Header Ads



பல தடைகளின் மத்தியிலே, முன்னேறிய பெண் - இன்று வாத்துக்களின் சொந்தக்காரி

யாழ்ப்பாணத்தில் விடா முயற்சி காரணமாக பெண்ணொருவர் பிரபல வர்த்தகராக மாறியுள்ளார்.

கொக்குவில் பகுதியை சேர்ந்த 29 வயதான ராஜேந்திரம் ஸ்டாலினி என்ற பெண், வாத்துக்களை வளர்ப்பதன் மூலம் சாதனை படைத்துள்ளார்.

போர்ச் சூழல் காரணமாக 11 வயதில் இடம்பெயர்ந்த ஸ்டாலினி வவுனியாவில் வாழ்ந்து வந்துள்ளார்.

எனினும் யுத்தம் முடிவுக்கு வந்துள்ள நிலையில் சொந்த பகுதிக்கு சென்றுள்ளார். அங்கு எந்தவொரு தொழில் வாய்ப்பும் கிடைக்காமையினால் வாத்து பண்ணை ஒன்றை ஆரம்பித்துள்ளார்.

பண்ணைத் தொழில் மூலம் அடைந்த வெற்றியால், யாழ்ப்பாணத்தில் முதல் தர இளம் வர்த்தகராக ஸ்டாலினி மாறியுள்ளார்.

தனது வெற்றிப் பயணம் குறித்து ஸ்டாலினி கருத்து வெளியிடுகையில்,

“நாங்கள் போர் காலத்தில் கொக்குவில் பகுதியை விட்டு சென்றோம். அப்போது எனக்கு 11 வயதாகும். எனினும் எனக்கு ஓரளவு நினைவில் உள்ளது. போர் நிறைவடையும் வரை வவுனியாவில் உள்ள உறவினர் வீட்டிலேயே தங்கியிருந்தோம். பின்னர் மீண்டும் எங்கள் சொந்த பகுதிக்கு திரும்பி வந்தோம். என்னால் கல்வி கற்க முடியாத நிலை ஏற்பட்டது.

இதனால் எனக்கு தொழில் ஒன்றை பெற்றுக் கொள்ள முடியாமல் போது. அதன் பின்னர் கொழும்பிலுள்ள தொழிற்சாலைக்கு சொல்வோம் என என்னை ஒருவர் அழைத்தார். நானும் வேறு வழியின்றி சென்றேன். எனினும் என்னால் அந்த வேலை தொடர்ந்து செய்ய முடியாமல் போனது.

அங்கு இருந்த காலப்பகுதியில் நண்பர் ஒருவரின் உதவியுடன் 7 நாட்களுக்கு மலேசியா செல்ல சந்தர்ப்பம் கிடைத்தது. அங்கு ஒரு இடத்தில் தான் நான் வாத்து வளர்ப்பினை கண்டேன். அதனை பார்த்தவுடன் எனக்கும் விருப்பம் ஏற்பட்டது. மிருகங்கள் மீது எனக்கு உள்ள அன்பே அந்த விருப்பத்திற்றகு காரணமாகும். அழகான வாத்துக்களை காணும் போது இந்த விருப்பம் மேலும் அதிகரித்தது.

வாத்து வளர்க்கும் பகுதிக்கு அடிக்கடி சென்று வந்தோம். எனக்கு ஆங்கிலம் தெரியாது. நண்பர்களுக்கு தெரிந்த ஓரளவு ஆங்கிலத்தில் அங்கிருந்தவருடன் நண்பராகினோம். கொழும்பு தொழிற்சாலையில் வேலை செய்ய முடியாதென்பதனால் அதனை கைவிட்டேன். பின்னர் மீண்டும் சொந்த ஊருக்கு வந்தேன். மலேசியா வாத்து பண்ணையை இங்கும் ஆரம்பிக்கும் எண்ணம் ஏற்பட்டது.

இதனையடுத்து யாழ்ப்பாணத்தில் 700 ரூபா வீதம் இரண்டு ஜோடி வாத்துக்களை வாங்கினேன். எனினும் எனக்கு அதனை வளர்க்க தெரியவில்லை.

மலேசியாவில் உள்ள நண்பருக்கு கடிதம் அனுப்பி அந்த விடயங்களை அறிந்து கொண்டேன். எனினும் எனக்கு ஆங்கிலம் என்பது பெரிய பிரச்சினையாக இருந்தது.

இங்குள்ள தேவாலயம் ஒன்றில் ஆங்கிலம் கற்றுக் கொண்டேன். கற்று கொண்ட ஆங்கில அறிவுடன் நான் வாத்து வளர்ப்பை மேற்கொண்டேன். நான் தற்போது வாத்துகளை விற்பனை செய்கிறேன். முட்டைகளை விற்பனை செய்கிறேன். ஆரம்பத்தில் யாழ்ப்பாண மக்கள் வாத்து முட்டைகளை உணவாக உட்கொள்ள பயந்தனர்.

மலேசியாவில் போன்று விளம்பரப்படுத்த ஆரம்பித்தேன். அதற்கமைய விற்பனைகள் வேகமாக நடைபெற்றது. அதன் பின்னர் நல்ல முறையில் வளர்ச்சி பாதையை அடைந்தேன். மேலும் இதனை அபிவிருத்தி செய்தேன்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

குறித்த பெண் தனது வருமானம் மற்றும் பண்ணையின் புகைப்படங்களை வெளியிட மறுத்துள்ளார்.

மகளிர் தினமான இன்று ராஜேந்திரம் ஸ்டாலினியின் கடுமையான முயற்சி குறித்து தென்னிலங்கை ஊடகம் ஒன்று இந்தத் தகவல்களை வெளியிட்டுள்ளது.

No comments

Powered by Blogger.