Header Ads



வில்பத்து புரளிகளுக்கு முடிவுகட்ட, பாராளுமன்ற தெரிவுக்குழு அமையங்கள் - ரிஷாத் கோரிக்கை'

வில்பத்துவில் ஓரங்குல நிலத்தையேனும் நானோ அல்லது நான் சார்ந்த சமூகமோ அழித்திருந்தால் எந்தத் தண்டனையையும் ஏற்பதற்கு தயாரெனவும் இந்த பிரச்சினை தொடர்பில் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட சுயாதீன ஆணைக்குழுவின் அறிக்கையை வெளியிடச் செய்ய சபாநாயகர் உடனடியாக நடவடிக்கை எடுத்து, இதன் உண்மையை நிலையை மக்களுக்கு தெளிவு படுத்த உதவ வேண்டுமென அமைச்சர் ரிஷாத் பதியுதீன் பாராளுமன்றில் இன்று (22) தெரிவித்தார்.
மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸ்ஸநாயக்கவின் வாய் மூல வினா ஒன்றிற்கு பதிலளிக்கையில், தற்போது மீண்டும் பூதாகரப்படுத்தப்படும் வில்பத்து விவகாரம் தொடர்பிலும் அமைச்சர் கோரிக்கை விடுத்தார்.

சுயாதீன ஆணைக்குழுவின் விசாரணை அறிக்கை வெளியிடப்பட வேண்டும் அல்லது சபாநாயகர் தலைமையில் தெரிவுக்குழு ஒன்றை நிறுவி, இந்த பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமென அமைச்சர் பாராளுமன்றில் வலியுறுத்தினார்.

கண்டியில் முஸ்லிம்களுக்கு எதிராக நடந்த வன்முறைகளின் பின்னர், கண்டி தலதா மாளிகைக்கு சபாநாயகர் கரு ஜெயசூரிய தலைமையில் நாங்கள் சென்றிருந்த போது, மகாநாயக்க தேரர், வில்பத்து தொடர்பில், என்னிடம் கேள்வியெழுப்பி அது சம்பந்தமான உண்மை நிலைகளை கேட்ட போது, நான் தெளிவு படுத்தினேன். சங்கைக்குரிய மகாநாயக்க தேரரிடம் புதிய ஆணைக்குழுவை நிறுவி இதன் உண்மைத்தன்மைகளை வெளிக்கொணருமாறு வேண்டுகோள் விடுத்திருந்தேன் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

”நாங்கள் நிரபராதிகள், வில்பத்து அநுராதபுரத்திற்கும்- புத்தளத்திற்கும் இடையில் உள்ளது, நான் மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்தவன், புலிகளால் விரட்டப்பட்ட அகதி, அகதி முகாமிலிருந்தே பாராளுமன்றத்திற்கு வந்தவன், எனது தந்தையார் ஜனாதிபதியாகவோ பிரதமராகவோ இருந்தவரல்ல, நான் பாதிக்கபட்டப் சமூகத்திலிருந்து வந்ததால், நான் சார்ந்த சமூகத்தின் பிரச்சினைகளுக்காக குரல் எழுப்புவதும் அதனை தீர்த்து வைப்பதுமே எனது கடமை, அதனையே நான் செய்கின்றேன்.” இவ்வாறு கூறினார்.

No comments

Powered by Blogger.