Header Ads



வெளிநாட்டுக்கு பெண்கள், செல்வதற்கு நான் எதிரானவன் - ஜனாதிபதி


சுகபோகங்களை அனுபவிக்கும் முதலாளித்துவ வர்க்கத்தினரும் சொகுசு வாகனங்களை பயன்படுத்தும் அரசியல்வாதிகள் மற்றும் அரசாங்கத்தின் உயர் அதிகாரிகளும் அந்த சுகபோகங்களை அனுபவிப்பது வெளிநாட்டு பணிப்பெண்கள் நாட்டுக்கு ஈட்டித் தரும் நிதியின் மூலமாகும் என்று ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன குறிப்பிட்டார். 

வெளிநாட்டு வீட்டு வேலைகள் நாட்டுக்கு அந்நிய செலாவணியை ஈட்டித்தரும் பிரதான மார்க்கமாக இருந்தபோதும், அதில் ஈடுபட்டுள்ள தாய்மார்கள், சகோதரிகள் பெரும்பாலானவர்களின் வாழ்க்கை கதைகள் சோகம் நிறைந்தவையாகும் எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி, வெளிநாட்டு வீட்டுப் பணியாளர்களாக பெண்களை அனுப்புவதற்கு தனிப்பட்ட முறையில் தான் எதிரானவன் என்றும் குறிப்பிட்டார். 

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு அனுராதபுரம் சல்காது விளையாட்டரங்கில் இடம்பெற்ற சர்வதேச மகளிர் தின நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார். 

“திறமையான பெண்கள் – அழகான உலகம்” என்ற கருப்பொருளின் கீழ் இடம்பெற்ற இந்த நிகழ்வில் 8000த்திற்கும் அதிகமான பெண்கள் கலந்துகொண்டனர். 1908ஆம் ஆண்டு அமெரிக்காவின் ஆடைத் தொழிற்சாலை ஒன்றின் ஊழியர்கள் சிலர் தமது தொழில் உரிமைகளைக் கோரி ஆரம்பித்த போராட்டத்துடன் ஆரம்பமான மகளிர் உரிமைகள் இயக்கத்தின் அழுத்தம் காரணமாக 1911 மார்ச் மாதம் 08ஆம் திகதி சர்வதேச மகளிர் தினமாக பிரகடனப்படுத்தப்பட்டது. 

மகளிர் உரிமைகளை பாதுகாத்தல் மற்றும் மகளிர் மேம்பாட்டுக்காக இலங்கையும் இத்தினத்தை வருடா வருடம் மிகச் சிறப்பாக அனுஷ்டித்து வருவதுடன், மகளிர், சிறுவர் அலுவல்கள் அமைச்சினால் இம்முறை சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சித்திட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. 

2019 சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு தயாரிக்கப்பட்டுள்ள பிரகடனம் இதன்போது ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது. 

தேசிய ரீதியாக சிறப்பான பணிகளை மேற்கொண்ட பெண்கள் ஜனாதிபதியால் பாராட்டப்பட்டதுடன், அநுராதபுரம் மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட சில பெண் தொழில் முயற்சியாளர்களுக்கு ஜனாதிபதியினால் விருதுகளும் சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டன. 

மகளிர், சிறுவர் அலுவல்கள் மற்றும் உலர் வலய அபிவிருத்தி அமைச்சர் சந்திராணி பண்டார, அமைச்சர் தலதா அத்துகோரள, வடமத்திய மாகாண ஆளுநர் சரத் ஏக்கநாயக்க, மகளிர், சிறுவர் அலுவல்கள் மற்றும் உலர் வலய அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் தர்ஷனி சேனாநாயக்க உள்ளிட்டோர் இந்நிகழ்வில் கலந்துகெண்டனர். 

ஜனாதிபதி ஊடகப் பிரிவு

No comments

Powered by Blogger.