March 04, 2019

முஸ்லிம்களுக்கு பன்றி இறைச்சியும், மதுவையும் கட்டாயப்படுத்தும் சீனா

- March 4, 2019 -

வடமேற்கு சீனாவில் ஜின்ஜியாங் மாகாணத்தில் உய்குர் பகுதியில் வசிக்கும் சிறுபான்மை முஸ்லிம்கள் கூறுகிறார்கள்: சீனர்களால் கொண்டாடப்படும் சந்திர புத்தாண்டு விடுமுறையான 2019 பிப்ரவரி 5-ம் தேதியன்று மது அருந்தவும், பன்றிக்கறி சாப்பிடவும் நாங்கள் கட்டாயப்படுத்தப்பட்டோம்.

Free Asia என்னும் வானொலி நிலையம் மற்றும் பிரிட்டிஷின் தினசரி பத்திரிக்கையான Daily Mail- கூறுவதாவது: சீன புத்தாண்டு இரவன்று, மது அருந்தவும், பன்றிக்கறி சாப்பிடவும் முஸ்லிம்கள் கட்டாயமாக அழைக்கப்பட்டதாக, அடிக்கடி வன்முறை வெடிக்கும் பகுதியில் வசிக்கும் சீன முஸ்லிம்கள் தெரிவிக்கின்றனர். இவ்வாறு செய்ய முஸ்லிம்கள் மறுத்தால், மறுகல்வி புகட்டும் முகாம்களுக்கு எங்களை அனுப்பிவிடுவதாக சீன அதிகாரிகள் மிரட்டியதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.

யஜுர் மாகாணத்தில் உள்ள இனிங் என்ற நகரத்தில், கடந்த வாரம் புத்தாண்டு கொண்டாடிய இரவன்று ஒரு சீன அதிகாரி ஒரு இஸ்லாமிய குடும்பத்தை சந்தித்து, அவர்களுக்கு பன்றிக்கறியை பகிர்ந்தளிப்பது போன்று இந்த வானொலிக்கு அனுப்பப்பட்ட புகைப்படங்களில் ஒன்று படம்பிடித்துக் காட்டியது.

கிழக்கு துர்க்கிஸ்தானில் வசிக்கும் உள்ளுர் மக்கள் புத்தாண்டு தினத்தன்று தங்கள் வீடுகளின் வெளிப்பகுதியில் சிவப்பு விளக்குகளால் அலங்கரிக்க வேண்டுமென அதிகாரிகள் அவர்களை வற்புறுத்தினர்.

இஸ்லாத்தில் மது அருந்துவதும், பன்றிக்கறி சாப்பிடுவதும் தடுக்கப்பட்டவைகளாக கருதப்படுகின்றது. வழமையாக முஸ்லிம்கள் சீனப்புத்தாண்டை கொண்டாடுவதுமில்லை.

பெயர் சொல்ல விரும்பாத ஒருவர் Free Asia வானொலிக்கு பேட்டியளித்ததாவது: இதுவரை நான் பன்றிக்கறி சாப்பிட்டதே இல்லை. கடந்த வருட புத்தாண்டுத் துவக்கத்தின் போது, சீன கலாச்சாரத்தில் தான் இருப்பதை உறுதிபடுத்தவும், தண்டனையிலிருந்து தப்பிக்கவும், பன்றிக்கறியை கண்டிப்பாக சாப்பிட வேண்டுமென சிலர் கட்டாயப்படுத்தப்பட்டனர்.

அதே நேரத்தில் உய்குர் இனத்தைச் சார்ந்த ஒரு இஸ்லாமியப் பெண் கூறினார்: விழாக்காலங்களில் எங்கள் வீட்டின் முன் சிவப்பு விளக்குகளை ஏற்றாவிட்டால், நாங்கள் இருவேடமுடைய மக்கள் என்று எங்களைப் பழிக்கின்றனர். மறு கல்வி முகாம்களுக்கு எங்களை அனுப்பியும், ஒவ்வொரு இஸ்லாமிய குடும்பத்திற்கும் பன்றிக்கறியை கொடுப்பதிலும் ஈடுபட்டனர்.

உய்குர் இனத்தின் செய்தி தொடர்பாளர் தீகசாத் ராக்சீத் கூறியதை Daily Mail பதிவுசெய்கிறது: எங்களுக்கு கிடைத்த தகவலின்படி, உய்குர் முஸ்லிம் மக்கள் தங்கள் இஸ்லாமிய கோட்பாடுகளிலிருந்து வெளியேறவும், சீன கலாச்சாரத்தில் இணையவேண்டுமென அவர்களை வற்புறுத்தியும், சீன புத்தாண்டு தினத்தை கொண்டாடவேண்டுமெனவும் சீன அரசு தன் பிரச்சாரத்தை முஸ்லிம்களுக்கு எதிராக கையாண்டு வருகிறது.

அவ்வாறே உய்குர் முஸ்லிம்களை மது அருந்த வேண்டுமென்று வற்புறுத்தியதோடு, தங்கள் மார்க்கத்தின் கொள்கை கோட்பாடுகளை விட்டும் வெளியேறி விட்டோம் என்றும், சீனாவின் பாரம்பரிய கலாச்சாரத்தை இழிவாக நினைக்கமாட்டோம் என்றும் உறுதியளிக்க வற்புறுத்தினர்.

கடந்த ஆகஸ்ட் மாதம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் குழு தெரிவித்ததாவது: சீன அரசு 1 மில்லியன் உய்குர் சிறுபான்மையின முஸ்லிம்களை இரகசிய முகாம்களில் சிறைக்காவலில் வைத்துள்ளது.

1949-ம் ஆண்டிலிருந்து உய்குர் இனத்தின் சிறுபான்மையின ஊராக கருதப்படும் கிழக்கு துருக்கிஸ்தானை பெய்ஜிங் தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. இந்த ஊருக்கு ஜின்ஜியாங் (புதிய எல்லைகள்) என்றும் சொல்லப்படும்.

சீனாவில் மட்டும் 30 மில்லியன் முஸ்லிம்கள் வசிப்பதாகவும், இதில் 23 மில்லியன் முஸ்லிம்கள் உய்குரைச் சார்ந்தவர்கள் என அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. அதே நேரத்தில் சுமார் 100 மில்லியன் முஸ்லிம்கள் சீனாவில் வசிப்பதாகவும், இது அந்நாட்டு மக்கள் தொகையின் 9.5% விழுக்காடாகும் எனவும் சில அறிக்கைகள் கூறுகின்றது.

– உமர் பைசல்

(மூலம் – அல்முஜ்தமா சஞ்சிகை, குவைத்)

0 கருத்துரைகள்:

Post a comment