Header Ads



தனக்கென்று ஒரு சுயம் இல்லாத, புர்கா அணிந்த பெண்

- ஷமீலா யூசுப் அலி - 

இதுதான் முஸ்லிம் பெண்ணோடு இணைந்துள்ள பிரபல்யமான பொதுப்படையான அடையாளம். ஒரு சொல்லை உதிர்க்க முன்னரே நீங்கள் முத்திரை குத்தப்படுவீர்கள், மதிப்பீடு செய்யப்படுவீர்கள். பொதுவாக முஸ்லிம்களாலும் குறிப்பாக முஸ்லிம் பெண்களாலும் உணரப்படும் இந்த ‘அந்நியப்படுத்தப்படல் – alienation ’ சமீப காலங்களில் வெகுவாக அதிகரித்திருக்கிறது. ‘ஆபிரிக்கா’ என்ற சொல், நாகரீகமற்ற, கல்வியறிவு குறைந்த வறுமைக்கோட்டுக்குக் கீழே அல்லலுறும் ஒரு மக்கள் குழுவை எங்கள் கண் முன்னே நிறுத்துகிறது. ஆபிரிக்கா பற்றிய மிக அபத்தமான கணிப்பு அது ஒரே நாடு என்பதும் அந்த மக்கள் யாவரும் ஒரே விதமான கலாச்சாரத்தைப் பின்பற்றுகிறார்கள் என்பதும் தான்.

அதே போல, முஸ்லிம் பெண்கள் என்றதும் அவர்களோடு, அடக்கியாளப்படும், குரலற்ற ஒரு பின்தங்கிய ஒரு வகுப்பினர் என்ற அடையாளக்குறிகள் இணைக்கப்படுகின்றன. முஸ்லிம் பெண்கள் ஒரு பெட்டிக்குள் வகைப்படுத்த முடியுமான ஒரினத்தன்மையான குழுவல்ல. எல்லாப் பெண்களையும் போல முஸ்லிம் பெண்களும் பல்வேறு வகைப்பட்ட அடையாளங்களைக் கொண்டவர்கள். வித்தியாசமான கருத்துக்களையும் விழுமியங்களையும் உடையவர்கள். அந்த அடையாளங்கள் வெவ்வேறு விதமான பின்னணிகளிலிருந்தும் கலாச்சாரங்களிலிருந்தும் எழுகின்றன, ஒர்லன்டோ போல்ஸ் போர்டா என்கிற சமூகவியலாளர் சொல்கிறார்.

“ஆதிக்க விருப்பங்களுக்கு இடம் கொடுக்கும் அறிவியல் மற்றும் வரலாறு சம்ப்ந்தமான மேல்வர்க்க கருத்தாடல்களை நம்ப வேண்டாம். ஆனால் அதற்கெதிரான சிறுகதையாடல்களை வரவேற்று அவற்றை மீட்டெடுங்கள்.” முஸ்லிம் பெண்களின் பல்வகைமை, தனித்துவம்,சிக்கல்களை பிரதிநிதித்துவப்படுத்துவதில் அல்லது புனைவுருப்படுத்துவதில் பொதுப்போக்கு ஊடகங்களும் இலக்கியங்களும் பின்னிற்கின்றன. 9/11 மற்றும் அமெரிக்காவின் பயங்கரவாதத்திற்கெதிரான யுத்தத்தின் பின்னர் பொதுப்போக்கு ஊடகங்கள் முஸ்லிம்களை அடையாளப்படுத்தும் முறை கடுமையான மாற்றத்துக்குள்ளாகியது. இது முஸ்லிம்கள் சம்பந்தமான பொதுமக்களின் மனப்போக்கிலும் வேறுபாட்டைக் கொண்டு வந்தது. முஸ்லிம் சமூகத்துக்குள்ளே இந்த ‘அந்நியமாதல்’ மிகச் சிக்கலாக வேரோடிக் கிளை கொள்ள ஆரம்பித்தது. உலகிலுள்ள எந்தவொரு ஆண்மைய சமூகத்தையும் போலவே முஸ்லிம் சமூகத்துக்குள்ளும் பெண்ணை அடக்கியாள்தல் புற்றுநோயாகப் புரையோடிப் போயிருக்கிறது. அதை யாரும் மறுக்க முடியாது. ஆனாலும், மேலைத்தேய ஆதிக்க கலாச்சாரம் முஸ்லிம் பெண்களை ஒரே தூரிகையால் வரைய முனைகிறது. அவர்களைப் பொறுத்தவர முஸ்லிம் பெண்கள் பாதிக்கப்பட்டவர்கள் அல்லது பாதிப்புக்களுக்கு எதிராகப் போராடுபவர்கள்.

ஆனால் நடைமுறையில் முஸ்லிம் பெண்கள் இரண்டு பாரிய சவால்களை எதிர்நோக்குகிறார்கள். 1. அவர்களுடைய சொந்த சமூகங்களுக்குள்ளே பெண் அடக்குமுறைகளுக்கெதிரான போராட்டம் 2. முஸ்லிம் பெண்களை அடக்குமுறைகளிலிருந்து விடுதலை செய்யும் தேவதூதர்களாக தங்களைக் காட்டிக்கொள்ளும் போலிகளுக்கெதிரான போராட்டம். முஸ்லிம்கள் அந்நியர்களாக அடையாளப்படுத்தப்படும் இந்த காலகட்டத்தில் முஸ்லிம் பெண்களின் அடையாளம் அல்லது தனித்துவம் கண்டுகொள்ளப்படுவதில்லை என்பதில் அதிசயம் ஒன்றும் இல்லை. இஸ்லாம் என்பது உலகம் முழுவதுமுள்ள முஸ்லிம்களை இணைக்கும் பாலம். ஆனால் முஸ்லிம்கள் வித்தியாசமான கலாச்சார கட்டமைப்புகளில் வாழ்கிறார்கள்.வேறுபட்ட மொழிகளைப் பேசுகிறார்கள், தனித்துவமான வாழ்க்கை முறைகளைப் பின்பற்றுகிறார்கள். இஸ்லாத்தை மத்தியகிழக்கோடு இணைத்து அனேகர் நோக்கினாலும் முஸ்லிம்களில் 62% ஆனவர்கள் ஆசியா பசிபிக் பிராந்தியத்தைச் சேர்ந்தவர்கள். மொத்த மத்திய கிழக்கு- வட ஆபிரிக்கா பிராந்தியத்தை விட இந்தியா- பாகிஸ்தானில் அதிக முஸ்லிம்கள் இருக்கிறார்கள். உலகிலுள்ள கலாச்சார குழுமங்கள் வித்தியாசமான மாதிரிகளைக் கொண்டிருக்கின்றன.

நாங்கள் ஓவ்வொரு சமூகத்தையும் மேலைத்தேய கலாச்சார அல்லது அடையாள மாதிரிகளை வைத்தே மதிப்பிட முயல்கிறோம். மத்திய கிழக்கு, கிழக்காசியா,ஆசியா, ஆபிரிக்கா அல்லது லத்தீன் அமெரிக்கா- ஒவ்வொரு பிராந்தியமும் அவற்றுக்கேயிரிய தனித்துவமான தம் மண் சார்ந்த மாதிரிகளையும் கலாச்சார நடத்தைகளையும் கொண்டிருக்கிறது. எங்களுடைய கலாச்சாரங்கள் வேறுபடுகின்றன. எங்களுடைய நுட்ப வித்தியாசங்களும், சொல்லிலடங்காத உணர்வெழுச்சிகளும் வேறுபடுகின்றன. ஆனால், பெருங்கதையாடல் முஸ்லிம் பெண்களை அடக்கியாளப்படும் பலவீனமான ஒரு குழுவாக மட்டுமே சித்தரிக்கிறது. இந்த ஆதிக்கக் கதையாடல்களை மண்ணும் கலாச்சாரமும் சார்ந்த சிறுகதையாடல்கள் மூலம் மீள எழுதுவது இங்கு முக்கியம் பெறுகிறது. சமூக எழுச்சியும் மாற்றங்களும் முஸ்லிம் சமூகங்களுக்குள்ளே ஆரம்பிக்கப்பட வேண்டும். மேற்கு அடையாளப்படுத்துவதற்குப் பதிலாக தங்களை தாங்களே மொழிபெயர்க்கும் சந்தர்ப்பங்கள் முஸ்லிம் பெண்களுக்கு வழங்கப்பட வேண்டும். அனேகமான மேற்குலகத்தவர்களுக்கு, ஷெஹர்ஸாத் ஒரு இனிமையான ஒரு கதைசொல்லி மட்டுமே. தீங்கற்ற கதைகளைச் சொல்லும், மிக அற்புதமாக உடையணியும் ஒரு களிப்பூட்டும் பெண். ஆனால் எங்களுடைய உலகில், அவள் ஒரு தீரமிக்க வீரப் பெண். மிக அரிதான இதிகாசபெண் ஆளுமை” பாதிமா மெர்னிஸ்ஸி நீங்கள் மிக அழகிய ஆயிரத்தொரு இரவுகள் கதைகளைப் பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். செஹர்ஸாத் கதைகளைச் சொல்லுவதன் மூலம் மன்னனின் மனதை மாற்றி அதன் மூலம் தன்னுடைய வாழ்க்கையும் ஆயிரக்கணக்கான மற்றப் பெண்களின் வாழ்க்கையையும் மாற்றிய அறிவும் நுட்பமும் பொருந்திய பெண். முஸ்லிம் பெண்களிடமும் வெறும் ஒரு கதையல்ல, ஆயிரத்தொரு கதைகள் இருக்கின்றன.

No comments

Powered by Blogger.