Header Ads



அலுகோசு பதவியும், முக்கிய இரகசியங்களும் - இலங்கையில் அறிமுகப்படுத்தியது யார்?

மரண தண்டனை நிறைவேற்றும் அலுகோசு பதவிக்கான விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளும் திகதி முடிவடைந்து விட்டது...
மொத்தமாக 102 விண்ணப்பங்கள்..
அதில் ஒருவர் அமெரிக்கர்..
இதில் முக்கிய விடயம்...
நேர்முகத் தேர்வுக்கு விண்ணப்பதாரிகள் ரகசியமாகவே அழைக்கப்படுவர்...
யார் வருவது போவது என்ற விபரங்கள் யாருக்கும் சொல்லப்பட மாட்டாது...
அதேபோல் நேர்முகத் தேர்வுக்கு வருபவர்கள் - தெரிவாகும் நபர்கள் தமது தொழிலை வீட்டுக்கும் சொல்லக் கூடாது..
இவையெல்லாம் பாதுகாப்பு கருதியாம்..
கடைசியாக 1976 ஆம் ஆண்டே ஒருவர் தூக்கிலிடப்பட்டார்..
“ஹொந்த பப்புவா” ( தமிழில் - நல்ல நெஞ்சன் ) என்ற ஒருவரே தூக்கிலிடப்பட்டார்..
போதைப்பொருள் வழக்கில் குற்றவாளிகளாக மரணதண்டனை பெற்ற 17 பேரின் பெயர்கள் ஜனாதிபதியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
பெண்கள் எவரும் இதற்கு விண்ணப்பித்ததாக தெரியவில்லை...!

Siva Ramasamy

2

அலுகோசு என்ற பெயரை இலங்கையில் அறிமுகப்படுத்தியது யார்?

முருகபூபதி

அண்மைக்காலங்களில் ஊடகங்களில் அடிபடும் ஒரு பெயர் அலுகோசு. மரண தண்டனையை நிறைவேற்றுபவரை இலங்கையில் அலுகோசு என காலம் காலமாக அழைத்துவருகிறார்கள்.
அந்தப்பதவிக்கு நியமிக்கப்படுபவரை தமிழில் தூக்குத்தூக்கி என்று சில ஊடகங்கள் எழுதுகின்றன. சில மாதங்களுக்கு முன்னர் லண்டன் பி.பி.சி.யிலும் தூக்குத்தூக்கி என்றே குறிப்பிட்டார்கள்.
தேனீ இணையத்திலும் அவ்வாறே குறிப்பிடப்பட்டிருக்கிறது.
பல வருடங்களுக்கு முன்னர் (1954 இல்) வெளியான சிவாஜிகணேசன் – பத்மினி – ராகினி – லலிதா – பாலையா – காக்கா ராதாகிருஷ்ணன் நடித்த தூக்குத்தூக்கி படத்தை மூத்த தலைமுறையினர் மறந்திருக்க மாட்டார்கள்.
நீண்ட கோலின் இரண்டு புறமும் பெரிய பிரம்புகூடைகளை கட்டி அதில் பொருட்களை ஏற்றி கழுத்திலே அதனை சுமந்து கூவிக்கூவி விற்பவர்களை இலங்கையில் பார்த்திருப்போம். வடபகுதியில் சில பிரதேசங்களில் சிவியான் அல்லது சிவியார் என்று தூக்கிச்சுமப்பவர்களை அழைப்பார்கள்.
அரச குடும்பத்தினர் அமர்ந்து நகர்வலம் வரும் பல்லக்குகளை தூக்கிச் சுமப்பவர்களும் தூக்குத் தூக்கிகள் என அழைக்கப்பட்டார்களோ என்பதும் சரியாகத்தெரியவில்லை. ஆனால் –
மூத்த எழுத்தாளர் சுந்தரராமசாமி பல்லக்குத்தூக்கிகள் என்ற பெயரில் சிறுகதை எழுதியிருக்கிறார்.
கறுப்புத்துணியினால் மூடிய மரணதண்டனை கைதியின் தலையை தூக்குக்கயிற்றில் நுழைத்து குறிப்பிட்ட தண்டனையை நிறைவேற்றுபவருக்கு இலங்கையில் சூட்டப்பட்ட பெயர்தான் அலுகோசு.
இந்தப்பெயர் எங்கிருந்து வந்தது?

இலங்கையின் கடல் எல்லைக்குள் 15 ஆம் நூற்றாண்டில் அத்துமீறீப்பிரவேசித்த போர்த்துக்கீசர் எமது நாட்டில் தமது சந்ததிகளை மட்டுமல்ல தங்கள் நாட்டின் போர்த்துக்கீச மொழிச் சொற்களையும் விட்டுச்சென்றனர்.

பீங்கான் – அலமாரி – அலவாங்கு – அன்னாசி – ஏலம் – கடுதாசி -கொரடா – கோப்பை – வாங்கு – பாதிரி – பீப்பாய் – வராந்தா – ஜன்னல் – மேஸ்திரி – கதிரை – முதலான சொற்களுடன் அலுகோசு என்ற சொல்லையும் போர்த்துக்கீசர் எமக்கு விட்டுச்சென்றனர்.

ஒல்லாந்தர் கக்கூசு – சாக்கு – துட்டு – தோம்பு – பம்பளிமாசு முதலான சொற்களையும் விட்டுச்சென்றனர்.
போர்த்துக்கீசிய மொழியில் Algoz என்ற சொல் காலப்போக்கில் Alugosu என மருவி அந்தச்சொல்லே சிங்களத்திலும் தமிழிலும் அலுகோசு என்று புழக்கத்தில் வந்துவிட்டது.
Algoz என்பதன் ஆங்கில அர்த்தம் Executioner என்பதாகும். அதாவது மரணசாசனத்தின் சரத்துகளை நிறைவேற்ற அதிகாரம் பெற்றவர் என்பது பொருள்.
ஈராக்கில் இரசாயன ஆயுதங்களைத்தேடிச்சென்ற அமெரிக்கா அங்கு நியமித்த நீதிமன்றம் பின்னர் ஈராக் அதிபர் சதாம் ஹ_சேயினுக்கு தூக்குத்தண்டனை நிறைவேற்றியபொழுது மரணதண்டனை பெற்றவர் உண்மையிலேயே சதாம் ஹ_சேயின்தான் என்பதை முழு உலகிற்கும் காண்பிப்பதற்காக அவரது முகத்தை கறுப்புத்துணியினால் மூடவில்லை.
ஈராக்கில் அந்தத்தண்டனையை நிறைவேற்றியவரை அந்த நாட்டில் (ஈராக்கிய மொழியில்) எந்தப்பெயரில் அழைக்கிறார்கள் என்பதும் தெரியவில்லை.
தமிழிலும் சிங்களத்திலும் பல சொற்கள் எந்த நாட்டிலிருந்து – எந்த மொழியிலிருந்து வந்தது என்பது தெரியாமலேயே புழக்கத்திற்கு வந்துள்ளன. இலங்கையில் பல சிங்கள வார்த்தைகள் அப்படியே தமிழிலும் ஆங்கிலத்திலும் உச்சரிக்கப்படுகின்றன. எழுதப்படுகின்றன.
உதாரணமாக : – மாவத்தை – சதோசா – நிவிநெகும – கிராமோதய – ஜாதிக சம்பத்த….. இப்படி நீண்ட பட்டியலே இருக்கிறது.
இலங்கையில் நீண்டகாலமாக மரணதண்டனை நிறைவேற்றப்படவில்லை. அதனால் குற்றச்செயல்கள் அதிகரித்துவிட்டன என்ற குரல்களும் ஒலித்துவருகின்றன.
தற்காலத்தில் இலங்கையில் போதைப்பொருள் பாவனையும் போதைப்பொருள் கடத்தலும் அதிகரித்துள்ளன. இந்தக்குற்றச்செயலுக்கு சவூதி அரேபியா – சிங்கப்பூர் – மலேசியா -இந்தோனேசியா உட்பட பல நாடுகளில் மரணதண்டனை உட்பட கடூழியச்சிறைத்தண்டனைகளும் வழங்கப்படுகின்றன.
ஆனால் – இலங்கையில் சட்டத்தின் ஓட்டைகளின் ஊடாக பல போதைவஸ்து கடத்தல்காரர்கள் எப்படியோ தப்பிவிடுகிறார்கள். சில அரசியல்வாதிகளும் காவற்துறையிலிருக்கும் சிலரும் அத்தகைய கடத்தல்காரர்களின் பின்னாலிருக்கிறார்கள்.

அவுஸ்திரேலியா போன்ற சில நாடுகளில் மரணதண்டனை ஒழிக்கப்பட்டுவிட்டாலும் – கொடிய குற்றங்கள் செய்தவர்களுக்கு நீண்ட பல வருடகால சிறைத்தண்டனைகளை தீர்ப்பாக வழங்கி சிறையிலிட்டு மில்லியன் டொலர் செலவில் அந்தக்கைதிகள் பராமரிக்கப்படுகின்றனர்.
பல வருடங்களுக்கு முன்னர் அமெரிக்காவில் ஒருவர் உயரமான கட்டிடம் ஒன்றிலிருந்து குதித்து தற்கொலை செய்துகொள்ள முயன்றார். அவரைக்காப்பாற்ற பாதுகாப்புதரப்பினர் விரைந்து வலையை விரித்து காப்பாற்றினார்கள். அந்த வலையிலிருந்த பெரிய துவாரத்தினால் அந்த நபர் தரையில் விழுந்து கையை முறித்துக்கொண்டார்.
தனது கை முறிந்ததற்கு பாதுகாப்புத்தரப்பினர்தான் கரணம் எனச்சொல்லி வழக்குத்தொடர்ந்து நட்ட ஈடு கேட்டாராம் தற்கொலைக்கு முயன்ற அந்த நபர்.
ஆசாமியை சாகவிட்டிருக்கலாம் என்று பாதுகாப்புத்தரப்பினர் தத்தமக்குள் பேசிக்கொண்டிருந்தாலும் ஆச்சரியமில்லை.
தற்கொலைக்கு முயற்சிப்பதும் குற்றச்செயல் என்று சொல்லும் சட்டம்தான் மரணதண்டனையையும் நிறைவேற்றுகிறது. ஆனால் காரணங்கள் வேறு வேறு.
பல வருடங்களுக்கு முன்னர் இலங்கையில் சிங்களப்பிரதேசங்களை கலக்கிக்கொண்டிருந்த கொலை – கொள்ளைகளில் ஈடுபட்ட மருசீரா என்ற கைதி கண்டி போகம்பறை சிறையில் தூக்கிலிடப்பட்டான். இந்த மருசீரா பற்றி ஒரு சிங்களப்படமும் வெளியாகியிருக்கிறது.
அந்தக்கைதியின் மனைவி சமீபத்தில் போகம்பறை சிறைச்சாலைக்குச்சென்று மருசீரா தூக்கில் தொங்கிய தூக்கு மேடையைப்பார்த்துவிட்டு கதறி அழுதாள் என்ற செய்தி ஊடகங்களில் வந்திருக்கிறது.

இலங்கையில் தூக்குத்தண்டனையை முன்னர் நிறைவேற்றியவர் முதுமையினால் ஓய்வுபெற்ற பின்னர் அந்தப்பதவிக்கு சிறைச்சாலைத்திணைக்களம் விண்ணப்பம் கோரிவருகிறது. சிலர் நேர்முகத்தேர்வுக்கு வந்து தெரிவானபின்னர் சொல்லாமல் ஓடிவிட்டனர். அந்தப்பதவி தொடர்ந்தும் வெற்றிடமாகவே இருக்கிறது.
இதுசம்பந்தமாக இணையத்திலும் சிங்கள மொழியில் பாடல்கள் வெளியாகியிருக்கின்றன. http://www.alugosu.com
அலுகோசு என்ற பெயர் அந்தப்பதவிக்கு இருப்பதனால்தான் எவரும் அந்தப்பதவியை ஏற்க முன்வருவதில்லை என்று புதிய செய்தி வெளியாகியிருக்கிறது. இந்நிலையில் தமிழில் தொடர்ந்தும் அலுகோசு பதவியை தூக்குத்தூக்கி என்று சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்.

தூக்குத்தூக்கி வேறு மரணதண்டனைக்கைதியை தூக்கு மேடையில் நிறுத்தி தண்டனை வழங்குபவர் வேறு.
விடுதலைப்புலிகள் பல தமிழ்ச்சொற்ளை அறிமுகப்படுத்தினார்கள். உதாரணமாக பேக்கரிக்கு – வெதுப்பகம்.
மற்றுமொரு இயக்கம் எதிரிகளின் மண்டையில் போடுபவர்களுக்கு மண்டையன் குரூப் என்றார்கள்.
சில வேளை இந்த இயக்கங்களின் உத்தியோகபூர்வமான தமிழ் அறிஞர்களிடம் கேட்டால் மரணதண்டனையை நிறைவேற்றுபவர்களுக்குரிய சரியான தமிழ்ப்பெயரைக் கண்டுபிடித்து தந்திருப்பார்கள்.
எது எப்படியோ இலங்கையில் மட்டுமல்ல இந்தியா உட்பட உலகில் பல நாடுகளிலும் ஆட்சியாளர்களும் ஆயுதம் ஏந்திய இயக்கங்களும் பலருக்கு மரணதண்டனை தீர்ப்பு எழுதியவர்கள்தான்.
அந்தத்தீர்ப்பில் பெரும்பாலும் துப்பாக்கிகளும் குண்டுகளும் எறிகணைகளும்தான் அந்தவேலையை கச்சிதமாகச்செய்வதற்கு உதவின. அப்பாவிகள் அந்தத்தண்டனையை ஏற்று பரலோகம் சென்றார்கள்.
இலங்கையில் அந்த வேலையை செய்தவர்களுக்கு அலுகோசு என்ற பெயர் சூட்டப்படவில்லை என்பது மாத்திரமே உண்மை.
மரணதண்டனையை நீக்கவேண்டும் என்ற குரல் எழுந்திருக்கும் காலத்தில் அலுகோசு என்ற பெயரை நீக்கவேண்டும் என்ற குரலும் எழுந்திருக்கிறது.

1 comment:

  1. Siva ramasamy எழதுவது மிகவும் கவர்ச்சிகரமாக உள்ளது.நான் தவறவிடாமல் வாசித்து வருகிறேன்.
    சிறிதாக ஒன்றை சேர்க்க விரும்புகிறேன்
    வாங்கு,வராந்தா,லாச்சி,உருளோசு,அர்தாப்பு போன்றனதான் ஒல்லாந்தர் காலத்து சொற்களாகும்.

    ReplyDelete

Powered by Blogger.