Header Ads



கிழக்கு முஸ்லிம்களுக்கான தலைமைத்துவம்

- அபூ ஸீனத் -

கிழக்கு மாகாண முஸ்லிம்களின் தலைமைத்துவம் மறைந்த தலைவர் அஷ்ரபிற்குப் பின்னர் இன்னும் முறையாக நிரப்பப்படவில்லை எனும் ஈறல் கிழக்கு மாகாண முஸ்லிம்களின் மனதளவில் இன்னும் காணப்படுகிறது. ஒரு சமூகம் எவற்றையெல்லாம் தங்களது தலைவனிடம் எதிர்பார்க்குமோ அவற்றை நிவர்த்திப்பதில் மர்ஹூம் அஷ்ரப் அவர்களின் வகிபாகம் இன்றியமையாதது. தெங்கிழக்குப் பல்கலைக்கழகம், தொழில் வாய்ப்பு, முஸ்லிம்களுக்கென ஸ்திரமான கட்சி என அடுக்கிக் கொண்டே போகலாம். தென் கிழக்குப் பல்கலைக்கழகம் உருவாக்கிய ஏராளமான கல்விமான்கள் பெரும் சாட்சி.

இத்தகைய சூழ்நிலையில் தற்போது அந்த இடைவெளியினைப் பூர்த்தி செய்வதாக பலர் தோற்றமளித்தாலும் அவர்கள் “காத்துக் கட்டி”யாகவே உள்ளனர். முன்னாள் அமைச்சர் அதாவுல்லாஹ் அந்த முயற்சியில் சிலதை செய்து காட்டினார், ஆனால், நிலைபேறாக அவரால் அதனை முன்னெடுக்க முடியவில்லை. அவரது பொடுபோக்குத்தனம் அதற்குக் காரணமாக இருக்கலாம். அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் றிஷாட் பதியுத்தீன் அதற்கு முயற்சிக்கிறார், அந்தக் கொள்ளளவும் அவரிடம் இருகிறது. இருப்பினும் அவர் அதற்குரிய வழிகளில் முயல்வதாகத் தெரியவில்லை.

அமைச்சர் ரவூப் ஹக்கீம் தான் அந்தப் பணியைப் புரிவதாக காட்டிக் கொள்கிறார். மர்ஹும் அஷ்ரபின் இடத்தில் தான் இருப்பதால் அதனை அவர் நியாயிக்க முயற்சிக்கிறார். இருப்பினும், இருபத்தி மூணாம் புலிகேசி திரைப்படத்தில் வடிவேலு செய்யும் மன்னன் ராஜ தந்திரங்கள் எப்படி எமக்கு நகைச்சுவையாக இருந்தனவோ அதனை விடவும் விகடமாக நமக்குத் தென்படுகிறது. 15 வருடங்களுக்கும் மேலாக அவர் அவ்வாறு நடந்து கொள்வதனால் எமக்கு அப்படித் தென்படுகிறதோ என்னவோ. ஒரு சமூகத்தை படு மோசமாக ஏமாற்றி வரும் தலைவர் ரவூப் ஹக்கீமாகத்தான் இருக்க முடியும். கோட் அணிவது, வெளிநாட்டுப் பயணம், சொகுசு வாழ்க்கை என்பனவற்றை அனுபவித்ததைத் தவிரவும் ஆக்க பூர்வமான கருத்திட்டங்கள் எதனையும் முன்னெடுக்காத தலைவர் இவரே.

இந்த வியாக்கியானங்களின் அடிப்படையில், கிழக்கு மாகாணம் - காத்தான்குடியைச் சேர்ந்த கௌரவ ஆளுனர் ஹிஸ்புல்லாஹ்வினை சற்று மாறுபட்ட கோணத்தில் பார்க்க முடிகிறது. முதல் முறையாக கிழக்கு மாகாணத்திற்கு அதே மாகாணத்தைச் சேர்ந்த ஒரு தமிழ் பேசும் முஸ்லிம் ஒருவர் ஆளுனராக நியமிக்கப் பட்ட சந்தர்ப்பம் இதுவாகும். 2015 ஆம் ஆண்டு நடந்த பொதுத் தேர்தலில் போட்டியிட்டு சொற்ப வாக்குகளால் தோல்வியடைந்த இவர் மூன்றரை வருடங்கள் முடிவடையும் முன்னர் பாராளுமன்ற உறுப்பினராக, பிரதி அமைச்சராக, ராஜாங்க அமைச்சராக, அமைச்சரவை அமைச்சராக மற்றும் ஆளுனராக பதவிகளைப் பெற்றிருக்கிறார். தேர்தலில் தோற்ற ஒருவர் குறுகிய காலங்களில் இத்தனை உயர் பதவிகளையும் பெற்றிருப்பது அவரின் ஆளுமைக்கு உயரிய சான்றாகும்.

ஆளுனராகப் பதவியேற்று இரண்டு மாதங்கள் கூடக் கடக்காத நிலையில் மிக வேகமாக சேவைகளை ஆற்றி வருகிறார். கிழக்கு மாகாண வளர்ச்சிக்கு இரவு பகலாக பாடு படுகிறார்.  அவரது சொந்த மாகாணமாக இருப்பதே இந்தப் பற்றுக்குக் காரணமாக இருக்கலாம். இனி வரும் காலங்களில் ஆளுனர் பதவிக்கு சொந்த மாகாண ஆளுமைகளை நியமிப்பது வினைத்திறனாக இருக்கும் என்பதற்கு ஆளுனர் ஹிஸ்புல்லாஹ் சிறந்த எடுத்துக் காட்டாகும். ஒரு வருடமே அவருக்கு இருக்கும் சாத்தியமுள்ள நிலையில் முதல்வன் அர்ஜுனின் ஒரு நாள் முதல்வன் பாணியில் அவர் இயங்குவது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.

இத்தகைய ஆய்வுப் பின்னணியில், கிழக்கு மாகாண முஸ்லிம்களின் தலைமைத்துவத்தை ஹிஸ்புல்லாஹ்வுக்கு ஏன் வழங்கிப் பார்க்கக் கூடாது என்ற வினா எழுவதைத் தவிர்க்க முடியவில்லை. ஒரு ஆளுனராக அவர் ஆற்றும் பணிகளை நோக்குமிடத்து ஒரு தலைவராக அவரால் தொடர்ந்தும் பயணிக்க முடியும் என்ற நம்பிக்கை விதைகள் தென்படுகின்றன.

காற்றுள்ள போதே தூற்றிக் கொள்ள வேண்டும். மக்கள் இது பற்றி ஆழமாக சிந்திக்க வேண்டும். தமக்கான தலைமைத்துவம் இல்லையே என அங்கலாய்த்து தலைவிரி கோலமாகுவதை விடுத்து, சிறந்த தீர்வினைத் தேட முயற்சிக்க வேண்டும். ஹிஸ்புல்லாஹ் அல்லது அவர் போன்ற கிழக்கு ஒருவரைத் தலைவராகக் கொண்டு அதாவுல்லாஹ், ஹசன் அலி, பஷீர் சேகு தாவூத், அலி சாஹிர் மௌலானா, பைசால் காசிம், மன்சூர், ஹரீஸ், நசீர், இஸ்மாயில் என அனைத்து அரசியல்வாதிகளும் அணி திரள வேண்டும்.

கிழக்கு மாகாண மக்களின் வாக்கினை கிழக்கின் அபிவிருத்திக்கான மூலதனமாக மாற்றி கல்வி, பொருளாதாரம், வாழ்க்கைத்தரம் என அனைத்து அம்சங்களிலும் கிழக்கு மாகாணம் வளர்ந்து ஏனைய மாகணங்களுக்கும் முன் மாதிரியாகத் திகழ வேண்டும். கிழக்கு மக்களை கிழக்கு மக்களே ஆளும் அறம் பொருந்திய ஆட்சி வரம் பெற்றவர்களாக நாம் மாற வேண்டும்.


5 comments:

  1. We need a person immediately to take over the leadership of the Eastern Muslims. There is a say " EAST OR WEST HOME IS BEST" . However it should be decided by the people concerned.

    ReplyDelete
  2. We agreed and absolutely true this message. All politicians should realize the hard work and best effort about Minister Al haj Hisbullah

    ReplyDelete
  3. We agreed and absolutely true this message. All politicians should realize the hard work and best effort about Minister Al haj Hisbullah

    ReplyDelete
  4. it may perceptions of a person. but dividing muslims province wise or any other identities are should be condemns because it is anti Islamic tradition...

    ReplyDelete

Powered by Blogger.