March 20, 2019

இஸ்லாத்தை ஏற்ற சகோதரி, பயங்கரவாதிக்கு எழுதிய மடல்

நியூசிலாந்து பள்ளிவாயலில் தாக்குதல் நடத்தியவனுக்காக, இஸ்லாத்தை தழுவிய சீன தேசத்து சகோதரி ஒருவரால் எழுதப்பட்ட அழகிய மடல்!

எங்கள் மதிய நேரப் பிரார்த்தனையின் நேரத்தினை அறிந்துகொள்ள நீங்கள் எடுத்த முயற்சிக்கு பாராட்டுகள்!

வெள்ளிக்கிழமைகளில்தான் அதிகமான முஸ்லிம்கள் கூட்டுப் பிரார்த்தனைக்காக பள்ளிவாயலுக்கு வருகிறார்கள் என்பதை கண்டறிய நீங்கள் இஸ்லாம் தொடர்பாக அதிகம் கற்றுக்கொண்டதற்கும் பாராட்டுகள்!

ஆனாலும் துரதிர்ஷ்ட வசமாக நீங்கள் சிலதை கற்றுக்கொள்ள முடியாமல் போயிருப்பதாகவே நான் கருதுகிறேன்!

நீங்கள் நடாத்திய வன் செயலால் மனிதர்களான அவர்கள் தியாகிகளாக மாறிப்போனது ஒருவேளை உங்களுக்கு தெரியாமலிருக்கலாம்.

உங்களின் செயலால் மரணித்த எங்கள் சகோதர சகோதரிகளின் அந்தஸ்த்தை தனி ஒருவனாய் நீங்கள் படைத்தவனின் பார்வையில் உயர்த்தி விட்டமையால் (மறுமையில்) அவர்கள் முஸ்லிம்களில் மிக நீதியும் நேர்மையும் மிக்கவர்களாக எழுப்பப்பட இருக்கின்றார்கள்.

ஒருவேளை நீங்கள் என்ன செய்தீர்கள் என தெரியாமலே செய்திருக்க கூடும்! ஆனாலும் நீங்கள் தேர்ந்தெடுத்த இடத்தாலும் நேரத்தாலும் அவர்களின் உதடுகளிலிருந்து வெளியான கடைசி வார்த்தைகளானது ஏக இறைவனை நினைவூட்டுவதும் துதிப்பதுமாகவே அன்றி வேறெதுவுமாக இருந்திருக்க முடியாது. அது பல முஸ்லிம்களுக்கு வெறும் கனவாகவே போய்விடுகிற மிக உன்னதமான ஒன்று!

நீங்கள் செய்தது அவர்களுக்கு நிரந்தரமான சுவன வாழ்வை உத்தரவாதமளிக்க கூடிய ஒன்றென்பதும் ஒரு வேளை உங்களுக்கு தெரியாமல் போயிருக்கும்.

உங்களை போன்றவர்களை கூட முஸ்லிம்கள் எப்படி தங்களது இரண்டாவது இல்லமான பள்ளிவாயலினுள் திறந்த கரங்களோடு வரவேற்கிறார்கள் என்பதை உலகிற்கு காண்பித்தமைக்கு நன்றிகள்!

எங்கள் வணக்கஸ்த்தலங்களுக்கு கதவுகளோ பூட்டுக்களோ கிடையாது என்றும் எவரும் எங்களின்பால் வரவேற்கப் படுவதனால் எந்தக் காவற் தடுப்புகளும் கிடையாது என்பதை உலகிற்கு அறிவித்ததற்கும் நன்றிகள்!

உங்களால் காயப்படுத்தப்பட்ட மனிதர் தம் மரணப் படுக்கையிலும் ஆட்காட்டி விரலை வான் நோக்கி உயர்த்தி எங்கள் ஏக இறைவன் மீதான பூரண நம்பிக்கையை வெளிப்படுத்தும் ஒரு சக்தி மிக்க புகைப்படத்தை உலகெங்கும் பரவச்செய்தமைக்கு பாராட்டுகள்.

தேவாலயங்களையும், பல சமூகங்களையும் முஸ்லிம் மக்களோடு தோள் கொடுக்க வைத்தமைக்கும் பாராட்டுகள்!

எண்ணற்ற நியூசிலாந்து பிரஜைகளை அவர்களின் வீடுகளை விட்டு வெளிவரச் செய்து பூங்கொத்துகளையும் அன்பையும் சமாதானத்தையும் வெளிப்படுத்துகிற அழகான பதாதைகளையும் ஏந்தியவர்களாக எங்கள் பள்ளிவாயல்களுக்கு வரச் செய்தமைக்கு நன்றி!

பல லட்சம் இதயங்களை உடைத்தெறிந்து உலகையே கண்கலங்கச் செய்து நிறப்ப முடியாத ஒரு வெற்றிடத்தை நீங்கள் ஏற்படுத்தியிருக்கலாம்.

ஆனாலும் நீங்கள் எங்களை மிக நெருக்கமாக மாற்றியிருக்கின்றீர்கள்! அது எங்களுடைய நம்பிக்கையையும் விசுவாசத்தையும் மிகப் பலப் படுத்தியிருக்கின்றது!

உங்களால் உயிர்நீத்த எங்களின் சகோதரர்களால் ஈர்க்கப்பட்டு தங்கள் இறை விசுவாசத்தின் பலத்தால் செறிவுற்று வருகின்ற வாரங்களில் இதைவிட இன்னும் அதிகமான மக்கள் நீங்கள் மிக வெறுக்கக் கூடிய இந்த இறையில்லங்களுக்கு வருவார்கள்.

அதைப்போலவே இன்னும் அதிகமான முஸ்லிம் அல்லாத சகோதரர்கள் கூட புதிதான பூங்கொத்துகளோடும் தங்கள் கைகளால் எழுதப்பட்ட அழகான குறிப்புகளோடும் எங்கள் பள்ளிகளின் வாயில் நோக்கி வருவார்கள்! இத்தனை நாட்களாய் அவர்களின் கண்களிற்கு மறைவாய்க் கிடந்த எங்கள் இறையில்லங்கள் எல்லாம் ஒரே நாளில் வெளிச்சத்திற்கு வந்துவிட்டதென்றால் அது அத்தனையும் உங்களால்தான்!

நீங்கள் திட்டமிட்ட அழிவை வேண்டுமானால் சாதித்திருக்கலாம்! ஆனாலும் நீங்கள் தூண்டிவிடத் துடித்த வெறுப்பையும் பயத்தையும் விரக்தியையும் சாதிக்க முடியாமல் கடைசியில் தோற்றுப் போனதாகவே நான் கருதுகிறேன்.

இதுதான் உங்களது குறிக்கோளாக இருக்கும் என நான் உணர்கின்ற வேளையில் எனக்கு சொல்வதற்கு சங்கடமாகவே இருந்தாலும் உங்கள் இத்தனை விரிவான திட்டமிடல்களுக்கும் அத்தனை கீழ்த்தரமான விபரீதமிக்க முயற்சிகளுக்கும் ஊடாக முஸ்லிம்களையும் முஸ்லிம் அல்லாதோரையும் பிளவு படுத்தும் நோக்கத்தில் நீங்கள் தோற்றுப் போய்விட்டீர்கள்!

அதற்காக என்னை மன்னிக்கும்படி உங்களிடம் நான் கேட்கப் போவதில்லை!

(ஒரு பிரகாசமான முஸ்லிம்)

4 கருத்துரைகள்:

மாஷா அல்லாஹ். அல்லாஹ் போதுமானவன்.

Post a Comment