Header Ads



படகில் பிரான்ஸ் சென்ற,, இலங்கையர்களின் சோகக் கதைகள்

பிரான்சுக்குச் சொந்தமான ரியூனியன் தீவுக்கு படகில் சட்டவிரோதமாக நுழைந்த இலங்கையர்கள் 66பேர் கடந்த 14ம் திகதி அந்நாட்டிலிருந்து நாடு கடத்தப்பட்டுள்ளார்கள். படகில் சென்றவர்கள் விசேட விமானம் மூலமே திரும்பி வந்துள்ளார்கள்.  

அவர்கள் இலங்கைக்கு வந்தவுடன் குடிவரவு குடியகல்வு சட்டத்தை மீறிய குற்றத்திற்காகக் கைது செய்யப்பட்டார்கள். இவர்கள் நீர்கொழும்பு மஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் சிலருக்கு பிணை வழங்கப்பட்டதுடன் படகு ஓட்டுநர் (ஸ்கிப்பர்), பணியாளர்கள் (கெனியன்) தடுப்புக் காவலில் வைக்கப்பட்டார்கள்.  

உரிமையாளரை ஏமாற்றி இப்பயணத்துக்காக கொண்டு செல்லப்பட்ட ‘ஜே பிரசன்ஸா’ எனும் படகு தற்போது ரீயூனியன் தீவின் பிரதான இறங்குதுறையில் நிறுத்தப்பட்டுள்ளதுடன் அதனுடன் மேலும் மூன்று படகுகள் அங்குள்ளதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. ஒன்றரைக் கோடி ரூபா பெறுமதியான தனது ஆழ்கடல் மீன்பிடிப்படகை மீட்டுத் தருமாறு அதிகாரிகளிடம் அதன் உரிமையாளர் வேண்டுகோள் விடுத்துள்ளார். தனது பிள்ளையின் கடும்நோய் நிலைமை காரணமாக தான் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், படகு மூலம் கிடைக்கும் வருமானம் கிடைக்காதது பெரும் நஷ்டம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.  

‘ஜே பிரசன்ஸா’ ஆழ்கடல் மீன்பிடிப் படகு சிலாபத்தில் இருந்து ரியுனியன் நோக்கிச் சென்றமை ஒரு போதும் வீரகாவியமாகாது. அது தோல்வியுற்றவர்களின் கதையாகும். ஆனால் அதற்கு அருகில் சென்று அதைப் பற்றி ஆராயும் போது அப்பிரச்சினையின் ஆழம் புரியும். மிக நல்ல வாழ்க்கையை எதிர்பார்த்து, இலட்சக்கணக்கில் பணத்தைச் செலவழித்து தமது உயிரையே பணயம் வைத்து இவர்கள் சென்ற பயணம் தோல்வியில் முடிந்தமை சட்டியிலிருந்து அடுப்பில் விழுந்த கதையாகும். இந்த பிரச்சினை இது போன்ற பயணங்களை மேற்கொள்ள உள்ளவர்களுக்கு பாடமாக அமையும்.  

டெனிசனின் சாட்சியம்:  

“நாம் எமது நாட்டைக் காட்டிக் கொடுத்திருந்தால் எங்களுக்கு அந்த நாட்டில் தங்கி இருந்திருக்க முடியும். ஆனால் அறுபத்துஆறு பேரும் அதனைச் செய்யவில்லை. இலங்கையில் பொருளாதாரக் கஷ்டம் காரணமாகவே இவ்வாறு உயிரைப் பணயம் வைத்து படகிலேறி வந்ததாகவே நான் கூறினேன்” என ஞானசேகரன் டெனிசன் என்பவர் கூறினார். யாழ்ப்பாணத்தில் பிறந்து தற்போது பங்கதெனியவில் வசிக்கும் ஞானசேகரம் இருபத்தைந்து வயதான திருமணமாகாதவராவார்.  

“எனது நண்பர் ஒருவர் ஊரில் இருக்கின்றார். அவர் மூலமாகவே இந்தத் தரகரை அறிந்து கொண்டு பணத்தைக் கொடுத்தேன். என்னிடம் பதினைந்து இலட்சம் ரூபா கேட்டார்கள். நான் முதலில் இரண்டு இலட்சம் தருகிறேன். மிகுதியை பின்னர் தருகிறேன் எனக் கூறினேன். பணத்தைக் கொடுத்த ஒன்றரை மாதத்தில் அதாவது ஜனவரி 13ம் திகதி வெள்ளை கார் ஒன்றில் வந்து 'போவோம்' எனக் கூறினார்கள். நாங்கள் 6பேர் பயணத்திற்குத் தயாராக இருந்தோம். அந்தக் காரில் வந்த நபர் எங்களை பிரான்சுக்கு அழைத்துச் செல்வதாகக் கூறினார். இது போல அநேகமானோரை அழைத்துச் சென்றுள்ளதாகவும் கூறினார்.  

நாம் அனைவரும் அருள் என்பவர் வீட்டிற்கே காரில் வந்தோம். அருள்குமார் குசல பிரதேசத்தில் வசிக்கும் மூன்று பிள்ளைகளின் தந்தையாவார். வாழ்க்கைச் சுமை ஆகாயமளவு எட்டியுள்ளதால்தான் இந்தப் பயணத்தில் கலந்து கொண்டதாக அருள் கூறினார். 

“நான் 2015ம் ஆண்டிலேயே குளியாப்பிட்டியில் உள்ள ஒருவரிடம் பணத்தைக் கொடுத்தேன். அவர் என்னை விமானம் மூலம் அவுஸ்திரேலியாவுக்கு அனுப்பவதாக கூறினார். பின்னர் இந்தயாவுக்கு அழைத்துச் சென்று மீண்டும் இலங்கைக்கு அழைத்து வந்தார். மூன்று வருடத்துக்குப் பின்னர்தான் என்னை மீண்டும் இந்தப் பயணத்துக்கு அழைத்துச் சென்றார். இம்முறை பதினைந்து நாட்களில் பிரான்சுக்கு அழைத்துச் செல்வதாகக் கூறினார். நாங்கள் ஆறு பேர் இருந்தோம். எங்களை காரில் ஏற்றிக் கொண்டு தெதுறுஓயாவில் இறக்கி விட்டார்கள். கடலில் இருபது மைல் தூரம் சென்ற பின்னர் தான் நாங்கள் பெரிய படகைக் கண்டோம். நாம் மிகவும் சிரமப்பட்டு தொங்கிக் கொண்டிருந்த டயர் மூலம் படகில் ஏறினோம்.  

ஜனவரி 9ம் திகதி நீர்கொழும்பு மீன்பிடித் துறைமுகத்திலிருந்து புறப்பட்ட படகு நான்கு நாட்களுக்குப் பின்னர் சிலாபம் கடற்பரப்பில் நங்கூரமிட்டு அங்கிருந்து நூறு பேருக்கும் அதிகமானோரை அதில் ஏற்றுவதற்கே எண்ணியிருந்தார்கள். ஆனால் 65பேர் வரையே அவர்களால் ஏற்றிக் கொள்ள முடிந்தது. அவர்களில் சிறுவர்கள், பெண்கள், ஊனமுற்றோரும் அடங்கியிருந்தனர்.  

கொழும்பு, யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, கண்டி, சிலாம் உள்ளிட்ட நாட்டின் ஏனைய பகுதிகனையும் சேர்ந்த சிங்கள, தமிழ், முஸ்லிம் என எல்லா இனத்தவர்களும் அக்குழுவில் அடங்கியிருந்தார்கள்.எவ்வாறாயினும் இவர்கள் ஜனவரி மாதம் 13ம் திகதி 10.30மணியளவில் பிரான்சுக்கான பயணத்தை ஆரம்பித்துள்ளார்கள். தாங்கள் செல்லுமிடம் ரியூனியன் என்னும் தீவு என்பதை மாலுமியுடன் ஒரு சிலர் மட்டுமே அறிந்திருந்தார்கள்.  

எங்களை அவர்கள் கப்பலின் உள்ளேயே வைத்திருந்தார்கள். அந்த இடம் மீன்கள் ஐஸ் போடப்பட்டு பாதுகாக்கும் இடமாகும். அங்குள்ள ஐஸ்கட்டிகளை அப்புறப்படுத்தி விட்டு எம்மை அங்கு வைத்திருந்தார்கள். சில மாதங்களேயான குழந்தையொன்றும் எம்முடன் இருந்தது. அக்குழந்தை மாலுமியினுடையது என்பதையும் அறிந்தோம். பன்னிரண்டு பதின்மூன்று நாட்களில் பிரான்சுக்கு சென்று விடலாம். எம்மிடம் ஒரு மாதத்துக்கான உணவு, தண்ணீர் உள்ளது எனவும் அவர் எமக்குக் கூறினார்.  

எம்மில் சிலர் கடற்பிரயாணம் ஒத்துவராமையில் வாந்தி எடுத்துக் கொண்டிருந்தார்கள். ஒருவாறு ஜனவரி 16ம் திகதி எம்மை மேற்தட்டுக்கு செல்ல அனுமதித்தார்கள். ஜனவரி 20ம் திகதி கடலில் அலையின் வேகம் கூடியது. படகிலிருந்த அனைவரும் தத்தமது கடவுளிடம் பிரார்த்தனை செய்யத் தொடங்கி விட்டார்கள். அனேகமானோர் நாம் திரும்பி இலங்கைக்கு செல்வோம் எனக் கூறத் தொடங்கினார்கள். மாலுமியோ நாம் படகில் ஏழு நாட்கள் 800கடல் மைல்கள் பிரயாணம் செய்துள்ளோம். ஆகவே எமக்கு பிரான்ஸ்சுக்குச் செல்வதுதான் இலகுவானது எனக் கூறினார். படகில் சிறுசிறு மோதல்களும் ஏற்பட்டன. அநேகமாக அவை உணவுக்காக ஏற்பட்ட மோதல்களாகும். நாம் கொண்டு சென்ற பிஸ்கட் போன்றவை சில நாட்களிலேயே தீர்த்து விட்டன. ஒரு மாதத்துக்கான உணவு இருந்தாலும் சிக்கனமாகவே உணவு வழங்கப்பட்டது. காலையிலும் இரவிலும் இரண்டு வேளையே உணவை வழங்கினார்கள். இரண்டு நேரமும்அரைக் கோப்பை தண்ணீரே வழங்கினார்கள்.  

இருபத்துமூன்று நாள் கடற் பயணத்தின் பின்னர் பெப்ரவரி 5ம் திகதி 70நபர்களைத் தாங்கிய ‘ஜே பிரசன்ஸா’ படகு பிரான்ஸினால் ஆளப்படும் ரியுனியன் தீவுக்கருகில் சென்றது. இதேவேளை இலங்கை அரசாங்கம், மீன்பிடித் திணைக்களம், பிரான்ஸ் தூதுவர் காரியாலயம் என்பன ஆட்கடத்தல் மற்றும் படகுக் கொள்ளை என்பவற்றை அறிந்து பிரான்ஸ் அதிகாரிகள் ‘ஜே. பிரசன்ஸா’ கப்பலை எதிர்பார்த்து காத்திருந்தார்கள். ஆனால் அந்தப் படகுக்குப் பதிலாக வேறொரு படகே அங்கே சென்றது. காரணம் அவர்கள் படகின் பெயரை அழித்து விட்டு வெறோரு பெயரை எழுதியிருந்தார்கள்.  


இது பற்றி டெனிசன் கூறும் போது "ஸ்கிப்பர் படகின் பெயரை மாற்றி விட்டோம். ஏனென்றால் படகு சொந்தக்காரர் படகைப் பற்றி பொலிஸில் முறைப்பாடு செய்தால் நாம் கைது செய்யப்படுவோம்" என்றார்.  

அருள்குமார் கடற்கரையை அடைந்ததும் நடந்தது என்னவென்று கூறும் போது ‘அந்த நாட்டு மீனவர்களிடம் தீவுக்கு எவ்வாறு செல்வது என்று கேட்ட பின்னர் அங்கு செல்ல ஆயத்தமாகும் போது அந்நாட்டுக் கடற்படையினர் மெனிஸ் என்ற பிரதேசத்துக்கு எம்மை அழைத்துச் சென்றார்கள். அங்கு அவர்கள் எம்மை வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்திய பின்னர் நன்றாக எமக்கு உணவு வழங்கி ஏ.சி அறைகளில் தங்கவைத்தார்கள். அங்கு அவர்கள் எமது தொலைபேசி ஆவணங்கள், அடையாள அட்டை, கடவுச்சீட்டு என்பவற்றையும் எம்மிடமிருந்து கைப்பற்றிக் கொண்டார்கள். அங்கு அவர்கள் எம்மை தனித்தனியாக விசாரித்தார்கள். நாம் எமது நாட்டை காட்டிக் கொடுக்க முடியாதென்பதால் பொருளாதாரப் பிரச்சினை காரணமாகவே அங்கு வந்ததாகக் கூறினோம். மூன்று நான்கு பேர் பொய் கூறினார்கள். எனக்குப் பொலிஸ் பாதுகாப்புத் தந்தால் சொல்கிறேன் என்று ஒருவர் கூறினார். அதற்கு எப்படி பொலிஸ் பாதுகாப்பு வழங்குவது என்று ஒருவர் கேட்டார். அவருடன் சேர்த்து மூன்று பேருக்கு அங்கு தங்கியிருக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியது.  

பெப்ரவரி 14ஆம் திகதி காலையில் பொலிஸார் எம்மிடம் இலங்கைக்குச் செல்லத் தயாராகும்படி கூறினார்கள். இதைக் கேட்டதும் சிலர் அழத் தொடங்கினார்கள். போக முடியாது எனக் கூறினார்கள். எங்கள் அனைவரையும் விலங்கிட்டு அவர்கள் விமானத்தில் ஏற்றினார்கள். அவர்கள் எம்முடனேயே பயணம் செய்தார்கள். அவர்கள் விமானத்திலிருந்து இறங்கவேயில்லை. எம்மை ஒப்படைத்து விட்டு சென்று விட்டார்கள். ஆனால் எமக்கு உறுதியளித்தபடி எமது கைத்தொலைபேசிகள் மற்றும் ஆவணங்களை அவர்கள் திரும்பத் தரவில்லை.  

இலங்கைக்கு வந்த பின்னர் எம்மை விசாரித்த பின்னர் நீர்கொழும்பு நீதிமன்றத்தில் ஒப்படைத்து பிணை வழங்கினார்கள். ஆனால் ஸ்கிப்பருக்கும் அதில் பணி புரிந்தவர்களுக்கும் பிணை வழங்கப்படவில்லை. வழக்குக் காரணமாக எமக்கு வேறு நாடுகளுக்கு செல்லவும் முடியாது. இங்கு தொழில் பார்க்கவும் முடியாது. 

இவ்வாறு வேதனையுடன் விபரித்தனர் நாடு கடத்தப்பட்டோர்.

(பிரசாத் பூர்ணமால் ஜயமான்ன)

No comments

Powered by Blogger.