Header Ads



ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கையை, ஏற்றுக்கொள்ள இலங்கை அரசாங்கம் மறுப்பு

ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் இலங்கை தொடர்பாக சமர்ப்பித்த உத்தியோகபூர்வ அறிக்கையை ஏற்றுக்கொள்ள இலங்கை அரசாங்கம் மறுத்துள்ளது.

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 40ஆவது கூட்டத்தொடரின் இன்றைய அமர்வில் இலங்கை தொடர்பாக விவாதிக்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் ஐ.நா. பிரேரணையை நடைமுறைப்படுத்தாமை, நல்லிணக்க பொறிமுறை தாமதிக்கப்படுகின்றமை, நிலைமாறுகால நீதி பொறிமுறையை செயற்படுத்தாமை தொடர்பாக ஐ.நா. ஆணையாளர் தமது அறிக்கையில் சுட்டிக்காட்டியிருந்தார்.

குறித்த அறிக்கைக்கு இலங்கை சார்பில் பதிலளித்த வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன, குறித்த அறிக்கையில் உள்ள சகல விடயங்களையும் ஏற்றுக்கொள்ள முடியாதென கூறியுள்ளார்.

ஐ.நா. பிரேரணையில் உள்ள விடயங்களை நடைமுறைப்படுத்த கடந்த 2017ஆம் ஆண்டு முதல் இலங்கை அரசாங்கம் கரிசனையுடன் செயற்பட்டு வருவதாக குறிப்பிட்ட திலக் மாரப்பன, காணாமல்போனோர் அலுவலகம் செயற்பட்டு வருகின்றமை தொடர்பாக இதன்போது சுட்டிக்காட்டினார்.

அத்தோடு உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை செயற்படுத்துவது தொர்பாக தற்போது அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக குறிப்பிட்டார்.

அத்தோடு பயங்கரவாத தடைச்சட்டத்திற்கு மாற்றீடான சட்டத்தை கொண்டுவருவது தொடர்பான செயற்பாடுகள் நாடாளுமன்றில் முன்னெடுக்கப்படுவதாகவும் குறிப்பிட்டார்.

குறிப்பாக இவ்வருட வரவு செலவு திட்டத்தில் விசேட தேவையுடையவர்களுக்காக 500 பில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டார்.

மன்னார் மனித புதைகுழி தொடர்பாக இதன்போது கருத்து வெளியிட்ட திலக் மாரப்பன, பிரித்தானிய காலனித்துவத்தின் கீழ் இலங்கை காணப்பட்டிருந்த நிலையில் இவ்வாறான புதைகுழிகள் இனிவரும் காலத்திலும் கண்டுபிடிக்கப்படலாம். ஆனால் அதனை வேறு விதமாக சித்தரிக்க முடிவதை ஏற்றுக்கொள்ள முடியாதென அவர் மேலும் தெரிவித்தார்.

கலப்பு நீதிமன்ற பொறிமுறைக்காக வெளிநாட்டு பிரஜைகளை உள்வாங்க இலங்கை அரசியலமைப்பில் இடமில்லையென சுட்டிக்காட்டினார். அவ்வாறாயின் இலங்கை அரசியலமைப்பு மாற்றியமைக்கப்பட வேண்டுமென குறிப்பிட்டார்.

No comments

Powered by Blogger.