Header Ads



பாசிசம் கோலோச்சிய மண்ணிலேயே மோடியையும், இந்து மதவெறியையும் எதிர்த்த முகுல் சின்கா

குஜராத் 2002 முஸ்லிம் மக்கள் படுகொலையில் பாதிக்கப்பட்ட மக்களின் நீதிக்காக இந்திய நீதிமன்றங்களில் போராடியவரும், இறுதி மூச்சு வரை மதச்சார்பின்மை கருத்தியலை நெஞ்சில் ஏந்தியவரும், மோடியின் போலிமோதல் (என்கவுண்டர்) கொலைகளை அம்பலப்படுத்தியவரும், மோடியின் குஜராத் வளர்ச்சி போலி பிம்பத்தை உடைத்தவர்களில் ஒருவரும், குஜராத்தின் ஒடுக்கப்பட்ட இஸ்லாமிய மக்களின் நண்பருமான வழக்கறிஞர் முகுல் சின்காவைப் பற்றி இப்பதிவில் பார்போம்.

முகுல் சின்கா

மத்திய பிரதேச மாநிலத்தில் பிறந்த முகுல் சின்கா ஐ.ஐ.டி கான்பூரில் உயர்கல்வி பயின்றார். குஜராத் பல்கலைக் கழகத்தில் உயிர்ம இயற்பியலில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றார். குஜராத்தின் உடலியல் ஆய்வகத்தில் சிறிது காலம் சிறப்பு விஞ்ஞானியாக பணிபுரிந்தார். அப்போது அங்கு கீழ்நிலை ஊழியர்கள் நடத்தப்பட்ட விதத்தை எதிர்த்து குரல் கொடுத்தார். விஞ்ஞான ஆய்வகங்களிலிருந்து வெளியேறும் நச்சுக்கழிவு உருவாக்கும் பணிபுரிபவர்களுக்கு பாதுகாப்பற்ற நிலை காரணமாக அவை தொழிற்சாலைகள் போன்றே கருதப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் ஒரு வழக்கில் தீர்ப்பு வழங்கியது. உடனே குஜராத் உடலியல் ஆய்வக ஊழியர்களின் நலனை பேண தொழிற்சங்கத்தை கட்டினார், முகுல் சின்கா. அடுத்த சில நாட்களிலே ஆய்வகத்திலிருந்து வெளியேற்றப்பட்டார். பிறகு வக்கீலுக்கு படித்து மக்கள் பிரச்சினைகளுக்கு முன்நின்றார்.

குஜராத்தில் மோடி முன்நின்று நடத்திய இனப்படுகொலையின் ரத்த சாட்சியங்களை ஜனநாயக சக்திகளுடன் ஒருங்கிணைந்து வெளிக் கொணர்ந்தார். (முகுல் சின்காவின் பங்களிப்பில் நடத்தப்பட்டு வரும் http://www.truthofgujarat.com/இணையதளம்). 97 முஸ்லிம்கள் கொடூரமாக கொல்லப்பட்ட நரோடா பாட்டியா வழக்கில் கொலையாளிகளை வழி நடத்திய மாயா கோட்னானிக்கு 28 வருட சிறை தண்டனையும், பாபு பஜ்ரங்கி தனது மிச்சமிருக்கும் வாழ்நாளை சிறையில் கழிக்கவும், குற்றம்சாட்டப்பட்டவர் ஒருவர் கூட தப்பிக்க இயலாத வண்ணம் மேலும் 30 பேருக்கு 24 வருடங்கள் சிறை என கடுமையான பிரிவுகளில் தண்டனை வாங்கித் தந்தவர் முகுல் சின்கா.

குஜராத் படுகொலைகளுக்கு பிறகு இந்துத்துவத்தின் புதிய விளம்பர முகமாக மாறியிருந்த மோடியின் பிம்பத்தை உப்ப வைக்க, போலி மோதல் கொலைககளில் முஸ்லிம் இளைஞர்கள் பலர் கொல்லப்பட்டார்கள். அதில் முக்கியமான ஒன்று, இஷ்ரத் ஜகான் போலிமோதல் வழக்கு. மும்பையின் மும்ப்ரா பகுதியை சேர்ந்த கணினியியல் இளங்கலை இரண்டாம் ஆண்டு பட்டப்படிப்பு படித்து வந்த இளம்பெண் இஷ்ரத், மே மாத விடுமுறையில் விற்பனையாளர் பணிக்கு குஜராத் வந்த போது கைது செய்யப்பட்டார். அவருடைய நண்பர் ஜாவேத் அக்தர் மற்றும் பாகிஸ்தானைச் சேர்ந்த அம்ஜத் அலி ராணா, ஜீஷன் ஜோகர் ஆகியோரை தனித்தனியாக கைது செய்தது குஜராத் காவல்துறை. பிறகு மூவரையும் ஒரு டாடா இண்டிகா காரில் அமர வைத்து கொலை செய்தனர். இந்த போலிமோதல் கொலையை அம்பலப்படுத்தியதோடு, நீதிமன்றங்களில் அவர்களுக்காக வாதாடிய வழக்கறிஞர் முகுல் சின்கா.

இஷ்ரத் ஜகான் நடத்தை கெட்டவள், லஷ்கர் தீவிரவாதிகளுடன் தொடர்புடையவர் என்று இந்து மதவெறியர்கள் அவதூறுகளை உமிழ்ந்தனர். அவர்களுடைய அத்தனை வகையான அவதூறுகளையும் நீதிமன்றங்களிலும், மக்கள் அரங்குகளிலும், தொலைக்காட்சி விவாதங்களிலும் அஞ்சாமல், தளராமல் முறியடித்து வந்தார், முகுல் சின்கா. முகுல் சின்கா விட்டுச் சென்ற பணியை குஜராத்தில் இருக்கும் அவருடைய நண்பர்கள் நிச்சயம் தொடர்வார்கள். மோடியும், அமித் ஷாவும் இன்னபிற கொலையாளிகளும் தண்டிக்கப்படும் காலமும் கனியும்.

பாசிசம் கோலோச்சிய மண்ணிலேயே மோடியையும், இந்து மதவெறியையும் தளராமல் எதிர்த்து நின்ற நெஞ்சுறுதியை முகுல் சின்காவிடமிருந்து பெறுவோம்!

1 comment:

  1. The prosecutors must convey the abysmal crimes committed by Modi & his BJP felons against humanity in Gujarat to ICC and wanted to electrocute them.

    ReplyDelete

Powered by Blogger.