Header Ads



முஸ்லிம்களின் வாக்குகளை சுவீகரிக்க. பல்வேறு வழிமுறைகளை பயன்படுத்துகிறார்கள் - விமல்

ஜனாதிபதித் தேர்தல் நெருங்கும் போது ஆளும் கட்சியினர் முஸ்லிம் மக்களின் வாக்குகளை சுவீகரிக்க பல்வேறு வழிமுறைகளை பயன்படுத்துவதாக நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார்.

பலாங்கொடையில் இன்று நடைபெற்ற கூட்டம் ஒன்றில் வைத்து அவர் இதனை கூறியுள்ளார். மேலும் கூறுகையில்,

ஜனாதிபதி தேர்தல் நெருங்கும் போது ஒவ்வொரு பிரச்சினை கிளப்பப்படுகிறது. கடந்த முறை ஹலால் பிரச்சினை கொண்டு வந்தனர்.

தற்போது வில்பத்து பிரச்சினையை களத்திற்கு கொண்டு வந்துள்ளனர். முஸ்லிம் மக்களின் வாக்குகளை சுவீகரிக்க பல்வேறு வழிமுறைகளை கையாள்கின்றனர்.

முழு நாடும் கோத்தபாய ராஜபக்சவை கோருகிறது. அரசாங்கம் பதவிக்கு வந்த நாளில் இருந்து சுதேசியர்கள் பற்றி சிந்திக்கவில்லை.

மிளகு விலை குறைந்துள்ளது. உள்நாட்டு மக்களிடம் வரி அறவிடப்படுகிறது. மக்களை விரட்டி விரட்டி வரிகளை அறவிடுகின்றனர்.

வெளிநாட்டவர்களுக்கு இந்த சட்டத்திட்டங்கள் இல்லை. வெளிநாட்டவர்களுக்கு வரிச்சலுகையில் காணிகளை சொந்தமாக வழங்குகின்றனர்.

வெளிநாட்டவர்கள் கறுப்பு பணத்தை இலங்கைக்கு எடுத்து வரும் வகையில், அந்நிய செலாவணி சட்டத்தில் திருத்தங்களை செய்தனர்.

எந்த வெளிநாட்டு நிறுவனமும் இலங்கையின் ஊடகங்களை கொள்வனவு செய்ய முடியாது என்ற சட்டம் உள்ளது.

எனினும் லண்டனில் இயங்கும் தொலைத்தொடர்பு நிறுவனம் ஒன்று இலங்கையின் ஊடகம் ஒன்றை கொள்வனவு செய்தது.

இலங்கையின் காணிகளை வரைய அமைச்சரவை உபகுழு நியமிக்கப்பட்டது. அதில் நான்கு அமெரிக்கர்கள் இருக்கின்றனர். எமது நாட்டின் காணிகளை அளக்க கூடிய நில அளவையாளர்கள் இருக்கும் போது ஏன் அதனை அமெரிக்கர்களுக்கு வழங்க வேண்டும்.

50 ஏக்கருக்கு மேல் ஒருவர் நிலத்தை கொள்வனவு செய்ய முடியாது என்று இலங்கையில் சட்டம் உள்ளது. அந்த சட்டத்தை மாற்ற புதிய சட்டத்தை கொண்டு வர தயாராகி வருகின்றனர்.

காணி வங்கி மூலம் நாட்டின் காணிகளை நிர்வகிக்க தயாராகி வருகின்றனர். இதற்கு அமைய வெளிநாட்டவர்கள் தமக்கு தேவையான அளவு காணிகளை கொள்வனவு செய்ய முடியும்.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சி முறையை ஒழிக்க வேண்டும் என்ற தேவை யாருக்கு அதிகமாக இருக்கின்றது.

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டு ரணில் விக்ரமசிங்கவுக்கு வெல்ல முடியாது என்பதால், மக்கள் விடுதலை முன்னணி 20ஆவது திருத்தச் சட்டத்தை கொண்டு வந்துள்ளது எனவும் விமல் வீரவங்ச குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.