Header Ads



முஸ்லிம்களுக்கே நிலத்தொடர்பற்ற அலகு முக்கியமானது - சம்பந்தனை இனவாதியாக சித்தரிப்பது தவறு

- வ.ஐ.ச.ஜெயபாலன் -

சம்பந்தனின் பச்சை இனவாதம் – இரண்டு முஸ்லிம் பிரதேச செயலகங்கள் உருவாகிவிடுமென புலம்பல் என்பதுபோல பல்வேறு சம்பந்தன் இனவாதி என பிரசாரம் செய்யும் எதிர்க் கருத்துக்கள் சமூக வலைத் தளங்களில் பகிரபட்டு வருவது தமிழ் முஸ்லிம் இன ஐக்கியத்தை கனவுகாணும் என்போன்ற பலருக்கு அதிற்சியை ஏற்படுத்துகிறது.

கடந்த மாகாணசபை தேர்தலில் அதிக வெற்றிகளைப் பெற்றபோதும் தமிழர் எதிர்ப்பையும் புறந்தள்ளிவிட்டு திரு சம்பந்தன் முதலமைச்சர் பதவியை முஸ்லிம்களுக்கு விட்டுக் கொடுத்தார். இதற்காக அவர் இன்றளவும் விமர்சிக்கப் படுகிறார். செல்வநாயம் அவர்களின் மறைவுக்குப் பிறகு சம்பந்தன்போல முஸ்லிம்களோடு நல்லுறவை நாடும் இனொரு தமிழ் தலைவர் இல்லையென்று சொல்லுவேன். வரலாற்று ரீதியாக முஸ்லிம்கள் யாரும் அவரை பச்சை இனவாதியென சொல்ல வாய்ப்பில்லை. இன்றைய மதிப்பீடுகளின்படி 70188 மக்கள் வாழும் மூதூர் பிரதேச சபையில் 26,608 தமிழர்கள் வாழ்கிறார்கள். அவர் எதிர்பது தோப்பூர் பிரதேச சபை உருவாகுவதையல்ல. தமிழர்களை பிழவுபடுத்துவதைதான் சம்பந்தர் எதிர்க்கிறார். இதை முஸ்லிம்கள் உணர வேண்டும். 

காலம்காலமாக நாடாளுமன்றத்தில் இரட்டை அங்கத்தவர் தொகுதிபோல முஸ்லிம்களதும் தமிழரதும் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்தும் அமைப்புகள் செயல்பட்டுவந்தது என்பதை நாம் நினைவுகூரவேண்டும். இன்றைய சூழலில் நிலத்தொடர்பற்ற மூதூர் பிரதேசபை தோப்பூர் பிரதேச சபை என இரண்டு முஸ்லிம் பிரதேச சபைகளையும் சம்பூர் போன்ற தமிழ் பிரதேசங்களை இணைத்து தமிழருக்கு ஒரு பிரதேச சபையையும் உருவாக்குவதுதான் இப்பிரச்சினைக்குத் தீர்வாக அமையும். 

மூதூர் பிரச்சினை கல்முனை பிரச்சினையின் ஆரம்பகால சூழலை நினைவூட்டினாலும் அவற்றை ஒப்பிட முடியாது. கல்முனைப் பிரச்சினையில் நிலத்தொடர்பற்ற வகையில் தமிழ் பிரதேச செயலகம் நெடுங்காலமாக செயல்பட்டு வருகிறது. போர் நெருக்கடியில்கூட அச்செயலகத்தை ரத்துச் செய்ய முடியவில்லை. எனவே கல்முனைப் பிரதேச சபை பிரச்சினை எப்போ தரம் உயர்த்தப்படும் என்பதுதான். மூதூர் பிரச்சினை அதுவல்ல.

1980 பதுகளில் முஸ்லிம் நிர்வாக அலகு சிக்கலுக்கு விடையாக நிலத் தொடர்பற்ற அதிகார அலகுகள் என்கிற கருத்தாக்கத்தை உருவாக்கியதில் எனக்கும் பங்குண்டு, இந்தவகையில் நிலதொடர்பற்ற பிரதேச சபை. நிலத்தொடர்பற்ற கல்வி மற்றும் திணைக்களங்களின் நிர்வாக அலகுகள் என்பவற்றை நான் மீண்டும் மீண்டும் வலியுறுத்தி வருகிறேன். இலங்கையில் சகல சிறு இன மக்களுக்கும் நிலத்தொடர்பற்ற அலகு அவசியமான கருத்தாக்கமாகும். நிலத் தொடர்பற்ற அலகு கருத்தாக்கம் ஏனைய இனங்களைவிட முஸ்லிம்களுக்குத்தான் மிக மிக முக்கியமானது. இதனை நாம் கேழ்விக்கு உள்ளாக்கக்கூடாது.

முஸ்லிம்களை தமிழரும் தமிழரை முஸ்லிம்களும் சிங்கள பெளத்த இனவாதிகளின் பக்கம் தள்ளிவிடுகிற அபத்தமான அரசியலை இருசாராரும் கைவிடவேண்டும் என கோருகிறேன்.
மூதூர், தோப்பூர் மற்றும் சம்பூர் பிரதேச செயலக உருவாக்கத்தை ஆதரிப்போம்

No comments

Powered by Blogger.