Header Ads



இலங்கை முஸ்லிம்கள், ஜெனீவா செல்கிறார்கள்...?

இலங்கை பல மொழி பேசுகின்ற, பல் இன சமூகத்தைக் கொண்ட நாடு. ஆங்கிலேயர் இலங்கையை கைப்பற்றிய காலம் முதல் காலத்துக்குக் காலம் பல இன முரண்பாடுகள் தோன்றியுள்ளன. 1915ஆம் ஆண்டு முஸ்லிம் சிங்கள கலவரம், சேகுவேரா போராட்டம் (ஜே.வி.பி.யினர்) அதேபோல் தமிழர் தனிநாட்டுக் கோரிக்கைப் போராட்டம் என பல போராட்டங்கள் நடந்தேறியுள்ளன.

அதேநேரம், தமிழீழத் தனிநாடு கோரி போராடிய விடுதலைப் புலிகள் வடகிழக்கில் வாழ்கின்ற சிறுபான்மை முஸ்லிம்களை கொன்று குவித்தார்கள். காத்தான்குடியில் இருந்து ஹஜ்ஜு சென்று திரும்பியவர்களின் படுகொலை (குருக்கல்மடம்), காத்தான்குடி பள்ளிவாசல் படுகொலை, அளிஞ்சிப்பொத்தானை படுகொலை, ஏறாவூர்ப் படுகொலை, பல முஸ்லிம் கல்விமான்கள், செயற்பாட்டாளர்களின் படுகொலை என கொன்று குவித்தார்கள்.

அதேபோல், தென்னிலங்கையில் ஒரு காலத்தில் புரட்சியின் மூலமே ஆட்சியைக் கைப்பற்ற வேண்டும் என்ற நோக்கில் சேகுவேரா போராட்டத்தில் ஈடுபட்ட சிங்கள இளைஞர்கள் (ஜே.வி.பி) பல முஸ்லிம்களைக் கொலை செய்தார்கள்.

இவைகளுக்கு அப்பால், தொடர்ச்சியாக தென்னிலங்கையில் வாழ்கின்ற சிறுபான்மை முஸ்லிம்களின் உடமைகள் சிங்கள பேரினவாத சக்திகளினால் தீயிட்டு அழிக்கப்பட்டன (அளுத்கம, திகன). மதஸ்தலங்கள் கடுமையாக தாக்கப்பட்டன. தொழில்தளங்கள் எரிக்கப்பட்டன.

இவ்வாறு நாளாந்தம் வேதனைக்கு மேல் வேதனைகளை சந்தித்த இலங்கை முஸ்லிம்கள் தொடர்ந்தும் இலங்கைக்குள்ளேயே நீதியை வேண்டி நின்றார்கள். இலங்கை நீதித்துறை மீது அதீத நம்பிக்கை கொண்டிருந்தார்கள். எந்த சந்தர்ப்பத்திலும் சர்வதேச நீதியையோ, கலப்பு நீதிமன்ற முறையையோ வேண்டி நிற்கவில்லை.

நிலைமாறு காலமும் முஸ்லிம்களும்

ஆனால், நிலைமாறுகால நீதி என்பது பொறுப்புகூறல், நீதியை அடைதல், நஷ்டஈடு வழங்குதல், உத்தரவாதம் அளித்தல். பாதிக்கப்பட்ட தரப்பிற்கு பாதிப்பை ஏற்படுத்திய தரப்பு பொறுப்புக் கூறு வேண்டும்.

இந்நிலைமாறு நீதியை நடைமுறைப்படுத்தும் நோக்கத்தோடு 2015 செப்டெம்பர் மாதம் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் 30/1 தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இத்தீர்மானத்திற்கு இலங்கை அரசாங்கம் இணை அனுசரணை வழங்கியது. அதன் படி நிலை மாறுகால நீதியை ஸ்தாபிப்பதற்கென்று ஏறக்குறைய 25 பொறுப்புக்களை அரசாங்கம் ஏற்றுக் கொண்டது. இப் பொறுப்புக்களில் பெரும்பாலானவற்றை 2017 ஆம் ஆண்டுவரை அரசாங்கம் நிறைவேற்றி இருக்கவில்லை.

மீண்டும் 2017 இல் மற்றொரு தீர்மானத்தின் மூலம் அரசாங்கத்திற்கு இரு ஆண்டுகள் கால அவகாசம் வழங்கப்பட்டது. இந்த அவகாசம் 2019 மார்ச் மாதத்தோடு முடிவடைகிறது. இக்காலப் பிரிவில் இலங்கை முஸ்லிம்களுக்கு பாரிய பாதிப்புக்கள் ஏற்பட்டன.

ஆனால், அரசாங்கத்தின் நிலைமாறு கால நீதி தொடர்பான எந்தத் திட்டத்திலும் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட இலங்கையர் என்ற வகையில் முஸ்லிம்கள் உள்ளடக்கப்படவில்லை. 1990 ஆம் ஆண்டு வெளியேற்றப்பட்ட வடமாகாண முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் இன்னும் கேள்விக்குறியாகவே இருக்கின்றது. அவர்களின் மீள்குடியேற்றத்தை துரிதப்படுத்துவதாக இருந்தால், புத்தளம் மன்னார் வீதி திறக்கப்பட வேண்டும். இவ்வீதி குறித்து அரசாங்கத்திடம் எந்தத் திட்டத்தையும் முன்வைக்கவில்லை. அதேபோல், 1990 ஆம் ஆண்டுக்கு முன்னர் முஸ்லிம்கள் வாழ்ந்து காணிகள் இன்னும் அரச பாதுகாப்புப் படையினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. அவைகள் விடுவிக்கப்பட வேண்டும். (சிலாபத்துறை கடற்படை முகாம் அமைந்துள்ள இடம்). மாறாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க கூறுகிறார் ”போதைப் பொருட்கள் கடத்தல் நடைபெறுவதால், அக்கடற்படை முகாம்களை அகற்ற முடியாது“ என்று.  மேலும், முல்லைத்தீவு, யாழ்ப்பாண முஸ்லிம் மக்களின் மீள்குடியேற்றத்திற்கு அங்குள்ள நிர்வாகம் பல தடைகளை விதிக்கிறார்கள். அவர்களின் மீள்குடியேற்றத்திற்கு காணி பாரிய பிரச்சினையாக உள்ளது.

இவர்களும் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் என்ற முறையில், நிலைமாறு கால நீதியில் என்ன தீர்வை அரசாங்கம் முன்வைத்துள்ளது. இவர்களுக்கான நஷ்டஈடு எவ்வாறு வழங்கப் போகிறது?

1988 – 1991 காலப் பகுதியில் பல முஸ்லிம்கள் விடுதலைப் புலிகளால் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டார்கள். முஸ்லிம்களில் காணாமல் போனவர்களின் குடும்பத்திற்கு உண்மையைக் கண்டறியும் விடயத்திற்கு அரசாங்கம் எவ்வாறு பதிலளிக்கப் போகிறது?

அதேபோல், கிழக்கு மாகாணத்தில் விடுதலைப் புலிகளால் கொலை செய்யப்பட்ட முஸ்லிம்களுக்கு என்ன நஷ்டஈட்டை வழங்கப் போகிறது? அவர்களின் கொலையை யார் பொறுப்பேற்றல்? புலிகள் செய்த கொலைகளை அரசாங்கம் பொறுப்பேற்குமா? அதேபோல் வடக்கு முஸ்லிம்களின் வெளியேற்றத்தை அரசாங்கம் பொறுப்பேற்று மன்னிப்புக் கோருமா? அல்லது தமிழ்த் தரப்பு இவைகளைப் பொறுப்பேற்குமா?

(குறிப்பு – தற்போது வடக்கு கிழக்குப் பகுதியில் நிருவாகிகளால் முஸ்லிம்களுக்கு நடக்கும் அநியாயம், பாகுபாடு, ஒடுக்குமுறை என்பவை இன்னுமொரு சோகக் கதை)

இவைகளுக்கு அப்பால், அளுத்கமை, காலி, திகன போன்ற பிரதேசங்களில் முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொண்ட இனச்சுத்திகரிப்பு செயற்பாட்டை அரசாங்கம் எவ்வாறு நோக்குகிறது? அதனை எங்கு கொண்டு சொல்ல வேண்டும்? அதில் பாதிக்கப்பட்டவர்களுக்கான தீர்வு என்ன?

ஜெனீவாவும் முஸ்லிம்களும்

1915 ஆம் ஆண்டு முதல் தொடர்ந்தும் இலங்கை சிறுபான்மை முஸ்லிம்கள் வடகிழக்கில் தமிழ்த் தரப்பினாலும், தென்னிலங்கையில் வாழுகின்ற சிறுபான்மை முஸ்லிம்கள் பேரினவாதிகளாலும் ஒடுக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

ஆனால், நிலைமாறு கால நீதியில் இவர்கள் எங்கும் உள்ளடக்கப்படவில்லை. இவர்களுக்கான நஷ்டஈடுகளும் வழங்கப்படவில்லை, பொறுப்புக் கூறுவதற்கும் யாரும் முன்வரவில்லை. அதேநேரம் உண்மையைக் கண்டறிவதற்கான எந்த வாய்ப்புக்களும் இல்லை. அனைவராலும் கைவிடப்பட்ட நிலையில் இருக்கிறார்கள். பொறுப்புக் கூற வேண்டிய அரசாங்கமே மௌனமாக இருக்கின்றது.

நிலைமாறுகால நீதியின் மீதான அவநம்பிக்கையோடு அவர்கள் வாழ்கிறார்கள்? இவ்வாறு பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையைக் கட்டி எழுப்பத் தவறியதற்கு யார் பொறுப்பு? இம்மக்களுக்காக இலங்கை அரசாங்கம் என்ன உத்தரவாதத்தை வழங்கப் போகிறது?

இலங்கை முஸ்லிம்கள் தங்களது பாதிப்புக்களை, ஒடுக்குமுறைகளை, இனத்துவ பாகுபாட்டை ஏன் சர்வதேசத்திடம் கொண்டு சொல்வதில்லை? அது மாத்திரமல்லாமல் புலிகளால் காணாமலாக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் காணாமலாக்கப்பட்டவர்களின் அலுவலகத்தில் ஏன் முறைபாடுகளை முன்வைப்பதில்லை? அதேபோல், எந்தப் பாதிப்பு ஏற்பட்டாலும் அரசாங்கத்திடம் நஷ்டஈடு கோருவதில்லை? அரசாங்கமும் இலங்கை முஸ்லிம்களை வேண்டா வெறுப்போடு நடத்துவதன் நோக்கம் என்ன?

இலங்கை முஸ்லிம்களே…! நீங்கள் அரசாங்கத்திற்கான வரிகள் கட்டுவதில்லையா? அதேபோல் ஜனாதிபதித் தேர்தல், பாராளுமன்றத் தேர்தல், உள்ளுராட்சித் தேர்தல் என்பவற்றில் நீங்கள் வாக்களிப்பதில்லையா? நீங்கள் இந்நாட்டுப் பிரஜைகள் இல்லையா?. இந்நாட்டுப் பிரஜைகள் என்றால் இச்சலுகைகளைப் பெற்றுக் கொள்வதற்கும், நீதியை கோரவும் உங்களுக்கு சம உரிமை உண்டு என்பதை ஏன் உணர்வதில்லை?

இது விடயத்தில் திட்டமிடப்பட்ட ஓர் ஒழுங்கில் ஆதாரங்களைத் திரட்டி, அவற்றின் அடிப்படையில் நிலைமைகளைத் தெளிவுபடுத்தி கோரிக்கைகளை முன்வைத்து அரசாங்கத்தினதும், சர்வதேசத்தினதும் ஆதரவைத் திரட்டுவது இலங்கை முஸ்லிம்களாகிய அனைவர்மீது கடமையாகும். பதிலாக எமது அரசியல் பிரதிநிதிகள் முன்னெடுப்பார்கள் என்று விட்டுவிட்டால் ஒருபோதும் இச்சமூகம் விடியலை நோக்கிப் பயணிக்காது. அவர்கள் தங்களது பாராளுமன்ற கதிரைகளை சூடேற்றுவதற்காகவே அனைத்து விடயங்களையும் முன்னெடுப்பார்கள். அரசியல் செயற்பாட்டு நோக்கத்திலேயே நடவடிக்கைகள் நகர்த்தப்படும் என்பதை பல முறை சுட்டிக்காட்டி இருக்கிறார்கள்.

எனவே, இத்தகைய பொறுப்பற்ற விதத்தில் இலங்கை முஸ்லிம் சமூகம் இருப்பதில் இருந்து விடுபடும் வரையில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியும் நியாயமும் நஷ்டஈடுகளும் கிடைக்கப் போவதில்லை.

2 comments:

  1. Contents of this article has no connection with the title.

    ReplyDelete
  2. சில வருடங்களுக்கு ஜெனிவா தீர்மானங்களை எதிர்த்தவர்கள் இப்போ தங்களையும் சேர்க்க போகிறார்களாம். காமேடி...?

    தமிழர்களுக்கு எதிரிகள் என தங்களை காட்டிக் கொண்டால் மகிந்த ஏதாவது தருவார் முஸ்லிம் மக்கள் நிணைத்தார்கள், கடைசில் சிங்களவர்களிடம் நல்ல அடி தான் வாங்கினார்கள், தமிழர்களின் வெறுப்பையும் பெற்றார்கள்.

    இவர்களுக்கு, ஒரு முஸ்லிம் நாடு கூட ஆதரவாக வாக்களிக்க மாட்டார்கள், கடைசி விவாதத்திற்கு கூட UNHRC யில் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.
    தவிர, இலங்கை அரசாங்கத்தில் இருந்து கொண்டு, அதே அரசாங்கத்திற்கு எதிராக எவ்வாறு தீர்மானங்கள் கொண்டுவர முடியும்?

    ReplyDelete

Powered by Blogger.