March 02, 2019

மகிந்தவின் வீட்டுக்கருகாமையில் "மகிந்த ராஜபக்ஷ மாதிரி கிராமம்" உருவாக்கப்படும் - சஜித்

இவ்வருட இறுதிக்குள் சகல மாவட்டங்களிலுமாக 2,500 வீடுகளை  நிர்மாணிப்பதே எமது இலக்கு. இன்றுவரை 1,700 வீடுகள் பூர்த்திசெய்யப்பட்டு  மக்களுக்கு கையளிக்கப்பட்டுள்ளன. எஞ்சிய வீடுகளை செப்டம்பர் மாதத்திற்குள்  பூர்த்திசெய்வதற்கு திட்டமிட்டுள்ளோம் என வீடமைப்பு நிர்மாணத்துறை மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் சஜித் பிரேமதாச தெரனியகலையில் நடைபெற்ற வீடமைப்புத் திட்ட அங்குரார்ப்பண வைபவத்தில் உரைநிகழ்த்தும்போது தெரிவித்தார்.

மேற்படி வைபவத்தில் தொடர்ந்து உரை நிகழ்த்திய அமைச்சர் சஜித் பிரேமதாச,  “சிவனொளி கிராம மக்களின் வீடுகளுக்கு நான் செல்லும்போது அந்த அப்பாவி  மக்களின் முகமலர்ச்சியைக் கண்டு நானும் மகிழ்ந்தேன். இத்தகைய ஓர் அங்குல  நிலமேனும் இல்லாத மக்களுக்கு காணிகளும் வீடுகளும் வழங்குவதைத் தவிர வேறென்ன  எதிர்பார்ப்புகளை அரசியல்வாதிகள் மேற்கொள்ள முடியும்?” எனவும் வினவினார். 

எமது வீடமைப்புத் திட்டங்கள் நான்கு கட்டங்களாக  மேற்கொள்ளப்படுகின்றன. முதற்கட்டமாக இவ்வருட இறுதிக்குள் சகல  மாவட்டங்களிலுமாக 2,500 வீடுகளை நிர்மாணிப்பதாகும். இன்றுவரை 1,700 வீடுகள்  பூர்த்திசெய்யப்பட்டு மக்களுக்கு கையளிக்கப்பட்டுள்ளன. எஞ்சிய வீடுகளை  செப்டம்பர் மாதத்திற்குள் பூர்த்திசெய்வதற்கு திட்டமிட்டுள்ளோம். சிவனொளி  கிராமம் எமது 171ஆவது மாதிரி கிராமமாகும். ஒரு வாரத்திற்கு குறைந்தபட்சம்  ஏழு மாதிரி கிராமங்கள் திறந்து வைக்கப்பட வேண்டியுள்ளன. அடுத்த சில  தினங்களில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி உட்பட சகல மாவட்டங்களிலும்  திறப்பு விழாக்களுக்காகச் செல்லவிருக்கின்றேன். 

‘இரண்டாவது கட்டமாக 2020ஆம் ஆண்டு 5,000 வீடுகளை நிர்மாணிக்க  திட்டமிட்டுள்ளோம். 2025ஆம் ஆண்டு முடியும்போது இருபதினாயிரம் வீடுகள்  மக்களிடம் கையளிக்கப்படும். எமக்குள்ள பெரும்பிரச்சினை காணிகளை  பெற்றுக்கொள்வதேயாகும். தெரனியகலை தேர்தல் தொகுதியில் பதினைந்து  பெருந்தோட்ட காணிகள் தயார் நிலையில் உள்ளன. அவற்றை கூடிய விரைவில்  பயன்படுத்த திட்டமிட்டுள்ளோம்” எனவும் தெரிவித்த அமைச்சர் சஜித் பிரேமதாச, 'மகிந்த ராஜபக்ஷ மாதிரி கிராமம்' என்னும் பெயரிலும் முன்னாள்  ஜனாதிபதியின் வீட்டுக்கருகாமையில் வீடமைப்புத் திட்டம் உருவாக்கப்படுமென  தெரிவித்தார்.

தமது முயற்சிகளுக்கு ஜனாதிபதியும், பிரதமரும்,  நிதியமைச்சரும் சிறப்பான ஒத்தாசைகளை வழங்கி வருவதாக தெரிவித்த அவர்  “எதிரணியினர் என் மீது சேறு பூசுவதை குறிக்கோளாகக் கொண்டு இயங்குகின்றனர்.  என்மீது கணைகள் தொடுக்க தொடுக்க நான் புதிய புதிய வீடமைப்பு திட்டங்களை  நிர்மாணிப்பதற்கு திட்டங்களை வகுப்பேன். தெரனியகலை நகரில் விசமிகளினால்  சேதப்படுத்தப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் உருவச்சிலை  மீண்டும் சிறப்பாக நிறுவப்பட்டுள்ளமை மகிழ்ச்சியளிக்கின்றது. அன்னாரின்  சிலையை நிறுவுவதைவிட அவரது கொள்கைகளையும் வறிய மக்கள் மீதான இன – மத – மொழி  பேதமற்ற உணர்வுகளை அனைவரும் இதயத்தில் கொள்வார்களேயானால் அதுவே தேசத்தின்  தேவை” எனவும் மேலும் தெரிவித்தார். 

வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சினால் பெருந்தோட்டத் துறையில் மேற்கொள்ளப்பட்ட முதலாவது மாதிரி கிராம மாகிய “சிவனொளி கிராமம்” தெரனியகல தேர்தல் தொகுதியில் அசமானகந்தை தோட்டத்தில் அமைச்சர் சஜித் பிரேமதாசவினால் திறந்து வைக்கப்பட்டது. 2014ஆம் ஆண்டு ஏற்பட்ட மண்சரிவினால் பாதிக்கப்பட்ட மேற்படி தோட்டத்தைச் சேர்ந்த இருபத்தைந்து குடும்பங்கள் மண்சரிவினால் சேதமுற்ற தோட்ட லயன்களின் கூரைத் தகடுகளினால் வேயப்பட்டும் தடுப்புகளாக பாவிக்கப்பட்டுமிருந்த கூடாரங்களில் கடந்த மூன்று வருடங்களாக பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் வசித்து வந்தனர். தோட்டத்தில் தொழில் புரிவோரும், பாடசாலை மாணவர்களும், வயோதிபர் களும், சிறு குழந்தைகளும் இளம் தம்பதிகளுமென இக்கூடார வாழ்க்கையில் பெரும் இன்னல்களை அனுபவித்து வந்தனர். 

தெரனியகல தொகுதியின் ஐக்கிய தேசியக் கட்சி அமைப்பாளரும் மாகாண சபை உறுப்பினருமாகிய ரஞ்சித் பொல்கம்பொல மற்றும் கேகாலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் உப தலைவருமாகிய கே. சுஜித் சஞ்ஜய பெரேரா ஆகியோரின் வேண்டுகோளின் பிரகாரம் வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாச இம்மக்களுக்கு சகல வதிகளுடன்கூடிய இம்மாதிரி கிராமத்தை உருவாக்குவதற்கு நடவடிக்கை மேற்கொண்டார். இலங்கை வங்கியினால் வழங்கப்பட்ட தலா ஒரு இலட்சம் ரூபாவை மாத்திரம் இவ்வீடுகளின் பயனாளிகள் தவணைமுறையில் செலுத்த வேண்டிய அதேவேளை இதர கட்டட நிர்மாணப் பணிகளுக்கான செலவினங்களை வீடமைப்பு அமைச்சு பொறுப்பேற்றுள்ளது. 

ஏழு பர்ச்சஸ் காணிகளுடன் தனி விடுகளாக அமைக்கப்பட்டுள்ள இவ்விருபத்தைந்து வீடுகளும் முறைப்படி கொங்கிறீட் அத்திவாரங்களுடனும், வர்ணப் பூச்சுக்களுடனும் சக்திமிக்க கட்டட வேலைப்பாடுகளுடன் காட்சியளிக்கின்றன. முழுதும் தமிழ் குடும்பங்களுக்கென நிர்மாணிக்கப்பட்ட இவ்வழகிய மாதிரி கிராமம் புராதன காலத்திலிருந்து சிவனொளி பாத மலை யாத்திரை மேற்கொள்ளும் வழி அமைந்துள்ள மலையடிவாரத்தில் “சிவனொளி கிராமம்” என்னும் பெயரில் உருவாக்கப்பட்டுள்ளது. சிங்கள மொழியிலும் “சிவனொளி கிராமம்” என்னும் தமிழ் பெயரே குறிப்பிடப்பட்டுள்ளது.

0 கருத்துரைகள்:

Post a comment