Header Ads



மசூதி தாக்குதல்களில், வீரமரணமடைந்த இந்தியர் விபரம் - குடும்பங்களின் சோகக் கதைகள்

நியூசிலாந்தில் இருவேறு மசூதிகளில் நடத்தப்பட்ட துப்பாக்கி தாக்குதல்களில் இந்தியர் ஒருவர் உயிரிழந்துள்ளார் என பிபிசிக்கு தெரியவந்துள்ளது.

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தை சேர்ந்த 31 வயது ஃபராஜ் ஆஷன் நியூசிலாந்தின் கிழக்கு கடலோர நகரமான கிரைஸ்ட்சர்ச்சிலுள்ள இருவேறு மசூதிகளில் நேற்று (வெள்ளிக்கிழமை) பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் உயிரிழந்துள்ளார் என தெரியவந்துள்ளது.

இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 49 பேர் உயிரிழந்தனர். இந்தியர்கள் சிலர் பலியாகி இருக்கலாம் என்று கூறப்பட்ட நிலையில் ஃபராஜ் ஆஷன் குறித்த செய்தி வெளியாகியுள்ளது.

"ஆஷனுக்கு நான்கு வருடங்களுக்கு முன் திருமணம் நடைபெற்றது. அவருக்கு மூன்று வயதில் ஒரு பெண் குழந்தையும், 6 மாத கைக்குழுந்தையும் உள்ளனர். அவர் வெள்ளிக்கிழமை தொழுகைக்காக அன்னூர் மசூதிக்கு சென்றுள்ளார். இந்த நிகழ்வு குறித்து தெரியவந்ததும் அவரின் மொபைலுக்கு அழைத்தேன். ஆனால் எந்த பதிலும் இல்லை. இதைக்கேட்டு எனது மனைவி படுத்த படுக்கையாகிவிட்டார்." என்று ஃபராஜின் தந்தை பிபிசி தெலுகு சேவையின் சங்கீதம் பிரபாகரிடம் முன்னதாக தெரிவித்திருந்தார்.

மேலும் இந்த சம்பவத்தில் ஹைதாரபாத்தை சேர்ந்த அகமத் இக்பால் ஜஹான்கீரும் காயமடைந்துள்ளார்.

"எனது சகோதரர் 15 வருடங்களாக அங்கு குடும்பத்துடன் வசித்து வருகிறார். பல வேலைகளை செய்து வெற்றிபெற முடியாமல் அனைத்தையும் விடுத்து அவர் ஆறு மாதங்களுக்கு முன் ஓர் உணவு விடுதியை தொடங்கினார். எனது சகோதரர் இந்த துப்பாக்கிச் சம்பவத்தில் பலமாக காயமடைந்துள்ளார். ஆனால் அறுவை சிகிச்சையில் குண்டு அகற்றப்பட்டு தற்போது மெதுவாக குணமடைந்து வருகிறார்."

"எனது தாயிடம் அவர் வெள்ளியன்று பேசினார். எனது தாய்க்கு 80 வயது அவரால் இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து தாங்கி கொள்ள முடியாது. ஆனால், தற்போது அவருக்கு விஷயம் தெரிந்துவிட்டது. தெரிந்த நேரத்தில் இருந்து அதிர்ச்சியில் உள்ளார்" என்கிறார் காயமடைந்த அகமத் இக்பால் ஜஹான்கிரீன் சகோதரர் குர்ஷித் ஜஹான்கீர்

No comments

Powered by Blogger.