March 21, 2019

வதந்தியை பரப்பாதீர், நியுசிலாந்திலிருந்து ஒரு சகோதரியின் வேண்டுகோள்...!

- நியூஸீலாந்திலிருந்து, மரீனா இல்யாஸ் ஷாபீ -

கிரிஸ்ட்சர்ச் பள்ளிவாசல் தாக்குதலை அடுத்து நாடெங்கிலும் உள்ள பள்ளிவாசல்கள் பாதுகாப்புக்காக மூடப்பட்டன . ஆயுதம் தாங்கிய போலீஸ் உத்தியோகத்தர் பள்ளிவாசலுக்கு வெளியே காவல் இருந்தனர். இதைத்தொடர்ந்து பல கிறிஸ்தவ தேவாலயங்கள் முஸ்லிம்களுக்கு ஆதரவுக் கரம் நீட்ட ஆரம்பித்தன . 17 ஆம் திகதி ஞாயற்றுக்கிழமை  ஒரு கிறிஸ்தவ தேவாலயத்தில் தாக்குதலை  கண்டிக்கவும், இறந்தவர்களுக்கு நினைவஞ்சலி செலுத்துவற்கும் ஒரு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது . அதில் ஒரு பேச்சளராக என் கணவரும் கலந்து கொண்டார்.

 மண்டபம் நிரம்பி வழிந்தது . ஆசனங்களை முஸ்லிம்களுக்கு ஒதுக்கி விட்டு அந்த மாற்று மத சகோதரர்கள் நின்றுகொண்டு நிகழ்ச்சியை அவதானித்தார்கள் . முஸ்லிம்களுக்கு எதிரான இந்த தாக்குதலை கண்டித்து பேசிய பாதிரியார் தன் பேச்சை ஆரம்பிக்க முன் "பிஸ்மில்லா ஹிர்ரஹ்மான் னிர்ரஹீம் " என்று சொல்லி எல்லோரையும் மெய் சிலிர்க்க வைத்தார் .

சரியாக அஸர் தொழுகைக்கு நேரம் வந்ததுடன் நிகழ்ச்சியை இடைநிறுத்தி , தயவு செய்து இங்கேயே உங்கள் தொழுகையை ஜமா த்துடன் தொழுங்கள் . உங்களுக்ககாக ஒரு தனி அறையை துப்பரவு செய்திருக்கிறோம் என்று அறிவித்ததும் உடல் முழுவதும் புல்லரித்தது . என் கணவர் தொழுகையை நடத்தினார் .

நாங்கள் தொழுகைக்கு நின்றதும்  அவர்கள் எல்லோரும் எங்கள் பின்னால் அணி அணியாக காவலரண்கள் போல் நின்றார்கள் .

தொழுகை முடித்து , உயிரிழந்தோருக்காக துஆ கேட்கும்போது  அவர்களும் குலுங்கி 
குலுங்கி அழுதபடியே ஆமீன் சொன்னார்கள் .

பின்னர் , பெண்கள் வேறாகவும் ஆண்கள் வேறாகவும் நின்று கட்டித் தழுவி முஸாபஹா  செய்தார்கள் ( ஆண்/ பெண் கலப்பு இஸ்லாத்தில் இல்லை என்பது பற்றி பாதிரியார் ஏற்கனவே மேடையில் விளக்கம் கொடுத்து விட்டார் . அதனால் எங்களுக்கு எந்த சங்கடமும் ஏற்படவில்லை ). 
மிகவும் நெகிழ்ச்சியான விடயம் என்னவென்றால் , நிகழ்ச்சி முடிந்த பின்பு எல்லோருக்கும் ஹலால் சாப்பாடு ஏற்பாடு செய்திருந்தார்கள் . 

அதைத்தொடர்ந்து மஹ்ரிப் தொழுவதற்காக போலீசாரின் அனுமதியுடன் பள்ளிக்கு வந்தோம். தேவாலயத்துக்கு வந்திருந்த அத்தனைபேரும் எங்களை பின்தொடர்ந்து பள்ளிவாசலுக்கு வந்தார்கள் . மதில்களை சுற்றி மெழுகுவர்த்தி ஏற்றிவைத்து பூக்களால் பள்ளிவாசலை அழகுபடுத்தினார்கள் . அவர்களும் பள்ளிவாசலுக்குள் அழைக்கப்பட்டபோது ஸலாம் கூறிக்கொண்டே உள்ளே நுழைந்தார்கள் . சில பெண்கள் தலையை மறைப்பதற்காக முன்கூட்டோயே முந்தனைகளை ஆயத்தமாக எடுத்து வந்திருந்த னர். தலையை திறந்து வந்த பெண்கள் அதற்காக மன்னிப்புக் கேட்டுக்கொண்டனர் . திரும்பிப் போவற்குள் சிலர்" இன்னா லில்லாஹி வ'இன்னா இலைஹி ராஜிஊன் " சொல்வதற்கு கற்றுக்கொண்டு விட்டார்கள் . பள்ளிவாசலில் சிந்திய ஷுஹதாக்களின் இரத்தம் வீண்போகவில்லை . அல்லாஹ் யாவற்றையும் அறிந்தவன் . அவன் திட்டம் தீட்டுவோருக்கெல்லாம்  மேலாக திட்டம் தீட்டுபவன் .

ஆனால் , கிரிஸ்டசர்ச் சம்பவத்தின் பின்னர் 350 ஒரேயடியாக இஸ்லாத்துக்குள் நுழைந்து விட்டதாக ஒரு பொய்யான வீடியோ சமூக வலைத்தளங்களில் உலா வருவதை பார்த்தேன் . இது பொய்யான தகவல் . உணர்ச்சி விடப்பட்டு வதந்திகளை பரப்பி எங்கள் மார்க்கத்தை இழிவு படுத்த வேண்டாம். ஹாமில்டன் பள்ளிவாசலுக்கு பூக்கொத்துகளுடன் அனுதாபம் தெரிவிக்க வந்த சுமார் 50 - 55 வயது மதிக்கத் தக்க ஒரு தம்பதி கண்ணீர்மல்க ஷஹாதா மொழிந்தனர் என்ற செய்தி மட்டுமே உண்மை. 21.03.2019

பிற்குறிப்பு 

கிரிஸ்டசர்ச் சம்பவத்தின் பின்னர் 350 இஸ்லாத்துக்குள் நுழைந்ததாக சில ஆங்கில புளக்குகளை மேற்கோள் காட்டி எமது இணையமும் குறித்த தகவலை பதிவிட்டிருந்தது. எனினும் அந்த தகவல் தவறானது என அறிந்ததும் குறித்த செய்தி நீக்கப்பட்டு விட்டமை கவனிக்கத்தக்கது.

0 கருத்துரைகள்:

Post a comment