Header Ads



அந்தக்காட்சி ஒருகணம் என், இதயத்துடிப்பை ஸ்தம்பிக்கச் செய்தது

துப்பாக்கிச் சூட்டிற்கு உள்ளாகிய தந்தை, தான் இறுதி மூச்சுக்கு போராடிக்கொண்டிருப்பதையும் மறந்து தன்னோடு தொழுகைக்கு அழைத்து வந்த தன் குழந்தையை இறுகியணைத்தபடி அதனைப் பாதுகாக்க போராடிக் கொண்டிருந்த அந்த நொடிகள்.... கண்கள் எனையறியாமலே குளமாகின.

நியூசிலாந்து சம்பவம்; 
இறையோனிடம் மீண்ட எம் சகோதர உறவுகளின் ஒளிமயமான மறுமை வாழ்க்கைக்கும், 
தம் உடன் பிறப்புக்களையும் உறவுகளையும் எதர்பாராவிதமாய் நிரந்தரமாய் இழந்து பரிதவிக்கும் அந்த மக்களின் மன அமைதிக்குமாய், 
என்னிறைவனிடம் மன்றாடிப் பிரார்த்திப்பதைத் தவிர....
என்னால் எதுவும் செய்ய முடியாமலிருக்கிறேன்...

ஒரு வகையில் அவர்கள் பாக்கியசாலிகள்! இறை இல்லத்தில், வெள்ளிக் கிழமை ஜும்ஆ தொழுகைக்காக கூடியிருந்த பொழுதில், முஸ்லிமென்ற ஒரே காரணத்திற்காய் கொல்லப்பட்டார்கள். அவர்களது மறுமை வாழ்க்கை நிச்சயம் பலமடங்கு பாக்கியங்கள் நிறைந்ததாகத்தான் இருக்கும்.

ஆனால், அந்தக் காட்சியை கண்ட என் மனம், ஏதோ ஓர் தவிப்பில் தொடர்ந்தும் அலைபாந்துகொண்டிருந்தது. இடையில் சடுதியாய் ஒரு உதிப்பு தோன்றி, ஒரு கணம் மின்சாரத் தாக்கத்திற்கு உட்பட்டது போல், உடம்பை அதிரவைத்தது. அது என்னவென்றால், இதே தந்தை, இன்று, தன் உயிருக்கு மேலாய் தன் குழந்தையை பாதுகாக்க துணிந்த இதே தந்தை, நாளை மறுமையில், குழந்தையென்ன குடும்பமென்ன தன் விமோசனத்திற்காய் இவர்கள் அனைவரையும் புறம்தள்ளிவிட்டு ஓடுவாரே!...

பிறகு மனம் சொன்னது, அவரது  மட்டுமல்ல எனது நிலமையும் அதே தான் என்று!!! மரணம் வரைதான் எல்லா உறவுகளும் கைதருவார்கள். மரணத்திற்குப்பிறகு தனியாய்... தட்டத் தனியாய் தான் பயணிக்க வேண்டியிருக்கிறேன். 
அதனை விட அகோரம் தான் மறுமை நாளின் காட்சி. சொந்த தாய் கூட ஏறெடுத்துப் பார்ப்பதை விட்டு, தனக்காய் என்று ஓடுவாள்.! தாயே இப்படியென்றால் மற்றவர்களை கேட்கவா வேண்டும்... அது தான் அந்த நாள்!!!

கொஞ்சம் கண்களை மூடி நினைத்துப் பார்த்தேன். 
எனது மரணம் இன்று சம்பவித்திருந்தால்.... 

நிச்சயமாய் என் ரப்பை சந்திக்க நான் தயாராயிருக்கவில்லை!!! 

எம்மைவிட்டு பிரிந்து சென்ற அந்த உறவுகளுக்கு மானசீகமாய் மீண்டுமொருமுறை கண்ணீர் மல்க பிரார்த்தித்தேன், மரணம் எந்த நேரத்தில், எந்த வடிவத்தில், எப்படியும் வரலாம் என்ற மாபெரும் உண்மையை அவர்கள் நினைவுபடுத்தி... உறங்கிக்கொண்டிருந்த என்னை தட்டி எழுப்பியதற்காய்....

அவர்கள் சென்று விட்டார்கள்:
 உலகின் கண்களுக்கு பலமாய் ஒரு செய்தியை விட்டுவிட்டு...
அதேபோல் எம்முள்ளங்களுக்கு; அவர்கள் முந்திவிட்டார்கள், நாமும் அவர்களை தொடர இருக்கிறோம் என்பதையும் பலமாய் உணர்த்திவிட்டு...

உங்கள் மறுமை வாழ்வு பலகோடி பாக்கியங்கள் நிறைந்ததாய் அமையட்டும். உங்கள் குடும்பங்களுக்கு இறைவன் மன அமைதியையும் ஆறுதலையும் அழகிய பொறுமையையும் அருளட்டும்!
ஆமீன்!

Binth RHA
15/03/2019

1 comment:

Powered by Blogger.