Header Ads



பங்களாதேஷ் அணியின், நியூசிலாந்து சுற்றுப்பயணம் இரத்து


நியூசிலாந்து பள்ளிவாசலில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில், பங்களாதேஷ் கிரிக்கெட் வீரர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பியதைத் தொடர்ந்து அந்த அணியின் சுற்றுப்பயணம் இரத்து செய்யப்பட்டுள்ளது.

பங்களாதேஷ் கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடியது. இரு அணிகளுக்கிடையிலான 3வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கிறிஸ்ட்சர்ச் நகரில் உள்ள ஹேக்லி ஓவல் மைதானத்தில் இன்று -16- தொடங்க இருந்தது. இதற்காக இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சி மேற்கொண்டனர்.

இந்நிலையில், நேற்று தொழுகைக்காக கிறிஸ்ட்சர்ச் நகரில் உள்ள மைதானத்தின் அருகே உள்ள பள்ளிவாசலுக்கு சென்றனர். அப்போது பள்ளிவாசலுக்குள்  பயங்கரவாதி துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினார். உள்ளே துப்பாக்கி சூடு சத்தம் கேட்டதும், கிரிக்கெட் வீரர்களை அதிகாரிகள் அவசரம் அவசரமாக வெளியே அழைத்து வந்தனர். வேகவேகமாக அருகில் இருந்த பூங்கா வழியாக சென்று, மைதானத்தை அடைந்தனர். பின்னர் அங்கிருந்து ஹோட்டலுக்குச் சென்றனர்.

வீரர்கள் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாக அணியின் செய்தித் முகாமையாளர் உறுதி செய்தார். இருப்பினும், இந்த சம்பவத்தால் வீரர்கள் மனதளவில் அதிர்ச்சி அடைந்திருப்பதாக கூறினார். வீரர்கள் யாரும் ஹோட்டலை விட்டு வெளியே வரவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பள்ளிவாசலுக்குள் நடந்த துப்பாக்கி சூட்டில் பலர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் அங்கு ஏராளமான பொலிஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. நகரம் முழுவதும் பதற்றமான சூழல் நிலவுகிறது. எனவே, இன்று நடைபெற உள்ள மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியை இரத்து செய்வதாக பங்களாதேஷ் கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது. இதன்மூலம் நியூசிலாந்து சுற்றுப்பயணமும் முடிவுக்கு வந்துள்ளது.

No comments

Powered by Blogger.