Header Ads



புத்தளம் மக்களுக்கு துரோகம் செய்யக்கூடாது - ரணிலிடம் றிசாத் காட்டம்

கொழும்பிலுள்ள திண்மக்கழிவுகளை புத்தளம் அறுவைக்காட்டில் கொட்டும் திட்டத்தை உடனடியாக கைவிட வேண்டுமென பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் அமைச்சரவை உறுப்பினர்களிடம் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் வலியுறுத்தியுள்ளார்.

இன்று மாலை நாடாளுமன்ற கட்டிடத்தொகுதியில் பிரதமர் தலைமையில் இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்திற்கு முற்கூட்டியதான தயார்படுத்தும் கூட்டத்தின் போது, பேசிய அவர்,

புதிய தொழில் நுட்பங்கள் விரவியுள்ள தற்போதைய கால கட்டத்தில், கொழும்பு குப்பைகளை புத்தளத்திற்கு கொண்டு சென்று நிறைக்க வேண்டிய எந்த தேவையும் அரசுக்கு இல்லை. நாங்கள் இந்த திட்டத்தை ஒரு மாபியாவாகவே பார்க்கின்றோம். அத்துடன் பகிரங்கமாக இதனை எதிர்க்கின்றோம்.

சீமெந்து கூட்டுத்தாபனம் எனது அமைச்சின் கீழே வருகின்ற போதும் இன்ஸி சீமெந்து நிறுவனத்திற்கு 50 வருட குத்தகைக்கு கொடுக்கப்பட்டுள்ள அறுவக்காட்டு பகுதியில் உள்ள குழிகளை நிரப்புவதற்கான எந்த அனுமதியையும் நாங்கள் வழங்கவில்லை.

நான் இந்த அமைச்சு அமைச்சை பொறுப்பேற்பதற்கு முன்னர் சீமெந்து கூட்டுத்தாபனம் 5141 ஏக்கர் காணியை 50 வருட குத்தகைக்கு ஹொல்சிம் லங்கா லிமிட்டட் (தற்போதைய இன்சீ நிறுவனம் ) இற்கு வழங்கியது. அதற்காக அந்த இடத்தை குப்பைகளால் நிரப்ப வேண்டுமென எந்த தேவையும் இல்லை.

1990 ஆம் ஆண்டு வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட 1 இலட்சம் அகதிகளை புத்தளம் பிரதேசமே தாங்கியது, அகதி மக்களுக்கு இருப்பிட வசதியளித்து, உணவு வழங்கி, வளங்களை பகிர்ந்து கொடுத்த பிரதேசம் புத்தளம்.

நுரைச்சோலை மின் நிலையத்தை மக்களின் எதிர்ப்புகளையும் மீறி முன்னைய அரசு கொண்டு வந்தது . எந்த விதமான பாதிப்பும் ஏற்படாதென அப்போது உறுதியளிக்கப்பட்ட போதும் தற்போது அங்கு வாழும் மக்கள் தொடர்ச்சியான பேராபத்துடன் வாழ்கை நடத்துகின்றனர்.

அது மாத்திரமன்றி அங்கு அமைக்கப்பட்ட சீமெந்து தொழிற்சாலையால் சுற்றுச்சூழல் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியையும் பிரதமரையும் இந்த ஆட்சியையும் கொண்டு வருவதில் 90 சத வீதமான புத்தளம் மாவட்ட மக்கள் பங்களிப்பு நல்கினர். அவர்களுக்கு இந்த துரோகம் செய்ய கூடாது.

இம்முறை வரவு செலவு திட்டத்தில் இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்த 7600 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வருடமும் இப்படித்தானா ஒதுக்கப்போகின்றீர்கள்?. குப்பைகளை மீள் சுழற்சி செய்ய எத்தனையோ நவீன முறைகள் இருக்கும் போது, குப்பைகளை காவிச்சென்று கொட்டுவதற்கு இவ்வளவு தொகைகளை செலவிடுவது ஏன்

உலகில் எந்த நாட்டிலும் இல்லாத நடைமுறையை நீங்கள் அறிமுகப்படுத்துவதன் உள்நோக்கம் தான் என்ன? இது யாரை திருப்திப்படுத்துவதற்காக என்று அமைச்சர் கேள்வி எழுப்பினார்.

No comments

Powered by Blogger.