Header Ads



ஜனாதிபதி வேட்பாளர் தெரிவில், என்ன நடக்கப்போகிறது என்று தெரியாமல் உள்ளது - ஹக்கீம்

ஜனாதிபதியும் பிரதமரும் இரு துருவங்களாக இருந்தாலும், அவர்களின் புகைப்படங்கள் ஒன்றாக உள்ளன. இந்நிலையில் எதிர்வரும் தேர்தலில் எந்தக் கட்சி வெற்றிபெறும் என்று எல்லோரும் ஆவலுடன் எதிர்பாத்துக் கொண்டிருக்கின்றனர் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நகர திட்டமிடல், நீர் வழங்கல் மற்றும் உயர்கல்வி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். 

25 மாவட்டங்களில் 1000 நீர் சுத்திகரிப்பு நிலையங்களை திறந்துவைக்கும் நிகழ்வின் அங்கமாக இன்று (02) அனுராதபுர மாவட்டத்தில் கடவத ரத்மல, ஹொரவபொத்தான - பத்தாவ, கியுல்லுகட, மெதவாச்சிய சந்தி, கஹடகஸ்திலிய, நாச்சியாதீவு போன்ற இடங்களில் நீர் சுத்திகரிப்பு நிலையங்களை திறந்து வைத்தபின்னர் நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். 

அங்கு தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர் ரவூப் ஹக்கீம் மேலும் கூறியதாவது; 

ஜனாதிபதி அண்மையில் செய்த ஆட்சிக் கவிழ்ப்பினால் இரண்டு மாதங்கள் எல்லா வேலைத்திட்டங்களும் தடைப்பட்டிருந்தன. ஜனாதிபதியும் பிரதமரும் இரு துருவங்களாக இருந்தாலும், இன்று அவர்களின் புகைப்படங்கள் எல்லா இடங்களிலும் ஒன்றாக உள்ளன. இந்நிலையில் இந்த வருடத்துக்குள் தேர்தல் வரவுள்ளது. அதில் எந்தக் கட்சி வெற்றிபெறும் என்று எல்லோரும் ஆவலுடன் காத்திருக்கின்றனர். 

ஜனாதிபதி வேட்பாளர் தெரிவிலும் என்ன நடக்கப்போகிறது என்று தெரியாமல் உள்ளது. சமூகத்துக்கு நன்மையான வேட்பாளரை நாங்கள் ஆதரிப்போம். இந்நிலையில் மாகாண சபை மற்றும் பாராளுமன்ற தேர்தல்களில் எங்களது உறுப்பினர்களை சரியாக தெரிவுசெய்ய வேண்டும். தேர்தல் முறையிலுள்ள வாய்ப்புக்களை நாங்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

வட மத்திய மாகாணத்தில் பொலநறுவை மற்றும் அனுராதபுரம் மாவட்டங்களில் இனம்காணப்படாத சிறுநீரக நோய் நீண்டகாலமாக இருந்து வருகிறது. இதற்கான தற்காலிக நிவாரணமாக சுத்தமான குடிநீரை பெரும்நோக்கில் குறித்த மாவட்டங்களில் நீர் சுத்திகரிப்பு நிலையங்களை நிறுவி வருகிறோம். இவ்வாறான 1000 நீர் சுத்திகரிப்பு நிலையங்களை இந்த வருடத்துக்குள் நாடு முழுவதிலும் நிறுவவுள்ளோம். இதில் இன்னும் 25 திட்டங்கள் அனுராதபுர மாவட்டத்தில் அமைக்கப்படவுள்ளன. 

இதைவிட குழாய்மூலம் ஒவ்வொரு வீடுகளுக்கும் சுத்தமான குடிநீரை வழங்கும் திட்டத்தையும் நடைமுறைப்படுத்தி வருகிறோம். பொலநறுவை மற்றும் அனுராதபுரம் மாவட்டங்களில் குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வும் காணும் நோக்கில் ஜெய்க்கா 2ஆம் கட்டம் என்ற பாரிய நீர் வழங்கல் திட்டமொன்றை செயற்படுத்தவுள்ளோம். இதற்கான திட்ட வரைபுகள் முடிந்து தற்போது வேலைத்திட்டம் விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளது என்றார். 

இந்நிகழ்வுகளில் பாராளுமன்ற உறுப்பினர் இஷ்ஹாக் ரகுமான், கட்சியின் அனுராதபுர மாவட்ட அமைப்பாளர் ரவுத்தார் நைனா முஹம்மத், கட்சியின் உயர்பீட உறுப்பினர்களான ரபீக், முபாரக், பிரதேச சபை உறுப்பினர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

1 comment:

  1. It appears that this guy Hakeem has attended this function as Minister of Water supplies, then why all these Muslim Congress officials went behind him? Shouldn’t this have been strictly a Central Government function?

    ReplyDelete

Powered by Blogger.