்கை வை.எம்.எம்.ஏ. தேசிய தலைவரான எம்.எஸ்.றஹீம்.

யாழ்ப்பாணம் சோனகத் தெருவைச் சேர்ந்த முஹம்மது சுல்தான் சுலைஹா உம்மா தம்பதியினருக்கு 1946 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இரண்டாம் திகதி றஹீம் பிறந்தார்.

றஹீமின் தந்தையார் முஹம்மது சுல்தான் அவர்களுடைய தொழில் தையல் தொழிலாகும். முஹம்மது சுல்தான், கலாநிதி ஏ.எம்.ஏ அஸீஸ் அவர்களுடைய நெருக்கமான நண்பராவார். சிறு வயதில் இருவரும் சேர்ந்து விளையாடுவார்கள்.

றஹீமின் தந்தையார் முஹம்மது சுல்தான் சிலம்படி, கம்படி, வாள்சண்டை போன்ற சாகல விளையாட்டுகளில் தேர்ச்சி பெற்றவர்.

ஜோன். கொத்தலாவல, இலங்கையின் பிரதமராக இருக்கும் போது, யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்யும் போது, சோனகத்தெரு ஐந்து சந்தியில் யாழ் முஸ்லிம்களின் வரவேற்பு நிகழ்வில் கலந்து கொண்டார். அந்த வரவேற்பு நிகழ்வில் றஹீமின் தந்தையார் முஹம்மது சுல்தான் 'சிலம்படி' செய்து வரவேற்றார்.

றஹீம் தனது ஆரம்ப கல்வியை ஐந்தாமாண்டு வரை யாழ் மஸ்ற உத்தீன் பாடசாலையில் கல்வி கற்றார். அதன் பின்னர் றஹீம் 06 ஆம் ஆண்டு தொடக்கம் க.பொ.த உயர்தரம் வரை  வண்ணை வைத்தீஸ்வரா கல்லூரியில் கல்வி கற்றார். றஹீம் வருடாந்த மெய்வல்லுநர் போட்டிகளில் நாகமுத்து இல்லம் சார்பாக பல போட்டிகளில் கலந்து தனது திறமைகளை வெளிக்காட்டினார். ஒரு சந்தர்ப்பத்தில் றஹீம் 'ஜூனியர் சாம்பியன்' பட்டம் பெற்றது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

ரஹீம் வண்ணை வைத்தீஸ்வரா கல்லூரியில் க.பொ.த (உயர்தரம்) படித்து விட்டு பின்னர் சென்னையில் இயங்கும் 'ஹோமியோபதி வைத்தியம் கல்வியை தபால் மூலம் கற்றார். அரைவாசி வரை படித்த றஹீம் தொடர முடியாமல் இடையில் கைவிட்டுவிட்டார். அதன் பின்னர் றஹீம் வாப்பாவின் தொழிலான தையல் தொழிலை கற்று தையல் தொழிலாளரானார்.

றஹீம் 14.05.1972 இல் யாழ்ப்பாணம் சோனகத் தெருவைச் சேர்ந்த முன்னாள் சிவல பள்ளி நம்பிக்கையாளர் சபையின் அங்கத்தவர்  அல்ஹாஜ் மீரான் ஸாஹிப் (மரைக்கார்) அவர்களின் மகள் தமீமாவை திருமணம் செய்தார். றஹீம் - தமீமா தம்பதியினருக்கு  முத்தான மூன்று ஆண்பிள்ளைகளும் மூன்று பெண்பிள்ளைகளும்  பிறந்தனர்.

றஹீமின் மனைவி தமீமாவுக்கு யாழ் முஸ்லிம் வட்டாரத்தில் முன்பள்ளி (நேஸரி) யை முதன் முதலில் ஆரம்பித்த பெருமையுண்டு. றஹீமின் மனைவி தமீமா ஒரு நல்ல எழுத்தாளர். தமீமா சமையல் சம்பந்தமான புத்தகங்கள் எழுதியுள்ளார்.

தமீமாவின் எழுத்து துறையை கௌரவித்து 15.12.2010 இல் 'கலாபூஷணம்' விருது வழங்கப்பட்டது. மேலும் தமீமாவின் எழுத்து துறையை கௌரவித்து 2015 இல் லண்டனில் இயங்கும் ஜே.எம்.ஏ.யு.கே. இனால் சிறந்த எழுத்தாளர் விருதும் 17.11.2016 இல் யாழ்ப்பாணத்தில் 'யாழ்ரத்னா' விருதும் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

றஹீம் - தமீமா தம்பதியினரின் ஆண் பிள்ளைகளாக கிஷோர் ஜஹான், கிஸ்மத், றிஹாஸ் பெண் பிள்ளைகளாக ஹன்ஸியா, ஹம்ஸியா, பாத்திமா றொஸானா ஆவர் கிஷோர் ஜஹான் ஐ.டி.யில் எம்.எஸ்.ஸி கல்வி கற்றவர். கிஸ்மத் சொப்ட் வெயர் எஞ்ஜினியர், றிஹாஸ் சுனாமியின் போது அகால மரணமடைந்தார். 'இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.'

1972 காலகட்டத்தில் சமூகத்துடன் நன்றாக பழகிவரும் றஹீமை பார்த்து நீதி அரசர் எம்.எம்.எம்.அப்துல் காதர் அவர்கள். 'சமூகத்துடன் நன்றாக பழகிவரும் நீ, அரசியல் சார்பற்ற வை.எம்.ஏ.ஸ்தாபனத்தில் அங்கத்தவராக இணைந்து யாழ்ப்பாண முஸ்லிம்களுக்கு சமூக சேவை செய்யலாமே' என்று கேட்டார். இதற்கு றஹீம் தயங்காது 'உங்களது ஒத்துழைப்பு இருந்தால் போதும் நான் வை.எம்.எம்.ஏ ஸ்தாபனத்தில் ஒரு அங்கத்தவராக இணைந்து யாழ் முஸ்லிம்களுக்கு சேவை செய்ய தயார்' என்றார். இதனை அடுத்தே தையல் தொழிலாளி றஹீம் சமூக சேவையாளரானார். றஹீம் 1974 இல் 'அகில இலங்கை சமாதான நீதிவான் பதவியும் பெற்றுக் கொண்டார்.

றஹீம் 1972 இல் யாழ் முஸ்லிம் வட்டாரத்தில் வை.எம்.எம்.ஏ.ஸ்தாபனத்தின் கிளையை ஸ்தாபித்து வைத்தார். வை.எம்.எம்.ஏ இன் யாழ். முஸ்லிம் வட்டார கிளைக்கு தலைவராக எம்.எம்.சலீம் செயலாளராக றஹீமும் தெரிவு செய்யப்பட்டு இயங்கியது. 1977 இல் தலைவராக எம்.இஸ்ஸத்தீன், செயலாளராக றஹீமும் தெரிவு செய்யப்பட்டு 1990 இல் இடம்பெயர்வைத் தொடர்ந்தும் 1994 வரை இயங்கினர்.

வை.எம்.எம்.ஏ யாழ் முஸ்லிம் வட்டார கிளையானது வெள்ளப்பெருக்கின் போது மக்களுக்கு உதவியது. அரச வேலை வாய்ப்புகள் கொடுத்தது பெண்களுக்கான தையல் பயிற்சி இலவசமாக கற்றுக் கொடுத்தது. கிழமையில் இரண்டு நாட்கள் அரச வைத்தியர்களைக் கொண்டு ஆறு வயதிற்கு கீழ்ப்பட்ட சிறுவர்களுக்கு வைத்திய சேவை வழங்கியது. இப்றாஹிம் மௌலவியைக் கொண்டு குர்ஆன் மதரசா வகுப்புகள் நடத்தியது போன்ற சமூக சேவைகளை ஆற்றியது.

1994 இல் வை.எம்.ஏ.யாழ் முஸ்லிம் வட்டார கிளையின் தலைவராக றஹீமும், 2008 இல் (றஹீம் அகில இலங்கை வை.எம்.எம்.ஏ. தேசிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதால் ) ஸபூரும் 2015 இல் தலைவராக எஸ்.ஏ.ஸி. மஹ்ரூப் ஆசிரியரும் இயங்கினர்.

றஹீம் வை.எம்.எம்.ஏ.ஸ்தாபனத்தின் மூலம் அயராது நல்ல முறையில் சேவையில் ஈடுபட்டதால் 1977 இல் அகில இலங்கை வை.எம்.எம்.ஏ இல் செயற்குழு உறுப்பினரானார். 1989 இல் அகில இலங்கை வை.எம்.எம்.ஏ. இன் வாசிகசாலைக்கு பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார். றஹீம் 1990 தொடக்கம் 2006 வரை அகில இலங்கை வை.எம்.எம்.ஏ. உப தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
2006 இல் றஹீம் அகில இலங்கை வை.எம்.எம்.ஏ. இன் தனாதிகாரியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். 2007 இல் மீண்டும் உப தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 2008 இல் றஹீம் அகில இலங்கை வை.எம்.எம்.ஏ. இன் தேசிய தலைவரானார். 

றஹீமுக்கு 1999 இல் ஐக்கிய தேசிய கட்சியினால் யாழ்ப்பாணத்திற்கான பாராளுமன்ற உறுப்பினர் பதவி கிடைத்தது. புலிகளின் மிரட்டலால் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை ஏற்கவில்லை.  2009 தொடக்கம் றஹீம் அகில இலங்கை வை. எம்.எம்.ஏ. இன் நம்பிக்கையாளர் சபையில் ஒருவராகவும் இருந்து வருகிறார்.

றஹீம் அகில இலங்கை முஸ்லிம் பாடசாலைகள் அபிவிருத்தி ஆலோசனைக் குழுவில் றஹீம் ஓர் அங்கத்தவராக 2016 தொடக்கம் சேவையாற்றி வருகிறார்.

2016,2017 இல் அகில இலங்கை வை.எம்.எம்.ஏ. இல் தேசிய தலைவர், காரியதரிசி, தனாதிகாரி ஆகியோருக்கான ஆலோசகராக றஹீம் விளங்கினார் என்பதும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.

றஹீம், யாழ் முஸ்லீம் சனசமூக நிலையத்தின் தலைவராகவும், யாழ் பாவனையாளர் பாதுகாப்பு சங்கத்தின் தலைவராகவும், யாழ் மாவட்ட வாடகை சபையின் உறுப்பினராகவும், வை.எம்.எம்.ஏ இன் யாழ் முஸ்லிம் வட்டார கிளையின் தலைவராகவும் செயலாளராகவும், மக்கள் குழுத்தலைவராகவும், இணக்க சபை உறுப்பினராகவும் சேவை ஆற்றியதும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.

றஹீம் யாழ் ஒஸ்மானியா கல்லூரியின் தேவைகள் தொடர்பாக அமெரிக்க தூதுவருடன் பேச்சுவார்த்தை நடாத்தி வெற்றியும் கண்டார். விஞ்ஞான பிரிவுக்காக கட்டிடம் ஒன்றை அமைக்க றஹீம் அயராது உழைத்தார்.

றஹீம் லண்டன் சென்றிருந்த போது 'லண்டன் தமிழ் நடுவர் நிலையம் மூலமாக யாழ் ஒஸ்மானியாவுக்கு ஒரு கணனிப் பிரிவை உருவாக்கி 10 கணனிகளையும் பெற்றுக் கொடுத்தார்.

றஹீம் 1978 முதல் 1987 வரை ஏக காலத்தில் யாழ்.ஒஸ்மானியா கல்லூரி, கதீஜா கல்லூரி மஸ்ற உத்தீன் பாடசாலை ஆகியவற்றிற்கு செயலாளராக இருந்து பாடசாலைகளின் அபிவிருத்தி பணிகளை மேற்கொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.

30.10.1990 இல் யாழ்ப்பாணத்திலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களுக்கு அகில இலங்கை வை.எம்.எம்.ஏ.மூலம் உணவு, சுகாதார வசதிகள் ஏற்பாடு செய்து கொடுப்பதில் றஹீம் அயராது பாடுபட்டார்.

இடம் பெயர்ந்த யாழ்.முஸ்லிம்களுக்கு புத்தளத்தில் வை.எம்.எம்.ஏ.நகரில் 100 வீடுகளும் பாலாவியில் 130 வீடுகளும் பெற்றுக் கொடுப்பதற்கு றஹீம் அயராது கடுமையாக பாடுபட்டதும் குறிப்பிடத்தக்க விடயமாகும். றஹீம்  அகில இலங்கை முஸ்லிம் லீக்கின் உபதலைவராகவும் அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப சங்க சம்மேளனத்தின் ஆலோசகராகவும் இயங்கி வருகிறார். பல்கலைக்கழக மாணவர்களுக்கு மாதாந்தம் பண உதவி வழங்கும் கலாநிதி ஏ.எம்.ஏ.அஸீஸ் மன்றத்தின் காரியதரிசியாகவும் இயங்கி வருகிறார். றஹீமுக்கு 2008 இல் 'தேசமானிய விருது' கிடைத்ததும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.

போதைப் பொருள் தடுப்பு சம்பந்தமான பயிற்சிகளுக்காக றஹீம் 2001 இல் இந்தியாவிலும் 2010 இல் மலேஷியாவிலும் நடைபெற்ற கருத்தரங்குகளில் கலந்து கொண்டார். 2018 இல் மாளிகாவத்தை இஸ்லாமிய நிலையத்தில் ஆரம்பித்த போதைப்பொருள் தடுப்பு சம்பந்தமான தேசிய குழுவில் தனாதிகாரியாகவும் இயங்குகிறார். றஹீம் 1972 முதல் 47 வருடங்களாக பல துறைகளில் அளப்பரிய சமூக சேவை செய்து வருகிறார். றஹீமின் சமூக சேவை பொன்விழா கொண்டாட இன்னும் மூன்று வருடங்கள் இருக்கின்றது.

2004 இல் றஹீம் ஹஜ்ஜூ கடமையை நிறைவேற்றினார். றஹீம் ஹாஜியார் ஆனார். றஹீம் ஹாஜியார் 72 வயது கடந்த நிலையில் மனைவியுடன் கல்கிசையிலுள்ள வீட்டில் வசித்து வருகிறார். நோயின்றி நீடூழி வாழ அல்லாஹ்; கிருபை செய்வானாக.

ஆமீன்.

2 comments:

  1. Yes, indeed, he is a person with a good heart.

    ReplyDelete
  2. Excellent article let him carry on his work for long wish him good luck

    ReplyDelete

Powered by Blogger.