Header Ads



ஹுனுப்பிட்டிய பள்ளிவாசலுக்கு, களனி பிரதேச செயலகத்தின் பச்சைத் துரோகம் - உதவுமாறு ஷிராஸ் நூர்தீனின் உருக்கமான கோரிக்கை

சிரேஷ்ட சட்டத்தரணி ஷிராஸ் நூர்தீன்,,  தான் முகங்கொடுத்துக் கொண்டிருக்கும் சமூகப் பிரச்சினையொன்றை கவலையோடு பகிர்ந்து கொண்ட சம்பவமொன்றை எனது முக நூல் நண்பர் பயாஸ் அப்துல் ரசாக் எழுதியிருக்கிறார் வாசித்துவிட்டு முடிந்தவர்கள் உதவுங்கள்

"வத்தளை ஹுனுப்பிட்டி ஏழை முஸ்லிம்கள் வாழ்கின்ற பிரதேசங்களில் ஒன்று. சில வருடங்களுக்கு முன்னர் அந்த மக்களினால் சிறுகச் சிறுக சேகரிக்கப்பட்ட பணத்தைக் கொண்டு ஒரு பள்ளிவாசல் நிர்மாணிக்கப்பட்டது. அந்தப்பகுதியில் பெரும்பான்மையின மக்கள் செறிந்து வாழ்ந்த காரணத்தால் அதனை ஜும்மாஹ் மஸ்ஜித் என்று அவர்கள் குறிப்பிடவில்லை. சாதாரணமான தக்கியா என்று அரச ஆவணங்களில் பதிந்தார்கள். இந்தப் பள்ளிவாசலுக்கு எதிராக அங்கிருந்த விகாரையின் பௌத்த தேரர் கிளர்ந்தெழுந்தார். அவர் சிலரை கூட்டு சேர்த்துக் கொண்டு பள்ளிவாசலுக்கு எதிரான காரியங்களை செய்யத் துவங்கினார். அவருக்கு ஆதரவாக களனி பிரதேச செயலகமும் அந்தப்பகுதி போலீஸாரும் துணை நின்றனர்."

"ஒருநாள் ்ளிவாசலின் நிர்வாக சபையினருக்கு ஒரு கடிதம் வந்தது. அதனை களனி பிரதேச செயலகம் அனுப்பியிருந்தது.அனுமதியில்லாமல் கட்டப்பட்ட கட்டிடம் இதுவென்றும், அப்பகுதி மக்களின் அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் காரியங்களை இந்தப் பள்ளிவாசலில் முன்னெடுக்கப்படுகிறதென்றும் அதனால் உடனே இந்தப் பள்ளிவாசலை தகர்த்து விடுமாறும் அந்தக் கடிதம் கட்டளையிட்டது. அதனை வாசித்த நிர்வாக சபையினர் அச்சத்தில் உறைந்துப் போனார்கள். திகைத்து நின்றார்கள்.அவர்களுக்கு எதிராக கைக்கோர்த்திருக்கும் கூட்டணியுடன் மோதும் வலிமையற்ற அவர்கள் என்ன செய்வதென்று தெரியாமல் குழப்பத்துடன் என்னைத் தேடி வந்தார்கள். போலீஸ் சமரச விசாரணைக்கு அந்த மக்களை அழைத்திருந்த நாளில் நானும் எனது ஜுனியர்களும் நிர்வாக சபை அங்கத்தவர்களுடன் போலீஸுக்கு சென்றோம். போலீஸுக்கு அப்பகுதி விகாராதிபதியுடன் வேறு சிலரும் வந்திருந்தார்கள். வந்திருந்தவர்கள் அந்தப் பள்ளிவாசலை மூடிவிடுமாறு நம்மை நிர்ப்பந்தித்தனர். களனி பிரதேச செயலகமும், போலீஸாரும் இணைந்து விளையாடும் விளையாட்டை நான் புரிந்துக் கொண்டேன். பிரச்சினையை நீதிமன்றத்துக்கு கொண்டு சென்றால் அதில் என்னால் வெல்ல முடியும் என்று நான் தீர்மானித்தேன். அதனால், அநீதமான அவர்களின் கோரிக்கையை நான் ஏற்றுக்கொள்ள மறுத்து விட்டேன். பிரச்சினை சமாதானமாக தீர்க்கப்படாத காரணத்தால் போலீசார் நீதிமன்றில் பள்ளிவாசலுக்கு எதிராக வழக்கை தாக்கல் செய்தனர். வழக்கு நீதிமன்றில் அழைக்கப்பட்ட நாளில் இந்த ஏழைகள் சார்பாக நாம் ஆஜராகினோம். வழக்கு விசாரணைக்கும் அழைக்கப்படும் ஒவ்வொரு தவணையிலும் சுமார் ஐந்து பௌத்த தேரர்களுடன் பேரினவாதிகளில் சிலர் நீதி மன்றத்துக்கு வருவார்கள். நானும் எனது கூட்டணியும் சுமார் மூன்று வருடங்களாக வழக்கை ஏற்று நடாத்தினோம்."

"நீதிமன்ற தீர்ப்பு எப்படியிருந்தது?"

"ஒரு பெண் நீதிபதியின் முன்னிலையில் வழக்கு தொடராக விசாரிக்கப்பட்டது. அவர் பௌத்த மதத்தை சார்ந்தவர். நீதிமன்றில் பௌத்த தேரர்களுடன் களனி பிரதேச சபையும், போலீஸாரும் ஓரணியில் நின்றனர். இவர்களின் கூட்டணியின் முன் முஸ்லிம்கள் பலவீனமாக தெரிந்தார்கள். நீதிபதி பௌத்த மதத்தை மதிப்பவராகத் தெரிந்தார். தேரர்களுக்கு மரியாதை செய்தார். அமைதிக்கு குந்தகமாக செயல்படுபவர்கள் என்று அறிமுகப்படுத்தப்பட்ட முஸ்லிம்களுடன் அவர் கொஞ்சம் கடுமையாக நடந்துக் கொண்டார்."

"பலவீனமான இந்த ஏழை மக்களுக்கு ஆதரவாக நமது அரசியல் தலைவர்கள். இயக்க தலைமைகள் வந்திருந்தார்களா..?

"இல்லை......முஸ்லீம் சமூகத்தில் செல்வாக்கு செலுத்தும் தகுதியில் இருந்த யாருமே இவர்களை எட்டியும்பார்க்கவில்லை. பள்ளிவாசல் அமைந்திருக்கும் பிரதேசம் கம்பஹா தேர்தல் வளையத்தினுள் வருகின்ற காரணத்தால் தேர்தல் வாக்குகளை இலக்காக கருதி செயல்படுகின்ற கொழும்பு அரசியல்வாதிகளில் யாருமே இவர்களில் அக்கறை கொள்ளவில்லை. ஏழைகளாக இருக்கின்ற காரணத்தால் இஸ்லாமிய இயக்கங்களின் தலைமைகளும் இவர்களை எட்டியும் பார்க்கவில்லை."

"நானும் எனது ஜுனியர்களும் மிகக்கடுமையாக உழைத்தோம். அந்த விகாராதிபதியின் பின்புலத்தில் பேரின சக்திகள் துணை நின்ற காரணத்தை அறிந்தவுடன் நான் ஒரு காரியம் செய்தேன்." என்று சொல்லிவிட்டு என்னைத் தீர்க்கமாகப் பார்த்த ஷிராஸ் நூர்தீன் தொடர்ந்து "எனது நண்பர் மைத்ரி குணரத்னவை இந்த வழக்கில் என்னுடன் துணையாக ஆஜராகுமாறு அழைத்தேன். அவரும் வந்தார். நான் கூறியபிரகாரம் செயல்பட்டார். " என்றவர் முகத்தில் பிரகாசம் பரவ "அல்ஹம்துலில்லாஹ்........அதன் பின்னர் நான் எதிர்பார்த்த பலன் கிட்டியது"

"என்னதான் நடந்தது?"

"நானும் மைத்ரியும் காரசாரமாக வாதாடினோம். எங்கள் தரப்பு நியாயங்களை எடுத்து சொன்னோம். ஆவணங்களை முறையாக சமர்பித்தோம். இறுதியில் எங்களது கோரிக்கையில் நியாயம் இருப்பதை உணர்ந்துக் கொண்ட நீதிமன்றம் வழக்கை தள்ளுபடி செய்து பள்ளிவாசலுக்கு சாதகமாக தீர்ப்பளித்தது.2015 இல் வழக்கில் நாம் வென்றோம்.

"பிரச்சினை நல்லபடியாக தீர்ந்தது?......இல்லையா?"

"அதுதான் இல்லை........"

"நீதிமன்றத்தின் தீர்ப்பு தங்களுக்கு சாதகமாக அமைந்ததைக் கண்ட முஸ்லீம் மக்கள் மிகவும் மகிழ்ந்துப் போனார்கள். சுதந்திரமாக தங்களது மார்க்க கடமைகளை செய்யத் துவங்கினார்கள். மனத்தில் வஞ்சகம் கொள்ளாமல் அந்தப் பகுதி மக்களுடன் ஒன்றாக கலந்துறவாடினார்கள். நோன்பு இஃப்த்தார்களை பிரமாண்டமாக செய்தார்கள். தேசிய சுதந்திர விழாவை தேசியக் கொடியேற்றி அரசியல் பிரமுகர்களை வரவழைத்துக் கொண்டாடி மகிழ்ந்தார்கள்."
ஆனால்
"நெஞ்சில் வன்மம் கொண்டிருந்த பௌத்த தேரரும் அவரது கூட்டத்தினரும் தருணம் கனியும் வரை காத்திருந்தனர். மூன்று வருடங்களின் பின்னர் அவர்கள் எதிர்பார்த்துக் காத்திருந்த நேரம் கனிந்து வந்திருக்கிறது."

"என்ன நடந்தது?"

"இந்த மக்கள் பணத்தை சேகரித்து பள்ளிவாசலுக்கு அடுத்து இருக்கின்ற நிலம் ஒன்றை விலைக்கு வாங்கியிருக்கிறார்கள். பள்ளிவாசலுடன் அந்த நிலத்தை இணைத்திருக்கிறார்கள். அதன் பின்னர் இருக்கின்ற கட்டிடத்தை விஸ்தரிக்கும் நோக்குடன் ஒரு வரைபடத்தை தயாரித்திருக்கிறார்கள். அதற்கு முறையான அனுமதியைப் பெற்றுக்கொள்ளும் நோக்கில் பிரதேச செயலகத்தில் பதிந்திருக்கிறார்கள். முஸ்லீம் அரசியல்வாதிகள் இல்லாத காரணத்தால் இவர்கள் சிங்கள உறுப்பினர் ஒருவரின் உதவியை நாடி அவர் துணையுடன் இதனை முன்னெடுத்திருக்கிறார்கள். உடனே பிரதேச செயலகம் இவர்களிடம் அந்த வரைபடத்தை கட்டிட விஸ்தரிப்பு என்ற பெயரில் இல்லாமல் புதிதான வரைபடமாக சமர்ப்பிக்குமாறு கேட்டிருக்கிறார்கள். இவர்களும் அப்படியே செய்திருக்கிறார்கள். செயலகமும் அனுமதி அளித்திருக்கிறது. அதன் பின்னர் இவர்கள் திருத்த வேலைகளை முன்னெடுத்து காரியங்களை செய்யத் துவங்கியிருக்கிறார்கள். திருத்தவேலைகளில் பாதி முடிவடைந்த நிலையில் பள்ளிவாசலுக்கு திடீரென ஒரு கடிதம் வருகிறது. அதனை களனி பிரதேச செயலகம் அனுப்பியிருக்கிறது. அதில், இந்தப்பள்ளிவாசலின் காரணமாக அப்பகுதி மக்களுக்கு இடையூறு நிலவுவதாக தங்களுக்கு முறைப்பாடு வந்திருப்பதாகவும், அதனால் அவ்விடத்தில் பள்ளிவாசல் ஒன்றை அமைக்க அனுமதி தர முடியாதென்றும், பள்ளிவாசலை முழுதாக தரைமட்டம் செய்து விட்டு புதிய கட்டிடத்தைக் கட்டுமாறும் கேட்டிருக்கிறது. "

"நல்லவேளையாக நிர்வாக சபையினர் என்னிடம் ஆலோசனை கேட்டு வந்தார்கள். நான் ஆவணங்களை பரிசோத்தித்துப் பார்த்தேன். அவற்றில் தவறெதுவும் இல்லை. ஆனால், பிரதேச செயலகம் அனுப்பியிருக்கும் கடிதத்தில் வினோதமான கோரிக்கைகள் சில இருக்கின்றன. மூன்று வயதுக்கும் ஆறு வயதுக்கும் உட்பட்டவர்கள் மாத்திரமே அந்தப் பள்ளிவாசலுக்கு வர முடியும். பதினெட்டு வயதுக்கு மேற்பட்டவர்கள் அங்கு எக்காரணம் கொண்டும் வரக் கூடாது. பள்ளிவாசலை தரை மட்டம் செய்து விட்டு மீண்டும் புதிய வரைபடம் ஒன்றை பிரதேச செயலக அனுமதிக்கு சமர்பிக்கப்படல் வேண்டும். அந்தப் பிரதேசத்தில் யாராகிலும் ஒருவர் இந்தப் பள்ளிவாசல் நிர்மாண வேலைகளுக்கு ஆட்சேபனை தெரிவித்தால் அதனை ஏற்றுக்கொள்ளும் களனி பிரதேச செயலகம் பள்ளிவாசல் நிர்மாணிக்கப்படுவதை தடை செய்யும்."

"அநியாயமான துரோகம் . பள்ளிவாசல் நிர்வாக சபையில் இருக்கும் மக்கள் ஏழைகள் என்பதாலும், சமூகத்தில் செல்வாக்கு செலுத்தும் நிலையில் அவர்கள் இல்லாத காரணத்தாலும் இப்படியான நிபந்தனைகளை களனி பிரதேச செயலகம் முன்வைத்து விளையாடுகிறது."

"இந்தப் பிரச்சினையை எப்படி அணுகுவது?"

"இஸ்லாமிய தாவா அமைப்புக்களும், இஸ்லாமிய இயக்கங்களும், முஸ்லீம் அரசியல் தலைமைகளும் இந்த அப்பாவி மக்களுக்கு துணையாக களத்தில் நிற்க முன்வந்தால் நீதிமன்றில் செய்ய வேண்டிய காரியங்களை நானும் எனது சகாக்களும் வெற்றிகரமாக செய்து முடிப்போம்.இன்ஷா அல்லாஹ்."

ஒரு சமூகம் சார்ந்த பிரச்சினையில் சிரேஷ்ட சட்டத்தரணி ஷிராஸ் நூர்தீனுடன் கைக்கோர்த்து செயல்பட தயாரானவர்கள் ஹுனுப்பிட்டிய பள்ளிவாசல் நிர்வாக சபையினருடன் இணைந்து தோள் கொடுங்கள்.

அல்லாஹ்வின் திருப்தியை மாத்திரம் இலக்காகக் கொண்ட சமூக நலன் விரும்பிகளுக்கு. இம்மையிலும் மறுமையிலும் வெற்றிபெற ஹுனுப்பிட்டிய தக்கியா ஒரு வாய்ப்பினை உருவாக்கி தந்திருக்கிறது. (Bony Pakeer Ali- Dipitigoda Mosque- Hunupitiya- 0777 900232 - இதுதான் நிர்வாக சபை தலைவரது தொடர்பிலக்கம்.)

நண்பர்களுக்கு பணிவான வேண்டுகோள்: கிடைத்திருக்கும் அரிய வாய்ப்பை பயன்படுத்தி வெற்றி பெறுவோம். இன்ஷா அல்லாஹ். ஒன்றிணையுங்கள்! இயலுமானவரை இந்தப்பதிவை பகிர்ந்து மக்கள் செய்தியறிய உதவுங்கள்.

ஆக்கம்- பயாஸ் அப்துல் ரஸாக்


No comments

Powered by Blogger.