Header Ads



புரிந்துணர்வு அடிப்படையில் முஸ்லிம்களின், பிரச்சினைகளை தீர்த்துக்கொள்ள வேண்டும்: ஹக்கீம்

அநுராதபுரத்தில் காணிப் பிரச்சினை உட்பட, மாற்றுமத சகோதரர்கள் மத்தியிலும் முரண்பாடுகள் இருந்து வருகின்றன. மாற்று சமூகத்தினருடன் புரிந்துணர்வு அடிப்படையில் எங்களது பிரச்சினைகளை புத்திசாதுரியத்துடன் தீர்த்துக்கொள்ள வேண்டும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நகர  திட்டமிடல், நீர் வழங்கல் மற்றும் உயர்கல்வி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

நகர திட்டமிடல், நீர் வழங்கல் மற்றும் உயர் கல்வி அமைச்சின் நிதியின் 7.7 மில்லியன் ரூபா நிதியொதுக்கீட்டில் சிறிய நகர அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் நேற்று (02) காபட் வீதியாக அபிவிருத்தி செய்யப்பட்ட மிஹிந்தலை - கடுகெலியாவ வீதியை திறந்து வைத்தபின் நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர் ரவூப் ஹக்கீம் மேலும் கூறியதாவது;

கடந்த 5 வருடங்களாக அனுராதபுர மாவட்டத்தில் நலிவடைந்த எங்களது கட்சியை மீள நிறுத்தியிருக்கிறோம். கடந்த உள்ளூராட்சி தேர்தலில் தனித்து மரச் சின்னத்தில் போட்டியிட்டு 7 உறுப்பினர்களை வென்றிருக்கிறோம். சமூகத்தின் வளர்ச்சிக்காகவும், நாட்டின் ஈடேற்றத்துக்காகவும் உழைக்கின்ற இயக்கமாக எங்களது போக்கை வகுத்துக்கொள்ள வேண்டும். இதன் முதற்கட்டமாக நாடு முழுவதும் கட்சிக் கிளைகளை புனரமைப்பதுடன், இளைஞர் காங்கிரஸையும் மாதர் காங்கிரஸையும் வளர்ப்பதில் நாங்கள் முன்னேற்றம் கண்டு வருகிறோம்.

அநுராதபுரத்தில் காணிப் பிரச்சினை உட்பட, மாற்றுமத சகோதரர்கள் மத்தியிலும் முரண்பாடுகள் இருந்து வருகின்றன. நாங்கள் அவற்றை மிகவும் சாணக்கியத்துடன் கையாண்டு, அதனை தீர்க்கின்ற வேலைகளை பக்குவமாக கையாண்டு வருகிறோம். வன இலாகா, வனவிலங்கு திணைக்களம், தொல்லியல் திணைக்களம் போன்றவற்றால் பல புதிய பிரச்சினைகள் உருவாக்கப்படுகின்றன. இதனால் நாட்டில் சம பிரஜைகளால் வாழ்வதில் பல சிக்கல்களை நாங்கள் எதிர்நோக்கி வருகிறோம்.

இவற்றை தீர்ப்பதற்கான வழிமுறைகளை நாங்கள் கண்டறிய வேண்டும். நாட்டிலுள்ள சகல இனங்களுக்கும் மத்தியில், முஸ்லிம்களும் சுயநிர்ணயத்துடன் தலை நிமிர்ந்து வாழவேண்டும். மாற்று சமூகத்தினருடன் புரிந்துணர்வு அடிப்படையில் எங்களது பிரச்சினைகளை புத்திசாதுரியத்துடன் தீர்த்துக்கொள்ள வேண்டும். இந்த விடயங்கள் தொடர்பில் ஆழமான கலந்துரையாடல்கள் இடம்பெறவேண்டும்.

சீரான வடிகாலமைப்பு வசதிகள் இல்லாமையால், பாடசாலையை அண்டிய பிரதேசங்களில் மக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம்கொடுக்கின்றனர். இதனை நிவர்த்திப்பதற்கான ஒதுக்கீட்டை இந்த வருடத்துக்குள் ஒதுக்கித்த தருவதற்கு தீர்மானித்துள்ளேன் என்றார்.

ஊடகப்பிரிவு 
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்

No comments

Powered by Blogger.