Header Ads



திருகோணமலையில் மதக் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சி

திருகோணமலையிலுள்ள சிவலிங்கத்தை உடைத்திருக்கின்றமையானது, இந்நாட்டில் மீண்டும் மத ரீதியான குழப்ப​த்தை ஏற்படுத்துவதற்கு, ஒரு குழு முயன்று வருகின்றதா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது என, மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் பிரதித் தலைவரும் இலங்கைக்கான உல சைவ திருச்சபையின் தலைவருமான வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.  

டயகம மன்ராசி பீ.ஜே.வீ சிறுவர் பாடசாலை ஏற்பாட்டில் நடைபெற்ற வரைதல் போட்டியில் வெற்றி பெற்ற சிறுவர்களுக்கான பரிசளிப்பு விழா, டயகம நிசாந்தினி மண்டபத்தில் நடைபெற்றது.  

இதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,  

இச்சம்பவத்தை, வன்மையாகக் கண்டிப்பதாகக் கூறிய அவர், சைவ சமயமும் பௌத்த மதமும், ஒன்றாகப் பயணிக்க வேண்டும் என்ற ரீதியிலான நடவடிக்கைகளை எடுத்து வருகையில், சிவலிங்கம் உடைக்கப்பட்டமையானது, சைவத் தமிழர்களுடைய மனங்களில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது என்றும் கூறினார்.  

இந்தச் சிலையை, தொல்பொருள் ஆராய்ச்சி நிறுவனத்தினர் உடைத்திருப்பதாகத் தெரியவந்துள்ளது என்றும் அப்படியானால், அவ்வாறு செய்வதற்கு, அவர்களுக்கு யார் அதிகாரம் கொடுத்தது என்றும் அவர் கேள்வியெழுப்பினார். 

எனவே, இது தொடர்பாக, ஜனாதிபதி, இந்து கலாசார அமைச்சர் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் இல்லையேல், மத ரீதியான குழப்பங்கள் நாட்டில் ஏற்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.