Header Ads



எதிர்வரும் நாட்கள், போதைப்பொருள் குற்றவாளிகளுக்கு வீழ்ச்சியாக இருக்கும் - லத்தீப் அறிவிப்பு

போதைப்பொருள் கடத்தல்காரர்கள் மற்றும் அதனுடன் சம்பந்தப்பட்டவர்களின் வீழ்ச்சியைத் தீர்மானிக்கும் நாட்களாக எதிர்வரும் நாட்கள் அமையும் என விசேட அதிரடிப்படையின் கட்டளைத் தளபதியும், சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மாஅதிபருமான எம்.ஆர்.லதீப் தெரிவித்தார்.

"போதை குற்றவாளிகளின் கைதுகள், ஆயுத மீட்புக்கள், பணம் மற்றும் போதைப்பொருள் மீட்புக்கள் எதிர்வரும் சில நாட்களில் அதிகமாகவிருக்கும்" என வும் அவர் குறிப்பிட்டார்.

கடந்த பெப்ரவரி மாதம் 4ஆம் திகதி துபாய் சட்டம் ஒழுங்கு அதிகாரிகளால் மாக்கந்துர மதுஷ் கைதுசெய்யப்பட்ட பின்னர் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் லதீப் தலைமையில் விசேட அதிரடிப்படையினர் போதைப் பொருள் கடத்தல்காரர்கள் பலரை கைது செய்திருப்பதுடன், 16.2 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான போதைப் பொருட்களை நாட்டிலிருந்து மீட்டுள்ளனர்.

"சட்டவிரோதமான போதைப்பொருள் வர்த்தக செயற்பாடுகளை நாம் ஏற்கனவே முடக்கியுள்ளோம். குற்றவாளிகளால் தமது போதைப் பொருட்களை சந்தைக்கு வழங்கமுடியாமல் இருக்கின்றனர்" என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

சகல போதைப்பொருள் குற்றவாளிகள், போதைப் பொருளால் ஈட்டப்படும் பணம், ஆயுத முகவர்கள், பணமோசடியில் ஈடுபடுபவர்கள் என பல்வேறு குற்றவாளிகளை முடக்குவதற்கு நாம் நடவடிக்கை எடுத்துள்ளோம். குறிப்பாக மாக்கந்துர மதுஷ் மற்றும் கொஸ்கொட சுஜி ஆகிய இரண்டு போதைப்பொருள் வர்த்தகர்களுடன் தொடர்புவைத்திருந்த குழுவினரே கைதுசெய்யப்பட்டு முடக்கப்பட்டுள்ளனர்.

மாக்கந்துர மதுஷ் கைதுசெய்யப்பட்டு துபாய் அதிகாகரிகளின் கட்டுப்பாட்டில் இருப்பதுடன், கொஸ்கொட சுஜி இந்தக் கைது விடயத்தை அறிந்து துபாயில் உள்ள தனது வீட்டிலிருந்து தப்பிச் சென்றுள்ளார். மதுஷ் மற்றும் சுஜி ஆகிய இருவரும் நாட்டில் இடம்பெறும் போதை சம்பந்தமான குற்றச்செயல்களுடன் தொடர்புபட்டவர்களாக இருக்கின்றனர். இவர்களின் செயற்பாடுகளை அவதானித்து வருவதுடன், எதிர்வரும் நாட்கள் போதைப்பொருள் குற்றவாளிகளுக்கு வீழ்ச்சியான நாட்களாக இருக்கும் என்றார்.

1 comment:

  1. முழு நாடுமே உங்களுக்கும் உங்கள் அதிரடிப்படைக்கும் கடமைப்பட்டிருக்கிறது.

    ReplyDelete

Powered by Blogger.