Header Ads



ஒருவரை மௌத்தாக்கிய யானை - யானைக்கும் சிகிச்சையளிப்பு, புத்தளம் - அநுராதபுரம் வீதியில் சம்பவம்


புத்தளம் - அநுராதபுரம் பிரதான வீதியின் 17 ஆம் கட்டை புத்தி தசுன்கம பகுதியில் இன்று (11) அதிகாலை பயணித்த வாகனம் ஒன்றின் மீது காட்டு யானை தாக்குதல் நடத்தியதில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் ஒருவர் பலத்த காயங்களுக்குள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

புத்தளம், மணல்குன்று பகுதியைச் சேர்ந்த அப்துல் ஹமீட் பௌசுல் ஹக் (வயது 39) என்பவரே இவ்விபத்தில் உயிரிழந்துள்ளார் என கருவலகஸ்வெவ பொலிஸார் தெரிவித்தனர். 

இன்று அதிகாலை 3 மணி அளவில் புத்தளத்தில் இருந்து தம்புள்ள பகுதியை நோக்கிச் சென்றுகொண்டிருந்த கெப் வாகனம் ஒன்றின் மீது, வீதியில் தரித்து நின்ற காட்டு யானை ஒன்று தாக்குதல் நடத்தியதில் இவ்விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர். 

இதன்போது குறித்த கெப் வண்டியில் இருவர் பயணித்துள்ளனர். காட்டு யானை கெப் வண்டியை தாக்கி சேதப்படுத்தியதில் சாரதிக்கு பக்கத்தில் இருந்து பயணித்த நபர் உயிரிழந்துள்ளதுடன், கெப் வண்டியின் சாரதி பலத்த காயங்களுக்கு உள்ளான நிலையில் புத்தளம் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

இதேவேளை, குறித்த நபர்கள் பயணித்த கெப் வண்டியின் மீது தாக்குதல் நடத்திய காட்டு யானை, பலத்த காயங்களுக்கு உள்ளாகி சம்பவம் நடந்த இடத்திலேயே வீழ்ந்துள்ளது. 

இவ்வாறு சம்பவத்தில் காயமடைந்த குறித்த யானைக்கு சிகிச்சை அளிப்பதற்காக வடமேல் மாகாண வனவிலங்கு திணைக்கள அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். 

அத்துடன், யானைத் தாக்குதலுக்கு உள்ளான கெப் வண்டியின் முன்பக்கம் கடுமையாக சேதமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

இந்த சம்பவம் தொடர்பில் கருவலகஸ்வெவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

புத்தளம் - அநுராதபுரம் வீதியின் கடந்த சில மாதங்களாக இவ்வாறு காட்டு யானைகள், வாகனங்கள் மீது தாக்குதல் நடத்திய சம்பவங்களும், அதனால் பல உயிரிழப்புக்கள் ஏற்பட்டுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது. 

(ரஸ்மின்)

No comments

Powered by Blogger.