Header Ads



யாழ்ப்பாண முஸ்லிம்களில் வணிகத்துறையில், முதலாவது பட்டதாரியான MAC அப்துல் ஸலாம்

- பரீட் இக்பால் -

1955 இல் மாணவர் பருவத்தில் யாழ் முஸ்லிம்களின் விளையாட்டு திறமைகளை ஊக்குவிக்கும் நோக்கத்தில் யாழ் முஸ்லிம் மாணவர் சங்கம் என்ற அமைப்பை ஸ்தாபித்து வருடாந்த விளையாட்டு போட்டிகளை ஏற்பாடு செய்து நடாத்திவந்ததுடன்  கிரிக்கட், உதைப்பந்தாட்டம் போன்ற விளையாட்டுகளை பயிற்றுவித்து மாணவர்கள் பாடசாலைகளில் சிறந்த விளையாட்டு சாதனையாளர்களாக உருவாக்கியவர் எம்.ஏ.ஸிஅப்துல் ஸலாம் ஆவார்.

யாழ்ப்பாணம் சோனகத் தெருவைச் சேர்ந்த மொஹிடீன்  அப்துல் காதர் - ஆமினா உம்மா (முத்தும்மா) தம்பதியினருக்கு 1938 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஐந்தாம் திகதி அப்துல் ஸலாம் பிறந்தார்.

அப்துல் ஸலாமின் தந்தையார் மொஹிடீன் அப்துல் காதர் ஒரு பிரபல வர்த்தகரும் மார்க்க அறிவும் மார்க்கப் பற்றும் உடைய ஒருவராவார். அப்துல் ஸலாமின் தந்தையார் சாவகச்சேரி, மார்க்கெட்டில் 'அப்துல் ஸலாம் அன் கோ' எனும் பெயரில் ஒரு புடைவைக் கடை வைத்து வியாபாரம் செய்த ஒரு வர்த்தகராவார்.

அப்துல் ஸலாம் ஐந்தாமாண்டு வரையாழ். முஹம்மதிய்யா கலவன்  பாடசாலையில் (அல்லாஹ்பிச்சை பள்ளி) கல்வி கற்று. ஆறாம் ஆண்டு தொடக்கம் எஸ்.எஸ்.ஸி.வரை யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் கல்வி கற்றார். அதன் பின்னர் அப்துல் ஸலாம் எச்.எஸ்.ஸி. கல்வி கற்பதற்காக யாழ் சென்ஜோன்ஸ் கல்லூரியில்  அனுமதி பெற்று கல்வி கற்று சித்தியடைந்தார்.

1955இல் மாணவர் காலத்தில்  அப்துல் ஸலாம் ஏ.எச்.ஹாமீம்,எம்.எம்.மக்பூல்,எம்.எஸ். அமானுல்லாஹ்;,எம்.ஜி.சலீம் மற்றும் எம்.ஜி.பசீர் என். எம். எஸ். சுபைர் ஆகியோருடன் இணைந்து யாழ் முஸ்லிம்களின் விளையாட்டு திறமைகளை ஊக்குவிக்கும் நோக்கில் யாழ்.முஸ்லிம் மாணவர்கள் சங்கம் ஒன்றை ஸ்தாபித்தார். இச் சங்கத்தின்  போசகர்களாக அபுஸாலிஹ் ஹாஜியாரும் சேகுமதாரும் ஒத்துழைப்பு வழங்கினர்.

வருடம் தோறும் மாணவர்கள் இரு பிரிவுகளாக பிரித்து, ஜெஸ்மின் இல்லம்,பிறிம் றோஸ் இல்லம் என்று பெயருமிட்டு ஜெஸ்மின் இல்லத்திற்கு அப்துல் ஸலாமும் பிறிம்றோஸ் இல்லத்திற்கு ஏ.எச். ஹாமீமும் பொறுப்பெடுத்து நடாத்தி வெற்றியீட்டிய மாணவர்களுக்கு பரிசுப் பொருட்களும் வழங்கி வந்தார்கள்.

மேலும் மாலை நேரங்களில் ஜின்னா மைதானத்தில் இரு பிரிவுகளாக பிரிந்து கிரிக்கெட்,உதைப்பந்தாட்ட போட்டிகளில் விளையாடுவார்கள். இவர்களுடன் முன்னாள் யாழ்.மேயரும் குவாஸியுமான சுல்தான் அவர்களுடைய பிள்ளைகளான அமீர்அலி,ஹமீட்அலி,அபூபக்கர் ஆகியோரும் கிரிக்கெட் விளையாடுவார்கள். 

அப்துல் ஸலாமிற்கு 1958 இல் புத்தளத்தில் கரைத்தீவு, முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் ஆசிரிய நியமனம் கிடைத்தது. சுமார் ஒரு வருடம் ஆசிரியராக கடமையாற்றினார். 1959 இல் அப்துல் ஸலாம் வணிக பட்டதாரி ஆகுவதற்கு திருச்சி சென் ஜோஜப் கல்லூரியில் அனுமதி பெற்று கற்று 1963 இல் வணிகத்துறையில் பட்டதாரியானார். அப்துல் ஸலாம் யாழ் முஸ்லிம்களில் வணிகத் துறையில் பட்டதாரியான முதலாவது வணிகபட்டதாரி என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

பட்டதாரியாகியதும் அப்துல் ஸலாம் 1963 தொடக்கம் 1966 வரைமருதானையிலுள்ள டி.பி.அப்துல் றஹ்மான் நிறுவனத்தில் மனேஜராக கடமையாற்றினார்.

1966 – 1972 வரை பேருவளை அல்ஹூமைஸரா, தர்ஹா நகர் ஸாஹிரா கல்லூரி, யாழ் கனகரத்தினம் ஸ்ரான்லி கல்லூரி ஆகிய கல்லூரிகளில் அப்துல் ஸலாம் பட்டதாரி ஆசிரியராக கடமையாற்றினார்.

அப்துல் ஸலாம் 14.06.1968 இல் அல்லாஹ்பிச்சை பள்ளி முகாமையாளர் எம். எம் ஸதக்கத்துல்லாஹ் அவர்களின் மகள் ஹவ்லாவை திருமணம் செய்தார். ஹவ்லாஅப்துல் ஸலாம் ஒருபட்டதாரி மனையியல் ஆசிரியை ஆவார்.

அப்துல் ஸலாமின் மூன்று சகோதரிகள் சுபைதா அப்துல்கபூர், றஸீனா அப்துல் றஹீம், றாபியா ஹனீபா ஆகிய மூவரும் ஆசிரியைகள் என்பதும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.

அப்துல் ஸலாம்; - ஹவ்லா தம்பதியினருக்கு முத்தான ஒரு பெண் பிள்ளையும் (ஸமாஹா) இரு ஆண் பிள்ளைகளும் (ஸப்வான், ஸகீல் துர்ரானி) உள்ளனர்.

மகள் ஸமாஹா அமெரிக்காவில்  யூனிவெர் சிட்டியில் கொம்பியூட்டர் ஸயன்ஸ்  கல்வி கற்றார்.

மகன் ஸப்வான்,லண்டனில் யூனிவெர்சிட்டியில்; எலக்ட்ரிக்  எஞ்ஜினியர் கல்வி கற்றார்.

அடுத்த மகன் ஸகீல் துர்ரானி அமெரிக்காவில் யூனிவெர் சிட்டியில்  விருந்தோம்பல் துறையில் பட்டதாரியானார் என்பதும் குறிப்பிடத்தக்க விடயங்களாகும்.
அப்துல் ஸலாம் 15.06.1972 இல் யாழ்ப்பாணம்,வவுனியா,மன்னார்,முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய வட பிராந்தியத்தின் வணிகக்கல்வி துறைக்கு பொறுப்பான கல்வி அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.
அப்துல் ஸலாம் எஸ்.எல்.ஈ.ஏ.எஸ் தகைமை பெற்று உதவிக் கல்விப் பணிப்பாளர் பதவியில் சேவையாற்றி ஓய்வுபெற்றார்.
அப்துல் ஸலாம் 1984 ஆம் ஆண்டு முதல் சுமார் இருபது வருடங்கள் புறூனை நாட்டில் தாருஸ்ஸலாம் பந்தர் சிறீபகவான் மாட்சிமை தங்கிய மகாராணியார் (ராஜஸ்திரி) பெண்கள் உயர்நிலை கல்லூரியில் வணிகக் கல்வித் துறைக்கு பொறுப்பாளராக பணியாற்றினார்.

1978 இல் யாழ். முஸ்லிம்களுக்கு நாவாந்துறையிலுள்ள திமிலர்களுக்கு மிடையே கலவரம் ஏற்பட்டதில் பொம்மை வெளியில் 38 வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டன. இவர்களுக்கு நிவாரணம் பெற்றுக் கொடுப்பதற்காக நீதியரசர் எம்.எம்.அப்துல் காதர் அவர்களின் வழிகாட்டலில் யாழ். முஸ்லிம் அபிவிருத்திச் சங்கம் என்ற ஓர் அமைப்பு உருவானது. இச் சங்கத்திற்கு தலைவராக எம்.எம். மக்பூலும் செயலாளராக அப்துல் ஸலாமும் செயலாற்றி இலட்சக்கணக்கான ரூபா பெறுமதி வாய்ந்த திட்ட நடவடிக்கைகளுக்கு உதவினர்.

அப்துல் ஸலாம் தனது மனைவியுடன் 1994 இல் ஹஜ்ஜூ செய்தார். அப்துல் ஸலாம், அப்துல் ஸலாம் ஹாஜியார் ஆனார். ஹவ்லா அப்துல் ஸலாம், ஹாஜியாணி ஹவ்லா அப்துல் ஸலாம் ஆனார்.

ஜே.எம்.ஆர்.ஓ அமைப்பில் செயற் குழு உறுப்பினர்களில் அப்துல் ஸலாம் ஒருவராக இருந்து 'யாழ் முஸ்லிம் வரலாற்றுப் பார்வை'எனும் மலர் உருவாகுவதற்கும் கட்டுரைகள் எழுதி உதவி புரிந்தார் என்பதும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.

தற்போது அப்துல் ஸலாம் 81 வயது கடந்த நிலையில் மனைவியுடன் தெஹிவளை கவுடான வீதியிலுள்ள வீட்டில் வசித்துவருகிறார். அப்துல் ஸலாம் நோயின்றி நீடுழி வாழ அல்லாஹ் அருள் புரிவானாக. 

ஆமீன்.

4 comments:

  1. The association established by Hameem, Salam, Sabir, Magbool and others are known as Jaffna Muslim Sports Association, not Jaffna Muslim Students Association as mentioned. Jinnah grounds didn’t have matting facilities so could not use real cricket balls, so cricket was played with cork ball without gloves and leg pads. Nobody cared about possible injuries.

    ReplyDelete
  2. Thank you Iqbaal for writing this kind of narratives. My house was very close to their meeting place, got chance to receive their guidance.( Haameem master, Salaam master, GA Magbool, Muhuthaar master). These intellectuals are exemplary and the younger generation should get some guidance out of it.koodos.

    ReplyDelete
  3. மிக முக்கியமான சமூக வரலாற்று பதிவு

    ReplyDelete
  4. I remember Salam Master, being a student of Al-Humaisara [then Chinafort MMV] he had been teaching us Economics for us at the O/Levels, of course with an Indian accent of English words. I visited him in his retirement at his home close to Osmaniya college, Jaffna, would like to meet him at Kawdana Rd, if his address could be given; however thanks for the info Bro. Iqbal.

    ReplyDelete

Powered by Blogger.