Header Ads



ஜனாதிபதித் தேர்தலில் மைத்திரி, மகிந்த, கோத்தபாய ஒரே மேடையில் ஏறுவார்கள்

ஜனாதிபதித் தேர்தல் இந்த ஆண்டு நடைபெறும் எனவும் அந்த ஜனாதிபதித் தேர்தலில் கோத்தபாய ராஜபக்ச, மகிந்த ராஜபக்ச, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆகியோர் ஒரே மேடையில் இருந்து ஜனாதிபதித் தேர்தலுக்கு தலைமைத்துவத்தை வழங்குவார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.

கண்டி தவுலகலவில் உடுநுவர தேயிலை வர்த்தகர்களின் ஒன்றியம் நேற்று நடத்திய வைபவத்தில் மகிந்தானந்த அளுத்கமகே இதனை கூறியுள்ளார்.

ரணில் விக்ரமசிங்க இந்த நாட்டின் ஜனாதிபதியாக பதவிக்கு வந்தால், நாட்டில் உள்ள வர்த்தகர்கள் நாட்டை விட்டு சென்றால் நல்லது. அனைத்து வர்த்தகங்களும் முடிவுக்கு வந்து விட்டது.

கடந்த நான்கு ஆண்டுகளில் வர்த்தகம் வீழ்ச்சியடையவில்லை என்று வாழைப்பழம் மற்றும் மாம்பழம் விற்பனை செய்யும் வியாபாரிகளிடம் கேட்டுப் பாருங்கள். பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளன.

மக்கள் வரியை செலுத்தி வருகின்றனர். மக்களால் வாழ முடியாதுள்ளது. இதனால், நாம் அனைவரும் தற்போதைய அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்ப வேண்டும்.

மத்திய வங்கியின் பிணை முறி கொள்ளையை ரணில் விக்ரமசிங்க மறைத்து வருகிறார். அடுத்த சில தினங்களில் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்பட உள்ளார்.

இன்னும் ஒரு வாரத்தில் அமைச்சர் ஒருவர் கைது செய்யப்படுவார். பிரதமரிடமும் வாக்குமூலம் பெறப்படும். இதனால், பிரதமர் உள்ளிட்டோர் நீதிமன்றத்திற்கு செல்ல நேரிடும்.

இந்த நிலையிலேயே ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியுடன் இணைந்து தேசிய அரசாங்கத்தை அமைக்க முயற்சித்து வருகிறது.

எந்த காரணம் கொண்டும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து மீண்டும தேசிய அரசாங்கத்தை அமைக்க மாட்டார் என்பதை பொறுப்புடன் கூறுகிறேன்.

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன உட்பட இடதுசாரிகள் இணைந்து அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் நிறுத்தும் வேட்பாளர் ஜனாதிபதியாக பதவிக்கு வருவார் எனவும் மகிந்தானந்த அளுத்கமகே குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.